Published:Updated:

க்ளிப்... பட்ஸ்... ஹோம் மேக்ஸ்... ஆப்பிள் வழியில் செல்கிறதா கூகுள்?

க்ளிப்... பட்ஸ்... ஹோம் மேக்ஸ்... ஆப்பிள் வழியில் செல்கிறதா கூகுள்?
க்ளிப்... பட்ஸ்... ஹோம் மேக்ஸ்... ஆப்பிள் வழியில் செல்கிறதா கூகுள்?

க்ளிப்... பட்ஸ்... ஹோம் மேக்ஸ்... ஆப்பிள் வழியில் செல்கிறதா கூகுள்?

தமிழ்நாட்டில் வேண்டுமானாலும் ஆள்பவர் மாறிக்கொண்டே இருக்கலாம். ஆனால், உலக அளவில் கடந்த 10 வருடங்களாக நம்மை ஆட்சி செய்வது ஸ்மார்ட்போன்கள்தான். வாரத்திற்கு ஓர் அரசர் என்கிற ரீதியில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அரியணை ஆட்டத்தில் (அதாங்க, கேம் ஆஃப் த்ரோன்ஸ்) ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வகை ஆட்டத்திற்கு இதுவரை வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த கூகுள், சென்ற வருடம் களத்தில் இறங்கி அடித்தது. அதுதான் கூகுள் பிக்ஸல்! ஸ்மார்ட்போன் வல்லுநர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன், ஃபிளாக்க்ஷிப் மொபைலாக கொண்டாடப்பட்டது.

செப்டம்பர் மாதத்தை வழக்கம் போல் ஆப்பிள் ஆக்கிரமித்து விட, சென்ற வருடம் போல் அக்டோபர் மாதத்தைத் தனதாக்கி கொண்டுள்ளது கூகுள். அக்டோபர் 4ம் தேதி, கூகுள் பிக்ஸல் 2 மொபைல் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகக் கூகுள் தெரிவித்தவுடன் கூடவே, ஆப்பிள் போல பல புதிய கேட்ஜெட்களும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் பொய்யாக்காமல் ஆப்பிள் ரசிகர்களுக்குக் கிலி ஏற்படுத்தும் வகையில் சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறது கூகுள். அறிமுக விழாவில் ஆப்பிள் போல் இல்லாமல், இங்குப் பெண்களுக்கு நிறைய முன்னுரிமை அளிக்கப்பட்டது. கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்துபவராகவும், செயல் விளக்கம் அளிப்பவர்களாகவும் அவர்களைக் காண முடிந்தது. ஆங்காங்கே நம்மூர் கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகளை சீண்டுவது போல, ஆப்பிள் நிறுவனத்தையும் சீண்டினார்கள். 

முதலில் பேசிய கூகுளின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, பிரம்மாண்டமாக AI மற்றும் மெஷின் லேர்னிங் கொண்டு பயனீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூகுள் முயன்றியிருப்பதாக தெரிவித்தார். இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கேட்ஜெட்களிலும் இந்தத் தொழில்நுட்பம் மேலோங்கி இருக்கும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முக்கிய கேட்ஜெட்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டன.

கூகுள் மினி (Google Mini)

புது வரவு என்று முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் மினி. ஒரு சோப்பு டப்பாவின் அளவிலேயே இருக்கும் இது ஒரு ஸ்பீக்கர். வித்தியாசமாக, இதில் எந்த பட்டன்களும் கிடையாது, டச் ஸ்கிரீனும் கிடையாது. மேலே இருக்கும் நான்கு LED விளக்குகள் அந்த ஸ்பீக்கர் தற்போது என்ன செய்கிறது என்ற தகவலை நமக்கு அளிக்கின்றன. வால்யூம் பட்டனிற்கு அதன் இடது மற்றும் வலது ஓரங்களில் தட்ட வேண்டும். பாஸ் அல்லது பிளே செய்ய நடுவில் டேப் செய்ய வேண்டும். நம் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் போன்று இதிலும் உண்டு. அதனுடன் உரையாடி, நம் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அதற்கேற்ற பாடல்களை ஒளிபரப்பும்.

மூன்று விதமான நிறங்களில் வரவிருக்கிறது இந்தக் கூகுள் மினி. இந்த வருடம் வரவிருக்கும் கேட்ஜெட்களின் நிறங்கள் அனைத்தும் நம் வீடுகளில் அன்றாட உபயோகப்படுத்தும் பொருட்களின் வண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும் என்று வேறு ஆச்சர்யமூட்டினர். ஏழு நாடுகளில் வெளியாகவிருக்கிறது இந்தக் கூகுள் மினி. ஆனால், இந்த மினி இந்தியாவில் அடுத்த வருடம்தான் வரும் என்பது சோக செய்தி.

கூகுள் ஹோம் மேக்ஸ் (Google Home Max)

ஏற்கெனவே இருக்கும் கூகுள் ஹோம் பாகுபலி 1 என்றால், இது பாகுபலி 2! அதை விட இருபது மடங்கு ஒலிக்கக் கூடிய இது பல அசத்தல் அம்சங்களைக் கொண்டுள்ளது. உபயம்: AI மற்றும் மெஷின் லேர்னிங்கால் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் சவுண்ட் (Smart Sound) தொழில்நுட்பம். சூழ்நிலைக்கேற்ப ஒலியின் அளவு, காலநிலைக்கேற்ப பாடல்கள் தேர்வு என்று அசத்துகிறது ஹோம் மேக்ஸ். உதாரணமாக, காலையில் மென்மையான பாடல்கள் ஒலிபரப்புவது, வீட்டில் மிக்ஸி ஓடத் தொடங்கினால், தன்னுடைய வால்யூமை அதிகரிப்பது எனச் சிந்தித்து செயல்படும் திறன், அதுமட்டுமல்லாது, மேக்ஸ் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கேற்ப ‘சவுண்ட் பேலன்ஸ்’ சுயமாகச் செய்து கொள்வது என அசத்தல் வசதிகளுடன் வரவிருக்கிறது ஹோம் மேக்ஸ்.

போட்டோ டெக்ஸ்ட்: AI மற்றும் மெஷின் லேர்னிங்கால் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் சவுண்ட் (Smart Sound) தொழில்நுட்பம், சூழ்நிலைக்கேற்ப ஒலியின் அளவு, காலநிலைக்கேற்ப பாடல்கள் தேர்வு என்று அசத்துகிறது.

கூகுள் பிக்ஸல்புக் (Google Pixelbook)

ஆப்பிளின் மேக்புக்கிற்கு போட்டியாக வந்திருக்கிறது இந்த பிக்ஸல்புக். வெறும் 10மிமீ அகலமே இருக்கும் இந்த லேப்டாப் கம் டேபின் எடை வெறும் ஒரு கிலோ மட்டுமே. இதை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம். ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்துவிட்டால் 10 மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம். உங்கள் லேப்டாப்பில் இன்டர்நெட் தொடர்பு இல்லையென்றால் உங்கள் பிக்ஸல் மொபைலில் இருந்து வைஃபை மூலமாக இன்டர்நெட் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் புத்திசாலியாக இருக்கிறது இதனுள் இருக்கும் AI. இதற்கு இன்ஸ்டன்ட் டெதெரிங் என்று பெயர். கூடுதல் சிறப்பாக இதுவரை மொபைல் போன்களில் மட்டும் இருந்து வந்த கூகுள் அசிஸ்டன்ட் இப்போது இதிலும் உண்டு. அதை அழைப்பதற்கு என்று பிரத்தியேக பட்டன் வேறு. பிக்ஸல்புக்கின் சார்ஜரை நீங்கள் உங்கள் பிக்ஸல் போனிற்கும் பயன்படுத்தலாம்.

பிக்ஸல்புக் அம்சங்கள்

 • 12.3-அங்குல டிஸ்பிளே, குவாட் HD திரை, 235 ppi பிக்ஸல் டென்சிட்டி
 • 16 ஜிபி ரேம்
 • 512GB SSD
 • Core i5 அல்லது Core i7 ப்ராசஸர்
 • 10-மணி நேர பேட்டரி, USB-C சார்ஜர்
 • இன்ஸ்டன்ட் டெத்தரிங்

கூகுள் பிக்ஸல்புக் பேனா (Pixelbook Pen)

பிக்ஸல்புக்கை டேபாக பயன்படுத்தும் போது உதவும் கருவியாக இருக்கப்போகிறது இந்த பிக்ஸல்புக் பேனா. திடீர் என்று திரையில் இருக்கும் எதிலாவது சந்தேகம் என்றால், அந்த இடத்தை இந்தப் பேனாவால் வட்டமிட்டால் போதும்., அசிஸ்டன்ட் உடனே உயிர்பெற்று அதற்கான விளக்கத்தை அளிக்க முயலும். இந்தப் பேனாவை சாதாரண பேனாவை போல் டேபில் எழுதப் பயன்படுத்தலாம். பேப்பரில் பேனாவை பிடித்து எழுதும் உணர்வைத் தருவது போல் இதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்ஸல் 2 / கூகுள் பிக்ஸல் 2 XL

நிகழ்வின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இந்த இரண்டும்தான். ஆண்ட்ராய்டு ஓரியோ மென்பொருளில் இயங்கும் இந்த இரண்டு மொபைல்களும் ஆப்பிளின் புது வரவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. பிக்ஸல் 2 மொபைலிற்கு 5.5 இன்ச் டிஸ்பிளே, பிக்ஸல் 2 XL மொபைலிற்கு 6 இன்ச் டிஸ்பிளே எனக் கலக்கலான வடிவமைப்பில் வந்துள்ளது.

கிட்டதட்ட மொபைலின் விளிம்பு வரை செல்லும்  பிளாஸ்டிக் OLED டிஸ்பிளே, வாட்டர் ப்ரூஃப், AR மற்றும் VR சப்போர்ட் செய்யும் 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, போர்ட்ரைட் மோடில் அசத்தும் AI, கூகுள் அசிஸ்டன்ட்டை அழைக்க எளிய வழி (Active Edge) என பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. இருவேறு வடிவில், அளவில் வந்தாலும், இரண்டு போன்களுக்கும் வேறுபாடு என்று பார்த்தால் ஸ்கிரீன் அளவும், பேட்டரியும் மட்டும்தான். இதர விஷயங்கள் அனைத்தும் இரண்டிற்கும் பொதுவானதே. பழைய போன்களில் இருந்து தகவல்களை புது பிக்ஸல் போனிற்கு மாற்ற வெறும் பத்து நிமிடங்கள் போதும். இதை விளக்க, பழைய போனாக ஐபோனை காட்டியது அரங்கைக் கரவொலி மற்றும் சிரிப்பொலிகளால் நிரம்பிச் செய்தது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் போன்று இல்லாமல், இரண்டு மொபைல்களும் ஒரே வசதிகளைக் கொண்டிருப்பது நிச்சயம் இரண்டு விதமான விமர்சனங்களை பெரும்.

இரண்டிற்கும் பொதுவான அம்சங்கள்

 • ப்ராசஸர்: குவால்காம் ஸ்னாப் டிராகன் 835
 • மெமரி: 4 ஜிபி ரேம்
 • ஸ்டோரேஜ்: 64 ஜிபி அல்லது 128 ஜிபி
 • பின்புற கேமரா: 12.2 MP
 • முன்புற கேமரா: 8 MP
 • வீடியோ: பின்புற கேமராவில் 1080p 30, 60 அல்லது 120 FPS
 • ஆக்ட்டிவ் எட்ஜ்
 • USB-C, வயர்லெஸ் சார்ஜ் இல்லை
 • ப்ளூடூத் 5.0
 • 18W பவர் அடேப்டர் மற்றும் USB-C ஹெட்போன் டாங்கிள்

கூகுள் பிக்ஸல் 2 XL அம்சங்கள்

 • பேட்டரி: 3520 mAh
 • ஸ்கிரீன்: 6-அங்குல, 2880 x 1440 pOLED, 100% DCI-P3 பாதுகாப்பு, 100,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ
 • அளவு: 6.2 x 3.0 x 0.3 அங்குலங்கள்
 • எடை: 175 கிராம்

கூகுள் பிக்ஸல் 2 அம்சங்கள்

 • பேட்டரி: 2700 mAh
 • ஸ்கிரீன்: 5-அங்குல, 1920 x 1080 AMOLED, 95% DCI-P3 பாதுகாப்பு, 100,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ
 • அளவு: 5.7 x 2.7 x 0.3 அங்குலங்கள்
 • எடை: 143 கிராம்

கூகுள் டேட்ரீம் வியூ (Google Daydream View)

சென்ற வருடம் கூகுள் அறிமுகப்படுத்திய டேட்ரீம் VR ஹெட்செட் தான் சற்றே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னர் பிக்ஸல் மொபைலுடன் மட்டுமே பயன்படுத்த முடிந்த இதை தற்போது சாம்சங் கேலக்ஸி S8, சாம்சங் நோட் 8 மற்றும் எல்ஜி V30 மொபைல்களுடன் பயன்படுத்தலாம். சிறப்பம்சமாக VR டிஸ்பிளேயில் அணிந்து கொண்டிருப்பவர்கள் பார்க்கும் காட்சியை மற்றவர்களும் திரையில் காணலாம் (Cast VR Screen). பழைய மாடலை விட அதிக வசதிகள், அணிபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வடிவமைப்பு, மூன்று நிறங்கள், 250 VR தலைப்புகள் எனச் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.

கூகுள் பிக்ஸல் பட்ஸ் (Pixelbuds)

கூகுள் அசிஸ்டன்ட்டை நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிவிடும் முனைப்புடன் இருக்கிறது கூகுள். இதற்கு உதவும் வகையில் வந்திருக்கிறது இந்த பிக்ஸல் பட்ஸ். இதைக் காதில் மாட்டிக் கொண்டால், மொபைல் போனை எடுக்காமலேயே அசிஸ்டன்ட்டை அழைக்கலாம். பாட்டுப் போட சொல்லலாம், நோட்டிபிகேஷன்களை படித்துக் காட்ட சொல்லலாம். டேப் செய்து பாடல்களை பாஸ் அல்லது பிளே செய்யலாம். முத்தாய்ப்பாக இதுனுள்ளேயே AI சக்தியுடன் இயங்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட் மென்பொருளும் இடம்பெற்றிருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் பேசுவதை, ஆங்கிலத்தில் அல்லது விரும்பிய மொழியில் மொழிபெயர்த்துக் கேட்கலாம். இவை அனைத்தும் உடனுக்குடனே என்பது தனிச் சிறப்பு. ஆப்பிளின் ஏர்பாட்களுக்கு பதில் சொல்லும் விதமாக இதைக் களமிறக்கியிருக்கிறது கூகுள்.

கூகுள் கிளிப்ஸ் (Google Clips)

அறிமுகப்படுத்தப்பட்ட கேட்ஜெட்களிலேயே ஒரு புதிய முயற்சி என்றால் அது கூகுள் கிளிப்ஸ் கேமரா தான். முழுக்க முழுக்க AI மற்றும் மெஷின் லேர்னிங் பலத்துடன் சுயமாகச் சிந்தித்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை விரும்பும் இடத்தில் மாட்டி விட்டால் போதும், அந்த அறையில் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடிக்கிறது, வீடியோ காட்சிகளாக எடுத்துத் தருகிறது. சுயமாகச் சிந்தித்து காட்சிகளை உணர்ந்து எடுப்பதால், இதை யாரும் அருகில் இருந்து இயக்கத் தேவையில்லை. குழந்தையின் முதல் நடை, வளர்ப்பு பிராணியின் குறும்புத் தனம் என எல்லா முக்கிய காட்சிகளை படம்பிடிக்க நீங்கள் கேமரா பின் இருக்க வேண்டியதில்லை. அந்தக் காட்சிகளை அருகில் இருந்து ரசிக்கலாம். நீங்களும் அந்தக் காட்சியில் ஓர் அங்கமாக இருக்கலாம். கூகுள் கிளிப்ஸ் எடுத்த ஒரு வீடியோவை கூட நல்ல தரத்தில் வேண்டும் இடத்தில் எடிட் செய்து படங்களாக மாற்றி கொள்ளலாம்.  

சாமானியர்கள் ஆப்பிளைப் பற்றி பொதுவாக ஒரு கருத்தை கூறுவார்கள்.

“முதல்ல ஐபோன் வாங்கினேன் சார், அப்பறம் மேக்புக், ஐபேட்னு எல்லாம் வாங்க ஆசை வந்திருச்சு!” அது தான் ஆப்பிளின் வெற்றி. எதோ ஒன்றைப் பயன்படுத்தினாலும், அதற்கான சரியான சூழல் அமைக்க, அல்லது அதை முழுமையாகப் பயன்படுத்த மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வாங்கத் தூண்டும்.” அப்படி ஒரு இடத்தைப் பிடிக்க கூகுள் முழு முனைப்புடன் செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், ஆப்பிள் போல எலைட் வாடிக்கையாளர்கள் பிராண்டாக மாறி விடக் கூடாது என்பதிலும் கூகுள் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. கூகுளின் தற்போதைய கேட்ஜெட்கள் மற்றும் அதன் விலைகள் இதையே பறைசாற்றுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு