Published:Updated:

5,000 ரூபாயிலிருந்து 15,000 வரை... எந்த அமேஸான் ஸ்பீக்கர் பெஸ்ட்? #AmazonEcho

5,000 ரூபாயிலிருந்து 15,000 வரை... எந்த அமேஸான் ஸ்பீக்கர் பெஸ்ட்? #AmazonEcho
5,000 ரூபாயிலிருந்து 15,000 வரை... எந்த அமேஸான் ஸ்பீக்கர் பெஸ்ட்? #AmazonEcho

மொபைல் போன்களுக்கு அடுத்தகட்டமாக, டெக்னாலஜி உலகில் ஆதிக்கம் செலுத்தவிருப்பது IoT கேட்ஜெட்ஸ்தான். அதில் ஒன்றுதான் ஸ்மார்ட் ஸ்பீக்கர். கூகுள், ஆப்பிள், அமேஸான் ஆகிய மூன்று நிறுவனங்களுமே தங்களுக்கென பிரத்யேக வாய்ஸ் அசிஸ்டன்ட்களை வைத்திருக்கின்றன. அவற்றோடு இணைந்து செயல்படுவதுதான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி. அமெரிக்கா, UK, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து, தற்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டன அமேஸான் எக்கோ ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள். இந்தியாவில் மொத்தம் மூன்று ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது அமேஸான். மூன்றிலும் என்ன ஸ்பெஷல்? 

அமேஸான் எக்கோ டாட்:

எது கேட்டாலும் சட்டெனப் பதில் சொல்லும், டிஜிட்டல் அசிஸ்டன்ட்தான், இந்த எக்கோ டாட். பவர் கனெக்ஷன் கொடுத்துவிட்டு, மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்கும் அலெக்ஸா ஆப் உடன் வைஃபை மூலம் இணைத்துவிட்டால் போதும். எக்கோ ஸ்பீக்கர்கள் பயன்படுத்த ரெடி. 7 மைக்ரோபோன்கள் இருப்பதால், அறையின் எந்த மூலையில் இருந்தும் 'அலெக்ஸா' என அழைத்தால் போதும். "யெஸ் பாஸ்" எனப் பயன்படுத்தத் தயாராகிவிடும்.

இருப்பதிலேயே சிறிய மற்றும் விலை குறைவான ஸ்மார்ட் ஸ்பீக்கர் இதுதான். இவற்றிடம் என்னென்ன கேள்விகள் கேட்கலாம்? எது வேண்டுமானாலும் கேட்கலாம். "இன்னைக்கு மழை பெய்யுமா பெய்யாதா?" என ஆங்கிலத்தில் கேட்டால், உடனே அன்றைய வானிலை அறிக்கையை வாசித்து பதில் சொல்லிவிடும். கிரிக்கெட் ஸ்கோர் வேண்டுமா? ஹ்ம்ம்.. "அலெக்ஸா... வாட் இஸ் தி ஸ்கோர் நவ்?" என்றால் போதும்; உடனே ஸ்கோர்போர்டை ரிப்போர்ட் செய்துவிடும் அலெக்ஸா. இப்படிச் சின்னசின்னக் கேள்விகளில் தொடங்கி, செய்திகள் கேட்பது, மியூஸிக் ஸ்ட்ரீமிங், டாக்ஸி புக் செய்வது என எத்தனை டாஸ்க் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அத்தனையையும் அசராமல் செய்துமுடிக்கும் அலெக்ஸா.

மற்ற இரண்டு மாடல்களை விடவும் மிகவும் சின்ன ஸ்பீக்கர் இது. எனவே, அவற்றில் இருப்பது போல இதில் Woofer கிடையாது. ட்வீட்டர் மட்டுமே இருக்கும். எனவே அதிகமான அளவிற்கு சத்தத்தை எதிர்பார்க்க முடியாது; அதனால், தேவைப்பட்டால் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ளலாம். விலையும், அளவும் சிறிதாக இருப்பது ப்ளஸ். ஆனால் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களை இணைத்தால் மட்டுமே நல்ல சவுண்ட் கிடைக்கும் என்பது மைனஸ்.

அமேஸான் எக்கோ:

ஒரு முழுமையான ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கிறது அமேஸான் எக்கோ. 10,000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் இதை  வாங்கலாம். கேள்வி பதில் விளையாட்டுக்காக மட்டுமன்றி, டி.வி.யை ஆன் செய்வது, ஏ.சி-யைக் குறைப்பது. லைட் வெளிச்சத்தைக் குறைப்பது என முழுமையான வாய்ஸ் அசிஸ்டன்ட்டாக இருப்பதுதான் இதன் சிறப்பு. அவையனைத்தும் இருந்தால் மட்டுமே இதை  முழுமையாகப் பயன்படுத்த முடியும். இல்லையெனில் சாதாரண `ஓகே கூகுள்' வசதி போலத்தான் தோன்றும். 

5.8 இன்ச் உயரம் கொண்ட இதில், 0.6" ட்வீட்டர் மற்றும் 2.5" வூஃபர் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே, எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் இல்லாமலே தரமான ஒலியைப் பெறமுடியும். கறுப்பு, க்ரே, வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. விலையும் அதற்கேற்ற தரமும் ப்ளஸ். எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களை இணைக்க முடியாதது மைனஸ்.

எக்கோ ப்ளஸ்:

இந்த மூன்று மாடல்களில் விலை அதிகமான வேரியன்ட் இது. ஸ்பீக்கர் விஷயத்தில் எக்கோவை ஷார்ப்பாக இருக்கிறது எக்கோ ப்ளஸ். இதற்காக 2.5” வூஃபர் மற்றும் 0.8" ட்வீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் அளவிலும் எக்கோவை விட அதிகம். மொத்த உயரம் 9.3". வீட்டின் மற்ற டிவைஸ்களோடு தொடர்பு கொல்வதற்கு எதுவாக பில்ட் இன் ஹப் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக வீட்டில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட் டிவைஸ்களையும் நொடியில் கனெக்ட் செய்துவிடலாம். எனவே, ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆப் இன்ஸ்டால் செய்து, செட்டப் செய்ய வேண்டிய அவசியம் இதில் கிடையாது. மற்ற இரண்டு மாடல்களில் இந்த ஸ்மார்ட் ஹோம் ஹப்தான் இதன் ப்ளஸ். நேர்த்தியாக இல்லாத டிசைன் மற்றும் அளவு மைனஸ்.

இந்தியாவில் ஹிட் ஆகுமா?

எல்லா வாய்ஸ் அசிஸ்டன்ட்களிலும் இருக்கும் ஒரு பிரச்னை, இந்தியர்களின் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதுதான். கூகுளின் 'ஓகே கூகுள்' வசதியில் பலரும் இந்தப் பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். எக்கோவில் அந்தப் பிரச்னை இருக்கக் கூடாது என்பதற்காகக் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்கிறது அலெக்ஸா டீம். இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் 'அலெக்ஸா'வை இன்னும் மெருகேற்றியிருக்கிறது அமேஸான்.

எப்படி வாங்குவது?

மற்ற பொருள்களைப் போல, உடனே எக்கோ ஸ்பீக்கர்களை வாங்கிவிட முடியாது. அமேஸான் நிறுவனம் தரும் மின்னஞ்சல் அழைப்பு இருந்தால் மட்டுமே வாங்க முடியும். இதற்காக முதலில் அமேஸான் தளத்துக்குச் சென்று, 'Send Invitation Link' ஆப்ஷன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அமேஸான், எக்கோ ஸ்பீக்கரை வாங்கச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பும். பின்னர்தான் பணம் செலுத்தி வாங்கமுடியும். பதிவு செய்த மறுநாளே இந்த அழைப்பு வந்துவிடுகிறது. அக்டோபர் 30-ம் தேதி முதல் இவற்றுக்கான ஷிப்பிங் தொடங்கும்.

விலை:

எக்கோ டாட்: ₹ 4,499
அமேஸான் எக்கோ:  ₹ 9,999
எக்கோ ப்ளஸ்: ₹ 14,999

இதுதான் நிஜ விலை. ஆனால், அறிமுக சலுகையாக அனைத்து மாடல்களின் விலையையும் குறைத்திருக்கிறது அமேஸான். அதன்படி, 

எக்கோ டாட்: ₹ 3,149
அமேஸான் எக்கோ:  ₹ 6,999
எக்கோ ப்ளஸ்: ₹ 10,499

இத்துடன், ஒரு வருடத்துக்கான அமேஸான் ப்ரைம் மெம்பர்ஷிப்ப்பும் இலவசமாகக் கிடைக்கும். இந்தியாவில் இ-காமர்ஸ் என்ற விஷயத்தைத் தாண்டி, மற்ற துறைகளிலும் கவனம் செலுத்திவருகிறது அமேஸான். ப்ரைம் வீடியோ, விரைவில் வரவிருக்கும் ப்ரைம் மியூஸிக் போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அந்த வரிசையில் அலெக்ஸா ஸ்பீக்கர்களையும் இறக்கியிருப்பதன் மூலம், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கிறது அமேஸான். 

அடுத்த கட்டுரைக்கு