Published:Updated:

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரி விதிக்கப்படுமா?! #DigitalCess

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரி விதிக்கப்படுமா?! #DigitalCess
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரி விதிக்கப்படுமா?! #DigitalCess

செப்டம்பர் 11... அமெரிக்க மக்கள் மறக்கவே முடியாத ஒரு நாள்; இந்தியர்களுக்கும் அப்படி ஒரு நாளை கடந்த ஆண்டு உருவாக்கிக்கொடுத்தார் நம் பாரதப் பிரதமர் மோடி. அது நவம்பர் 8. "பிரதமர் 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகிறார்", "நிதியமைச்சர் இன்று 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்" என ஏதேனும் செய்திகள் வந்தாலே, நவம்பர் 8-ன் இரவு நினைவுக்கு வரத்தொடங்கிவிடுகிறது. திடீரென, ஒரே நாளில் 'செல்லாது' என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள், அதைத் தொடர்ந்து ஏ.டி.எம்.,களில் மக்கள் பட்ட அவஸ்தை, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட மக்கள் பணமின்றி நின்றது, வீட்டின் விசேஷங்களுக்குப் பணம் எடுக்கக்கூட வங்கிக்கும், அலுவலகங்களுக்கும் அலைந்தது, வரிசையில் நிற்கும்போது உயிரிழந்த மக்கள் என நினைத்துப் பார்த்தாலே, துயரம் கொள்ளச்செய்யும் தினங்கள் அவை. இறுதியில் ரிசர்வ் வங்கியே அந்தத் திட்டம் தோல்வி என ஒப்புக்கொண்டது வேறுகதை.

இப்படி அரசால் பணமதிப்பிழப்பு செய்யப்பட பின்பு, அரசாலும், அமைச்சர்களாலும் அதிகம் சொல்லப்பட்ட அறிவுரை "டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் செய்யுங்கள்" என்பதுதான். அதிலும் நிறைய சிக்கல்கள், குளறுபடிகள் இருந்தாலும் தற்போது பலர் டிஜிட்டல் வழிகளில்தான் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அதற்கும் முட்டுக்கட்டை போடவிருக்கிறது மத்திய அரசு. விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பிற்காக, "Digital Cess" என்னும் வரியை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருவதுதான் அது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், இ-வாலட்களின் பயன்பாடு, இணைய வங்கி சேவைகளின் பயன்பாடு போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான மோசடி புகார்களும் 2015-ஐ, விடவும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நிதிநிறுவனங்களின் இணையதளங்கள், சர்வர்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய அரசு. இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாதம் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது, பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில்தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதலாக வரி விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள், பல்வேறு யோசனைகளை அரசுக்கு அளித்துள்ளனர். சைபர் கிரைம்களைக் கணிப்பதற்கான மென்பொருளை உருவாக்குவது குறித்து புலனாய்வுத்துறையும், மக்களுக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், இணைய பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக, பணப்பரிவர்த்தனைகளுக்கு ஸ்வச் பாரத் வரி போலவே ஒரு வரியும் வசூலிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சகம் யோசனை தெரிவித்துள்ளது. சைபர் கிரைம்களைக் கையாள்வதற்காக தனி ஆய்வகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தத் தகவலை தி பிரின்ட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அரசு தரப்பிலிருந்து, இதுகுறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டெபிட் கார்டுகள், பணப்பரிமாற்றத்திற்கான சர்வீஸ் சார்ஜ், வணிகர்களுக்கான கட்டணங்கள், வங்கிக் கட்டணங்கள் எனப் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அரசு தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்துவருகிறது. இந்நிலையில், இதுபோன்ற வரிகள் வசூலிக்கப்பட்டால் அது மக்களுக்குச் சுமையாக மாறிவிடும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வோரின் எண்ணிக்கையும் குறையும். மீண்டுமொரு சிக்கலை அரசு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.