Published:Updated:

இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey

இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey

கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ் ஸ்வீப், உல்ட்டா ஹிட் என அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவார்கள். அப்படி அமேஸான் அடித்திருக்கும் ஒரு அடிதான் அமேஸான் கீ.

அமேஸான் கீ:

இதில் கிளவுட் கேமரா ஒன்றும் ஸ்மார்ட் லாக் ஒன்றும் இருக்கும். வீட்டிலிருக்கும் வைஃபை வழியாக இந்த கேமரா இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கேமராவும், ஸ்மார்ட்லாக்கும் ZIGBEE என வயர்லெஸ் புரோட்டோகால் வழியாகத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும். ஸ்மார்ட்லாக்கை வீட்டின் மெயின் டோர்-ல் பொருத்திவிட வேண்டும். 

இப்போது அமேஸானில் ஆர்டர் செய்யும்போதே In-Home delivery ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆர்டர் தயாராகி வீட்டுக்கு வந்தவுடன், கொரியர் பாய் பார்கோடை ஸ்கேன் செய்வார். உடனே, கிளவுட் கேமராவுக்கு இந்தத் தகவல் போகும். கேமரா தகவல்களை சரிபார்த்துவிட்டு, ரெக்கார்டிங்கை தொடங்கும். அதன்பின், ஸ்மார்ட்லாக்குக்கு “கதவைத் திற” என்ற கட்டளை கிளவுட் வழியாக போகும். அதே சமயம் கொரியர் பாய்க்கும் இந்தத் தகவல் ஆப் வழியாக போகும். ஸ்மார்ட் லாக் தயாரானவுடன், கொரியர் பாய் ஆபி-ல் ஒரு ஸ்வைப் செய்தால் போதும். “திறந்திடு சீசேம்” என்பது போல கதவு திறக்கும். ஆர்டர் செய்திருக்கும் பொருள் எவ்வளவு பெரியதோ, அந்த அளவுக்கு மட்டும் கதவைத் திறந்து பார்சலை உள்ளே வைத்துவிட்டு கதவை மூடிவிடுவார் கொரியர் பார். இவை அனைத்தையும் கேமரா ரெக்கார்டும் செய்யும்; லைவ் ரிலேயும் செய்யும். வாடிக்கையாளர் எந்த இடத்தில் இருந்தாலும் மொபைல் வழியே வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்க்கலாம். இதுதான் அமேஸான் கீ. 

அமேஸான் எக்கோ போன்ற இதர புராடக்ட்களுடன் இந்த கிளவுட் கேமராவை இணைத்துக்கொள்ளலாம். வாய்ஸ் கமாண்ட் மூலமே சில செயல்களை செய்துகொள்ளலாம் என்கிறது அமேசான். தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்தப் புராடக்டை இப்போது விற்பனை செய்கிறது அமேசான். நம் வீட்டுக்குள் ஒரு கேமரா, எப்போது வேண்டுமென்றாலும் வேண்டியதை ரெக்கார்ட் செய்யும் என்பது பிரைவஸியை பாதிக்கும் விஷயமில்லையா? அதனால், தங்களை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் கொடுக்கிறோம் என அமேசான் நினைக்கிறது.

அமேஸான் கீ மூலம் தனது ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை அதிகரிக்க நினைக்கிறது அமேஸான். வீட்டில் ஆள் இல்லாதபோது பொருள்களை டெலிவரி செய்ய வழியிருந்தால் இன்னும் நிறைய பேர் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவார்கள் என்பதுதான் பிளான். இதற்கு முன், இதே காரணத்துக்காக இன்னொரு விஷயம் செய்தது அமேசான். நம் வீட்டுக்கருகில் சூப்பர் மார்க்கெட்டை டெலிவரி பாயிண்ட் ஆக நாம் தேர்வு செய்யலாம். அமேசான் பொருளை அந்தக் கடையில் டெலிவரி செய்யும். நாம் வீடு திரும்பும்போது அந்தக் கடைக்குச் சென்று பொருளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது அவ்வளவு பெரிய ஹிட் ஆகவில்லை. அந்த முயற்சியில் இப்போது வந்திருக்கிறது அமேஸான் கீ. அமெரிக்காவில் முக்கியமான 27 நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு இந்தச் சேவை உண்டு.

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு AI கேமராவை அறிமுகம் செய்தது. அதைப் பற்றி கருத்துச் சொன்ன எலான் மஸ்க், “This doesn’t even ‘seem’ innocent" என்றார். அது அமேசான் கீ-ல் இருக்கும் கிளவுட் கேமராவுக்கும் பொருந்தும்.