Published:Updated:

ஆன்லைனை முந்தும் மொபைல் ரீட்டெயில் கடைகள்... காரணங்கள் என்ன? #VikatanExcluisve

ஆன்லைனை முந்தும் மொபைல் ரீட்டெயில் கடைகள்... காரணங்கள் என்ன? #VikatanExcluisve
ஆன்லைனை முந்தும் மொபைல் ரீட்டெயில் கடைகள்... காரணங்கள் என்ன? #VikatanExcluisve

தீபாவளி சீசனுக்குக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம், அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும் மாறி மாறி `கிரேட் சேல்ஸ்` அறிவித்துக்கொண்டனர். அதிரடி விலைகுறைப்பு செய்தனர். ஆன்லைன் வர்த்தகம் மீதான இந்திய மக்களின் மோகம் கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தும் என்றே சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை பெரிதாக எதுவும் நடந்துவிட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக மொபைல் போன்களின் வர்த்தகம். சில மொபைல் கடைகள் மேலும் தங்களின் கிளைகளை விரிவுபடுத்தியிருக்கின்றன. ஆன்லைனை விட விலை அதிகமாக இருந்தாலும் கடைகளுக்குச் செல்லும் கூட்டம் குறையவில்லை.
இதுதொடர்பாகக் களத்தில் இறங்கி விசாரித்தோம். ஆன்லைன் வர்த்தகத்துக்கும் கடைகளுக்கும் இடையிலான சில வித்தியாசங்களை நம்மால் உணர முடிந்தது.

இருவகை வாடிக்கையாளர்கள்:

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கடைக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள், உறவினர்கள் ஆன்லைன் விமர்சனம் என்று பெரிதாக ஆய்வுசெய்து குறிப்பிட்ட மாடல் மொபைல்தான் வேண்டும் என்று திட்டமிட்டுவருபவர்கள். இன்னொருவர், கடைக்குள் நுழைந்து ‘நல்ல மாடல் போன் ஒன்றை காட்டுப்பா…’ என்று சேல்ஸ்மேனிடம் கேட்பவர்கள். இதில் முதல் வகையானவர்கள் பெரும்பாலும் பேரம் பேச மாட்டார்கள். ஆனால், இரண்டாமவர்கள், `விலை கொஞ்சம் குறைவா காட்டுங்க தம்பி…` என்பார்கள். இவர்களுக்கு ஆன்லைனில் மொபைல் வாங்குவதைப் பற்றி எந்த ஐடியாவும் இருப்பதில்லை. ஆனால், முதல் வகையினர், நல்ல ஆஃபர் வந்தால் ஆன்லைன் பக்கம் தாவிவிடும் வாய்ப்புண்டு

தவணை முறை வசதி:

கடைகளுக்கு மொபைல் வாங்க வருபவர்களில் சரிபாதி நபர்கள், தவணை முறையில் மொபைல் வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள். தற்போது சந்தையில், குறைந்த விலையில் எளிய தவணை முறையைக் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள், பஜாஜ், கேப்பிடல் ஃபஸ்ட், ஹோம் கிரிட் போன்ற கம்பெனிகள்தான். பண்டிகைக் காலங்களில் சொல்லிவைத்தார் போல ’ஜீரோ சதவிகித தவணை முறைச் சலுகை’யை அறிமுகம் செய்வார்கள். அந்த நேரம், பணம் இல்லாமல் மொபைலை வாங்கி பையில் வைத்துக்கொண்டு செல்லலாம். இதற்கு அப்படியே நேர் எதிரானது ஆன்லைன் தவணை முறை. ஐடி கார்டு, வங்கிகணக்கு இருந்தால் போதும் கடைகளில் மொபைல் வாங்கிவிடலாம். ஆனால், ஆன்லைனில் தவணைமுறையில் மொபைல் வாங்க ‘கிரெடிட் கார்டு’ அவசியம். இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், கடைகளை நோக்கி வருகிறார்கள்.

(இதில் சில கோல்மால்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஆசாமிகளுக்குக் கடைகளைத்தான் தேர்வுசெய்கின்றனர். 20 ஆயிரம் ரூபாய் மொபைலை வாங்கும் ஓர் ஆசாமி தவணை செலுத்தவில்லை என்று வைத்துக்கொள்வோம். தவணைமுறையில் கார், ஸ்கூட்டர், பைக் வாங்குபவர்கள் சரியாக தவணை செலுத்தவில்லை என்றால் அந்தப் பொருளைத் தூக்குவதைப் போல, மொபைலை தூக்க முடியுமா? அல்லது 20 ஆயிரம் ரூபாய்க்காக கடன் கொடுத்த நிறுவனம் அந்த ஆசாமியின் மீது வழக்குத் தொடுக்குமா? 

வாரன்டி, பேக்கிங், ரீப்ளேஸ்மென்ட் மீதான பயம்:

ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து அந்தப் பொருள் சரியாக பேக் செய்து வராவிட்டாலோ, அல்லது டேமேஜ் இருந்தாலோ உடனே ரீப்ளே செய்துவிட முடியாது. அந்தத் தயக்கம் மக்களுக்கு இருக்கிறது. ஆனால், கடைகளில் அப்படியில்லை. கண் முன் மொபைல் இருக்கும். டெமோ மொபைலை கையில் கொடுத்துவிடுவார்கள், அதனை யூஸ் செய்து பார்த்த பின்னரே வாங்கி பையில் வைத்துக்கொண்டு வரலாம். இன்னும் சில கடைகளில் ஸ்பெஷல் சலுகையாக நூறு நாள்கள் அதிரடி ரீப்ளேஸ்மென்ட் வசதியும் இருக்கிறது. 

கடை மீதான நம்பிக்கை:

ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதை விட, தெரிந்த நபர் வைத்திருக்கும் மொபைல்கடையில் வாங்கலாமே என்ற எண்ணம் மிக முக்கியக் காரணம், மக்கள் மொபைல் வாங்குவதற்கு கடைக்குள் சென்றாலே, அன்போடு வரவேற்று, வந்திருப்பவரின் பட்ஜெட் அறிந்து நல்ல மாடல் மொபைல்களை அவர்கள் முன்னால் அடுக்கிவிடுவார் அந்த கடைக்காரர். மேலும், இந்த கடையில் வாங்கினால்தான் ராசி, மொபைல் பல ஆண்டுகள் உழைக்கும் என்ற எண்ணம் இன்னும் நம் மக்களிடம் இருக்கிறது. இந்த எண்ணத்தை ஆன்லைனில் கடை விரித்திருப்பவர்கள் பிடிப்பதற்கு ஒரு யுகம் கூட ஆகலாம்.

பிரபல தனியார் மொபைல் கடைக்கு மொபைல் ஒன்றை வாங்க வந்திருந்த கோபியிடம் பேசினோம். “நான் இதுவரை ஐந்து போன் மாத்திவிட்டேன். ஒரு முறை கூட ஆன்லைனில் வாங்கியதில்லை. யாரோ தெரியாத ஊர்க்காரனுக்கு நம்ம காசைக் கொடுப்பதைவிட உள்ளூர்காரனுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். அதுபோக, மொபைல் வாங்கும்போது, பேரம் பேசி நூறு ரூபாய் குறைக்க முடியும். இலவசமாக மொபைல் கவர், ஸ்கிராச் கார்டு, போன்றவற்றை வாங்கிக்கொள்ள முடியும். ஆன்லைனில் அது முடியாது. எல்லாவற்றையும் விட கடைக்கு வந்து நூற்றுக்கணக்கான போன்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு ஒரு போனை தேர்ந்தெடுக்கும் மன நிறைவுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது…’’ என்றார் புன்னகையோடு.