Published:Updated:

“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..!” - #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி

“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..!” -  #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி
“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..!” - #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி

“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..!” - #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி

“மொபைல் எல்லாம் நல்லாதானிருக்கு... ஆனால் சர்வீஸ் செண்டருக்கு போனாதான் பகீர்னு இருக்கு. மொபைல் ரிவ்யூல இதையும் சேர்த்துக்கோங்க பாஸ்”

ஒரு கட்டுரைக்கு வந்த வாசகர் கமெண்ட் இது. உண்மைதான். எந்த ஒரு மின்னணு சாதனமும் காரணமேயின்றி பழுதாகலாம். உற்பத்தியாகும் மொபைலில் 5% சதவிகித மொபைல்கள் பழுதோடுதான் சந்தைக்கு வருகின்றன. இதைக் குறைப்பதற்கு ஆகும் செலவை விட, அதற்கு மாற்று மொபைல் கொடுப்பதே குறைவான செலவு என்பதால், மொபைல் நிறுவனங்களும் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. அந்த 5% சதவிகித மொபைலில் ஒன்று நம்மிடம் வந்துவிட்டால் சர்வீஸ் சென்டர்தான் ஒரே வழி.

சென்னையிலிருக்கும் அதிகார்பூர்வ மொபைல் சர்வீஸ் சென்டர்கள் எப்படியிருக்கின்றன எனப் பார்க்க முடிவு செய்தேன். கைவசமிருந்த ஒன் ப்ளஸ் 5 அப்டேட்டில் பிரச்னை செய்ய, ஒன் ப்ளஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்றேன். ஒன் ப்ளஸ் 5 வெளியானபோது சென்னையில் பல இடங்களில் எக்ஸ்க்ளூசிவாக விற்கப்பட்டன. ஆனால், அதற்கு சென்னையிலிருப்பது ஒரே ஒரு சர்வீஸ் சென்டர்தான். எக்மோரில் இருக்கிறது. 

வரவேற்பரையில் 20க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால், சில நாற்காலிகளே அங்கிருந்தன. ஃப்ரண்ட் டெஸ்க்கில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். அவரிடம் “டோக்கன் எங்க எடுக்கணும்” என்றேன். 

“டோக்கன்லாம் இல்லை. உங்க பேர் சொல்லுங்க” - எனக் கேட்டு ஒரு குட்டி நோட்டில் எழுதுக்கொண்டார். அதன்பின்னர்தான் பலர் வந்து பெயர் கொடுத்தார்கள். அந்த ஒருவரே ஒவ்வொருவராக பிரச்னை என்னவென்றுக் கேட்டு, அதற்கு கணினியில் எண்ட்ரி போட்டு, மொபைலை வாங்கி உள்ளே கொண்டு போய் கொடுக்கிறார். ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்தது  5 நிமிடங்களாவது ஆகும். அங்கு 10 பேர் இருந்தாலே, நமது ஒரு மணி நேரம் ஸ்வாஹா. சில சமயம், நோட்டில் இருக்கும் பெயர்களை அவர் வரிசைமாற்றிக்கூட அழைக்கிறார். பிடித்தப் பெயர் என்றால் முன்னுரிமைப் போல.

ஆப்பிள், லெனோவோ மற்றும் ரெட்மி சர்வீஸ் சென்டர்கள் இப்படி இல்லை. அங்கே டோக்கன் சிஸ்டம் உண்டு. குறைந்தது 15 பேர் உட்கார வசதி உண்டு. 2 முதல் 3 பேராவது வாடிக்கையாளரைச் சந்தித்து பிரச்னைகளைக் கேட்கிறார்கள். ஒன் ப்ளஸ் மட்டுமே இப்படி.

நம்மிடம் மொபைலை வாங்கிக்கொண்டு காத்திருக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து நாம் மீண்டும் சென்றுக் கேட்டதும்,

“அப்சர்வேஷன்ல இருக்கு சார். சாஃப்ட்வேர் அப்டேட் பண்ணிருக்கோம். வெயிட் பண்ணுங்க” என்றார்.

அந்தச் சமயம் வெளியான அப்டேட்டில் ஏதோ பக்(Bug). அந்த ஒரே காரணத்துக்காக பலர் அங்கு வந்திருந்தனர். மீண்டும் அரை மணி நேர வெயிட்டிங். இப்போதும் சரியாகவில்லை.

“ஃபோன் கொடுத்துட்டு போங்க சார். ரெடியானதும் கால் செய்கிறோம்” என்றார் அந்தப் பெண். கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒன் ப்ளஸ் நிறுவனத்திடம் ஆன்லைன் ட்ராக்கிங் கிடையாது. குறுஞ்செய்தி மூலம் எந்த அப்டேட்டும் வராது. அவர்களாக கால் செய்ய வேண்டும். ஆனால், சில நாட்கள் ஆகியும் அழைப்பு வராதததால் நானே கால் செய்தேன். 10 முறை ரிங் ஆகியும் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் சர்வீஸ் சென்டருக்கு விஜயம்.

அப்போதுதான் கவனித்தேன். இருக்கும் ஒரே ஒரு ஊழியரும் பிஸியாக இருப்பதால், அழைப்புகளை எடுப்பதில்லை. அவரிடம் சர்விஸ் ஸ்லிப் தந்து “என்ன ஸ்டேட்டஸ்” என்றேன். காத்திருக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து “இன்னும் ரெடியாகல” என்றார்.

“ஒவ்வொரு தடவையும் நேர்ல வர முடியுமா? நீங்க ஏன் கால் பண்ணி அப்டேட் செய்யல” என்றேன்.

“நீங்க ஃபோன் பண்ணி கேளுங்க” என்றார்.

அதற்கு முன், அங்கிருந்தே 2 முறை அழைத்திருந்தேன். அவர் அதை எடுக்கவில்லை. அதைச் சொன்னதும் என்ன சொல்வதென்று புரியாமல் அடுத்த வாடிக்கையாளரிடம் “சொல்லுங்க சார். என்ன பிராப்ளம்” என்றார்.

ஒன் ப்ளஸ் இணையதளத்தில் ஒரு ஹெல்ப்லைன் எண் இருந்தது. அதற்கு அழைத்து பிரச்னையை சொன்னேன். ரசீது எண் வாங்கிக்கொண்டார்கள். தவறுக்கு மன்னிப்பு கோரினார்கள். அவர்களிடம் இருந்த அந்த customer friendly குணம், சென்னையில் இருந்தவர்களிடம் இல்லை. அதையும் சொன்னேன். அடுத்த நாள் சர்வீஸ் சென்டரில் இருந்து அழைத்தார்கள். விரைவில் மொபைல் சரியாகும் என்றார்கள். அதன் பின்னும் அவர்கள் அழைக்கவில்லை. அடுத்த 10 நாள்கள் மொபைல் ரெடி ஆகவேயில்லை. மதர் போர்டு பிரச்னை என்றும், பார்ட் ஸ்டாக் இல்லையென்றும் காரணங்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். கிட்டத்தட்ட 22 நாள்கள் ஆனபின் தான் மொபைல் திரும்ப என் கைக்கு வந்தது.

அங்கு வந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேசினேன்.

“என் வீடு பூந்தமல்லி சார். பில் தொலைஞ்சிடுச்சு. ஒன் ப்ளஸ் 5 மார்க்கெட்டுக்கு வந்தே ஒரு வருஷம் முடியல. ஆனால், பில் இருந்தாதான் எடுத்துப்போம்னு அலைய விட்டாங்க. இப்ப வாங்கிக்கிட்டாங்க. ஆனா, எப்போ போன் ரெடியாகும்னே தெரில. ஒவ்வொரு தடவையும் பூந்தமல்லில இருந்து வந்துட்டுப் போறேன்” என்றார்.

மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒன் ப்ளஸ் சர்வீஸ் சென்டரின் பிரச்னைகள் இவைதாம்:

1) மொபைல் ஸ்டேட்டஸ் அறிய, சரியான வசதிகள் இல்லை. ஒவ்வொருமுறையும் நேரில் செல்ல வேண்டுமென்பது நடக்காத காரியம்
2) விற்பனையில் சக்கைப் போடு போடும் ஒரு மொபைலுக்கு, சென்னையில் ஒரே ஒரு சர்வீஸ் சென்டர்தான். 
3) முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்பதை உறுதிப்படுத்த இயலாத சிஸ்டம்.
4) இருக்கும் ஊழியர்களும் Customer -friendly ஆக இல்லை. வெளிப்படைத்தன்மையும் இல்லை. இருக்கும் வாடிக்கையாளர்களை எதாவது சொல்லி அலுவலகத்தில் இருந்து அனுப்புவதிலே குறியாக இருக்கிறார்கள்.

ஆண்ட்ராய்டு மொபைல் சர்வீஸ் ஆண்ட்ராய்டு மொபைல் சர்வீஸ் சென்டரில் உங்கள் அனுபவம் எப்படி?
எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை
மோசமான அனுபவம்
நம்ம ஊரில் இதெல்லாம் சகஜம் தானே!
இன்னும் நிறைய மாறனும்
Survey maker

இதையெல்லாம் உடனடியாக ஒன் ப்ளஸ் சரி செய்ய வேண்டும். இல்லையேல், நீண்டகாலத்தில் பிராண்டின் பெயர் அடிவாங்கும். #NeverSettle என்பதுதான் ஒன் ப்ளஸ்ஸின் விளம்பர ஸ்லோகன். அவர்கள் மொபைல் வாங்கியவர்களை செட்டில் ஆகவே விட மாட்டார்கள் போல.

அடுத்த கட்டுரைக்கு