Published:Updated:

மந்திரி தந்திரி - 8 !

கேபினெட் கேமராவிகடன் டீம், படங்கள்: கா.முரளிஓவியம்: ஹாசிப்கான், எம்.ஜெயசூர்யா

திருவண்ணாமலை, செய்யாறு ஒன்றியத்தில் ஒரு பள்ளி. அதன் சத்துணவுக்கூடப் பணியாளர்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அப்போது 'கிணிங்... கிணிங்...’ என பெல் அடித்தபடி வந்து நிற்கிறது ஒரு சைக்கிள். அந்தச் சைக்கிள் கேரியரில் பெரிய கூடை, ஹேண்டில்பாரில் தொங்கவிடப்பட்ட பைகள்... அனைத்திலும் காய்கறிகள் நிரம்பி வழிகின்றன. சைக்கிளில் வந்தவர், அந்தச் சத்துணவு மையத்துக்கு என ஒதுக்கப்பட்ட காய்கறிகளை எடுத்துக் கொடுக்கிறார். அடுத்த பள்ளியை நோக்கிப் பறக்கிறது அந்தக் காய்கறி சைக்கிள்.

காலம் மாறுகிறது... காட்சியும் மாறுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா மேடை. அங்கு மாணவர்களுக்கு இன்முகத்துடன் லேப்டாப் வழங்கிக்கொண்டிருக்கிறார், அன்று சைக்கிளில் காய்கறி சப்ளை செய்த நபர். அவர்... தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்!

அரசியலில் சுப்பிரமணியனின் வளர்ச்சி 'சதுரங்க வேட்டை’ வியூகங்களுடன் அரங்கேறிய சாகசம். சக ரத்தத்தின் ரத்தங்களைத் தாஜாசெய்தும் தட்டிவிட்டும் அமைச்சராக உயர்ந்தார் சுப்பிரமணியன். ஜகஜ்ஜால வித்தை காட்டி தகவல் தொழில்நுட்பத் துறையையே கைப்பற்றிவிட்டாலும், இன்னும் 'டச் மொபைல்’ பயன்படுத்த அமைச்சர் திணறுவதுதான் பல்லேலக்கா காமெடி!

மந்திரி தந்திரி - 8 !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட முக்கூரில் பிறந்த சுப்பிரமணியனுக்கு, ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. பள்ளிக்குச் செல்லாமல் அப்பாவுக்கு உதவியாக வாத்து மேய்க்கத் தொடங்கினார். செய்யாறு பகுதியிலேயே பெரிய ஏரியான வாழ்குடை ஏரிக்கு தினமும் வாத்துகளைக் கொண்டுபோய் மேய்த்துவிட்டு வருவார். அந்த மேய்ச்சல் வேலைகளுக்கு நடுவில் ஒரு சுபயோக சுபதினத்தில் சத்துணவு மையங்களுக்கு கான்ட்ராக்ட் எடுத்திருந்த ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார் சுப்பிரமணியன். செய்யாறு யூனியன் சேர்மன் அருளானந்தம் அ.தி.மு.க-வில் செல்வாக்கோடு வலம்வந்தவர். அவரிடம் எடுபிடியாக ஒட்டிக்கொண்டு அவருடனான நெருக்கத்தையும் விசுவாசத்தையும் அதிகமாக்கிக்கொண்ட சுப்பிரமணியன், நாளடைவில் அவரின் தயவில் சத்துணவு மையங்களுக்கு காய்கறி கொடுக்கும் கான்ட்ராக்டராக உயர்ந்தார். அப்படியே மனைவி விஜய சாமுண்டீஸ்வரிக்கும் சத்துணவு மையத்திலேயே அமைப்பாளர் வேலையை வாங்கினார். ஒருகட்டத்தில் செய்யாறு ஒன்றியம் முழுவதுமே சத்துணவு மையங்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த சுப்பிரமணியன் கையில், எகிடுதகிடாக கரன்சி களமாடியது.

அ.தி.மு.க மீது அபிமானம் இல்லாவிட்டாலும், அருளானந்தத்துடன் ஒட்டிக்கொண்டிருந்ததால் அ.தி.மு.க உறுப்பினர் ஆனார் சுப்பிரமணியன். அருளானந்தம் செய்யாறு அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஆனபோது, தன் விசுவாசி வலதுகரமான சுப்பிரமணியனுக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார். அரசியலில், சுப்பிரமணியனுக்கு இதுதான் முதல் போஸ்டிங். அடுத்து ஒன்றியச் செயலாளர்.

2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் செய்யாறு யூனியன் சேர்மன் பதவியை எட்டிப்பிடிக்கிறார் சுப்பிரமணியன். அதுவரை கான்ட்ராக்ட்களை எடுத்து வேலை செய்துவந்தவருக்கு, சேர்மன் பதவியில் அமர்ந்ததால் தனது பெயரில் ஒப்பந்தங்களை எடுக்க முடியாமல்போனது. அதைத் தன் விசுவாசிகளுக்கு விட்டுத்தரவும் மனம் இல்லை. தன் மைனர் மகன் செந்தில்நாதன் பெயரில் கான்ட்ராக்ட் எடுத்தார். அதிகார பலமும் கரன்சி மழையுமாகக் கோலோச்சினார்.

2004-ம் ஆண்டு. சென்னை கொளப்பாக்கத்தில் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. குற்றம் குறைகளை விசாரித்து ஸ்பாட்டிலேயே நிர்வாகிகளை நியமித்துக்கொண்டிருந்தார். மீண்டும் தனக்கே செய்யாறு ஒன்றியச் செயலாளர் பதவி கிடைக்கும் என, ஆசையோடு காத்திருந்த சுப்பிரமணியனைத் தாக்கியது ஓர் அதிர்ச்சி. 'சுப்பிரமணியன் வன்னியர் என்பதால், அவருக்கும் பா.ம.க-வினருக்கும் இடையே ரகசியக் கூட்டு இருக்கிறது’ என, செங்கம் பூண்டி மணி, ஜெயலலிதா முன் குற்றப்பத்திரிகை வாசிக்க, 'ஆன் தி ஸ்பாட்’ சுப்பிரமணியனின் ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறித்து மணியிடம் கொடுத்தார் ஜெயலலிதா. அதன் பிறகு சில காலம் அடக்கிவாசித்தார் சுப்பிரமணியன்.

2006-ம் ஆண்டு... சட்டமன்றத் தேர்தல் தோல்வி காரணமாக கட்சியில் சீனியர்கள் களையெடுப்பு நடக்க, திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிகொடுக்கிறார் பையூர் சந்தானம். அதுதான் சந்தர்ப்பம் எனக் காய் நகர்த்திய சுப்பிரமணியன், 'மிடாஸ்’ மோகன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன்... என சசிகலா உறவுகளின் உதவியோடு மாவட்டச் செயலாளர் ஆனார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் வெங்கடேஷ் மூலம் ஸீட் வாங்கி ஜெயித்தார். ஆனாலும், கலசப்பாக்கம் தொகுதியில் ஜெயித்த 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்திக்கே, கேபினெட்டில் இடம் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியின் பதவி 2012-ம் ஆண்டு பணாலாக, அவருக்குப் பதிலாக ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆன சுப்பிரமணியனை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. மீண்டும் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி 2014-ம் ஆண்டு அமைச்சரானபோதும், சுப்பிரமணியனை அசைக்க முடியவில்லை. 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் பதவியும் சில மாதங்களுக்கு முன்பு பறிபோனது. அதன் பிறகு கேபினெட்டிலும் மாவட்டத்திலும் சுப்பிரமணியனின் செல்வாக்கு மேலே... உயரே... உச்சத்திலேதான்!  

மந்திரி தந்திரி - 8 !

தொழில்நுட்பம் பழகா மந்திரி!

'ஐ.டி (தகவல் தொழில்நுட்பம்) துறைக்கு, சுப்பிரமணியன் அமைச்சர்’ என அறிவிப்பு வந்தபோது நெருக்கமான ஒருவரிடம், 'ஐ.டி-க்கு ஏன் என்னை அமைச்சர் ஆக்கினாங்கனு தெரியலை. ஒருவேளை, அம்மாவோட இன்கம்டாக்ஸ் வழக்குகளை சீக்கிரம் முடிக்கச் சொல்லுவாங்கனு நினைக்கிறேன்!’ எனச் சொன்னாராம் சுப்பிரமணியன். அந்த அளவுக்குத்தான் தகவல் தொழில்நுட்பம் பற்றி சுப்பிரமணியனுக்குத் தெரியும். ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்... என செல்போன்கள் இப்போது செம ஸ்மார்ட் ஆகிவிட்டபோதும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சரின் செல்போன் சமீபத்தில்தான் ஆண்ட்ராய்டுக்கு மாறியிருக்கிறது. பல் மருத்துவம் படித்த மகன் செந்தில்நாதன்தான், 'ஐ.டி மினிஸ்டரா இருந்துக்கிட்டு பட்டன் போன்ல தட்டிக்கிட்டு இருந்தா, நல்லாவா இருக்கு?’ என அப்பாவுக்கு டியூஷன் எடுத்து ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றியிருக்கிறார். மகன் பேச்சு தட்டாமல் ஆண்ட்ராய்டு போனை கையில் வைத்திருந்தாலும், அதை முழுக்க இயக்கத் தெரியாதாம் அமைச்சருக்கு. அழைப்பு வந்தால் அட்டெண்ட் பண்ணுவதோடு சரி. பி.ஏ-வும் பி.எஸ்.ஓ-வும்தான் பெரும்பாலும் செல்போனில் நம்பர் போட்டுத் தருவார்கள். னீறீணீநீலீமீஹ்ஹ்ணீக்ஷீ@tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இ-மெயில் முகவரியும் பயன்பாட்டில் இல்லை. அமைச்சர் வீட்டில் கணினி இல்லை. மகன் செந்தில்நாதன் மட்டும் லேப்டாப் பயன்படுத்துவார்.

றெக்கை கட்டும் சர்ச்சைகள்!

சுப்பிரமணியன் மீது, வகைதொகை இல்லாமல் றெக்கை கட்டுகின்றன சர்ச்சைகள். அவர் மீது 1986-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஆற்காடு, ராணிப்​பேட்டை, வாழைப்பந்தல் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பஞ்சாயத்துக்குச் சொந்தமான கிணற்றுப் பைப்பைத் திருடியது வரை தாறுமாறு தகராறுகள். 'அந்தப் புகார்கள் அனைத்தும், சுப்பிரமணியன் அமைச்சரான பிறகே அமைதியாக்கப்பட்டன’ என்கிறார்கள் அவரது சொந்தக் கட்சியினர். ஆனால், 'அதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு’ என வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் மறுத்தே வந்திருக்கிறார் அமைச்சர்.

''அ.தி.மு.க-வில் இருந்தாலும் தி.மு.க அரசியல் புள்ளிகளோடு திரைமறைவில் கைகுலுக்கிக்கொண்டார். கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தி.மு.க-வினருடன் கூட்டு சேர்ந்திருந்தார். சொந்த சாதிப் பாசத்தால் வன்னியர் சங்க நிர்வாகிகளோடு நெருக்கமான உறவுகொண்டிருந்தார். மாநாடு, விழாக்களுக்கு தாராளமாகச் செலவுசெய்தார். கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் மற்ற இடங்களில் ஜெயித்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான பதவிகளை தி.மு.க., பா.ம.க-வினர்தான் கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னணியில் உதவியது சுப்பிரமணியன்தான்’ என அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு சீஸனுக்கு ஏற்றாற்போல புகார்களைத் தட்டிவிட்டபடியே இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

சுப்பிரமணியனின் செய்யாறு வீட்டில் 1993-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம், இப்போதும் தொகுதிக்குள் கிசுகிசுக்கப்படுகிறது. சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றிய ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சுப்பிரமணியனின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். அவருடைய மகள் ப்ளஸ் டூ தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர். திடீரென காணாமல்போன அந்த மாணவி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த விவகாரம் அப்போது வெடித்துக் கிளம்பியது. தி.மு.க-வினர் இந்த விஷயத்தை மேடை போட்டு முழங்கினார்கள்.  

துறையில் சாதித்தது என்ன?

சாஃப்ட்வேர், ஹார்டுவேர், சர்வர், நெட்வொர்க், வெப்சைட், இ-கவர்னன்ஸ், இ-சர்வீஸ், வீடியோ கான்ஃபரன்ஸ், கூகுள், யூ-டியூப், வாட்ஸ்அப், ஆப்ஸ்... 'இதெல்லாம் இங்கிலீஷ் படப் பேரா?’ எனக் கேட்கும் அளவுக்குத்தான் துறை நிபுணராக இருக்கிறார் சுப்பிரமணியன். பின்னர் மாநிலத்தில் ஐ.டி நிர்வாகம் எப்படி நடக்கிறது? தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர்தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். ஐ.டி துறை பற்றி அமைச்சரிடம் எது கேட்டாலும், 'இதுக்கெல்லாமா ஓர் அமைச்சர் பதில் சொல்வார்... செயலாளரைக் கேட்டுக்கங்க!’ என ரெடிமெட் பதில் வரும் அமைச்சரிடம் இருந்து. பின்னர், அமைச்சர் என்னதான் செய்கிறார்? லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்; அம்மா புகழ் பாடுவார். அவ்வளவே!

செங்கோட்டையன், ஐ.டி மினிஸ்டராக இருந்தபோது ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால், சுப்பிரமணியத்திடம் ஆர்வமும் இல்லை... அக்கறையும் இல்லை. சர்வதேசச் சந்தைகளுடன் போட்டியிடவேண்டிய சூழலில், ஐ.டி துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தகவல் தொழில்நுட்பவியலை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை, கிடப்பிலேயே இருக்கிறது.

'இ-வேஸ்ட்’ எனப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள் பெருகிக்கொண்டேபோகின்றன. அந்தக் கழிவுகளை அழிப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.டி தொழிலுக்குத் தேவையான கட்டமைப்புகள்கூட முழுமை அடையாமல் இருக்கின்றன. புதிய ஐ.டி பார்க் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே சேலத்திலும் ஓசூரிலும் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் திறக்கப்படவில்லை.  

துறைரீதியாகச் செயல்படுத்தப்படும் ஒரே பெரிய திட்டம், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம்தான். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டு காலத்தில் 21.65 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்ட வகையில் மட்டும் 5,365.44 கோடி செலவிடப்பட்டது. ஆனால், அந்த லேப்டாப்கள் தரம் இல்லாதவை. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. 'லேப்டாப்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன’ என வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அசெம்பிள் செய்து லேப்டாப்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தரம் இல்லாத லேப்டாப்களை அரசு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்திருக்கிறது என்பது சர்ச்சை. அந்தக் கொள்முதலால் பயனடைந்தவர்கள் யார் என்பது அமைச்சருக்கே வெளிச்சம்!

தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர், யூ-டியூப் என சாமானியர்களின் உள்ளங்கையில் உலகமே குடியேறிவிட்டது. ஆனால், அந்த இணைய சமத்துவத்தைச் சீர்குலைக்கும் சில முயற்சிகள் அரங்கேறியபோது, அதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.

ஆனால், தமிழக ஐ.டி மினிஸ்டர் அப்போது சைலன்ட் மோடில் இருந்தார். ஒருவேளை நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்  என நினைத்திருப்பாரோ?

டிஷ் டாஸ்மாக்!

மந்திரி தந்திரி - 8 !

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரையே பெற்றிருந் தாலும், செய்யாறு ஏரியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் சிக்னல் மிகவும் வீக். ஏரியாவின் நெட் சென்டர்களில்கூட இணைய வேகம் சீராக இல்லை யாம். அமைச்சரின் சொந்த ஊரான முக்கூரில் டிஷ் ஆண்டனா தாங்கிய ஒரு டாஸ்மாக் கடை வரவேற்கும். 'அதென்ன டாஸ்மாக்கில் டிஷ்?’ என விசாரித்தால், முன்பு அங்குதான் மக்கள் கணினி மையம் செயல்பட்டுவந்ததாம். அதை டாஸ்மாக்குக்குத் தாரைவார்த்தவர்கள், டிஷ்ஷைக் கழற்றாமல் சென்றுவிட்டார்கள்!

பி.ஏ பாஸா... ஃபெயிலா?

மந்திரி தந்திரி - 8 !

ஐ.டி மினிஸ்டரின் கல்வித் தகுதி ஏக சர்ச்சைக்கு உள்ளானது. ஐந்தாவது வரை மட்டுமே படித்திருந்த முக்கூரார், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவில், 'தான் பி.ஏ பட்டதாரி’ எனக் குறிப்பிட்டிருந்தார். 'பட்டதாரி’ என நம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா. ஆனால், வேட்புமனுவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிப்பதாக சுப்பிரமணி குறிப்பிட, குட்டு உடைந்தது. சட்டமன்ற ஆவணங்களில் சுப்பிரமணி பி.ஏ முடித்தாகக் குறிப்பிடப்பட, அது சர்ச்சையாகக் கிளப்பியபோது, சட்டமன்ற இணையதளத்தில் அவர் பெயருக்குப் பின் இருந்த 'பி.ஏ’-வை அடைப்புக்குறிக்குள் போட்டுச் சமாளித்தார்கள். 2009-ம் ஆண்டு வேட்புமனுவில் ஆறாம் வகுப்பு ஃபெயில் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது!

எதிரிகளை வெளுத்துக்கட்டு!  

மந்திரி தந்திரி - 8 !

நைச்சியமாகக் காய் நகர்த்தி, பல எதிரிகளைக் காலி செய்திருக்கிறார் சுப்பிரமணியன். 'பையூர்’ சந்தானம் மா.செ-வாக இருந்தபோது அவர் காரில் தொற்றிக்கொண்டு வளையவந்த சுப்பிரமணியன், தன் கைக்கு அதிகாரம் வந்த பிறகு தொகுதிக்குள் சந்தானம் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டார். பெரணமல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் போட்டியாக வளர்ந்துவிடக் கூடாது என அவரைப் பற்றிய புகார்களை தலைமைக்குத் தட்டிவிட்டு, கட்சிப் பதவிகளைப் பறிக்கவைத்தன சுப்பிரமணியனின் வியூகங்கள். வேளாண் அதிகாரி தற்கொலை காரணமாக 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியும் அதிகாரம் இழக்க, மாவட்டத்துக்குள் இப்போது ஒரே வஸ்தாது சுப்பிரமணியன்தான்!

'அரசு ஊழியர்’ மனைவி!

மந்திரி தந்திரி - 8 !

பல்லி என்ற கிராமத்தின் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இன்றும் வேலை பார்க்கிறார் சுப்பிரமணியனின் மனைவி விஜய சாமுண்டீஸ்வரி. 'விஜய சாமுண்டீஸ்வரியின் கார் பள்ளிக்கு வெளியே நிற்கும். ஓடி வந்து அவரிடம் கையெ ழுத்து வாங்கிச் செல்வார் தலைமை ஆசிரியர். கட்சிப் பதவிகள், டெண்டர், சிபாரிசு எல்லாம் அம்மணி சொன்னால்தான் நடக்கும்’ என்கிறார்கள் கட்சியினர்!

கேபிள் கோல்மால்!

மந்திரி தந்திரி - 8 !

அரசு கேபிள் டி.வி நிறுவனம், அமைச்சர் சுப்பிரமணியத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சேவை நோக்குடன் தொடங்கப்பட்டதாகச் சொன்னாலும், அந்த நிறுவனத்தின் அடாவடித்தனம் உச்சத்தில் இருக்கிறது எனக் குபுகுபுக்கின்றன புகார்கள். குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேனல்கள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், 'மாதச் சந்தா 70 ரூபாய்’ என ஜெயலலிதா சொல்லித் தொடங்கப்பட்ட சேவைக்கு, இப்போது பெரும்பாலான பகுதிகளில் 150 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.

'அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடக்கிறது. கேபிள் டி.வி நிறுவனத்துக்கு சுமார் 1.50 கோடி இணைப்புகள் உள்ளன. ஆனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் 50 லட்சம் இணைப்புகள்தான் இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறது அரசுத் தரப்பு. கணக்கில் வராத இணைப்புகளிலும், 70 ரூபாய்க்கு மேல் வசூலிப்பதிலும் கொள்ளை லாபம் குவிகிறது. இப்படி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருமானம் அதிகார வட்டத்துக்குச் செல்கிறது’ எனக் குமுறுகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

சில சேனல்களை முதன்மை அலைவரிசையில் காட்டுவதற்காக முன்னுரிமை அளிப்பது, லோக்கல் சேனல்களுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு, ஜெயா டி.வி-க்கு அதிக முக்கியத்துவம் தருவது, இலவசமாக ஒளிபரப்பாகும் சேனல்களை ஒடுக்குவது, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சேனல்களைத் துண்டிப்பது... என ஏகக் குற்றச்சாட்டுகள்.

'துறையின் ஊழல்களைத் தடுத்தாலே ஆண்டுக்கு 2,000 கோடி லாபம் ஈட்டலாம். ஆனால், அதிகார துஷ்பிரயோக அதிகாரிகளின் கைகளுக்கு அந்தப் பணம் செல்கிறது!’ எனக் குமுறுகிறார்கள் துறையின் நேர்மையான ஊழியர்கள்!

மந்திரி தந்திரி - 8 !
மந்திரி தந்திரி - 8 !

திருவண்ணாமலை மாவட்டக் கட்சிக்காரர்கள் கோட்டையில் தன்னைச் சந்திக்கக் கூடாது என்பது சுப்பிரமணியனின் கண்டிப்பான உத்தரவு!

மந்திரி தந்திரி - 8 !

 தீவிர முருக பக்தர். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஒரு விசிட் அடிப்பார். வெளியூர் கிளம்பும்போது, முருகனை வணங்காமல் காலடி எடுத்துவைக்க மாட்டார்!

மந்திரி தந்திரி - 8 !

 மனைவி விஜய சாமுண்டீஸ்வரி மீது அதிக பாசம். வீட்டில் இருந்து கிளம்பும் முன், மனைவி எதிரில் வர வேண்டும். அதன் பிறகே அமைச்சரின் கார் நகரும்.

மந்திரி தந்திரி - 8 !

 அமைச்சரின் கார் டேஷ்போர்டில் டிஷ்யூ, ஃபேர்னஸ் க்ரீம், பவுடர்... என மேக்கப் அயிட்டங்கள் கொட்டிக்கிடக்கும். எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும் முன்னர், காரிலேயே 'டச்-அப்’ நடக்கும். 'பளிச்’ முகத்துடன் மேடையில் ஏறுவார் அமைச்சர்.

மந்திரி தந்திரி - 8 !

 போண்டா பிரியர். கட்சிக்காரர்களுடன் அளவளாவும்போது சுடச்சுட வரும் போண்டாக்கள் உடனுக்குடன் காலியாகும்.

மந்திரி தந்திரி - 8 !

 புதிய அரசுத் திட்டங்களை சென்டிமென்டாக சேவூர் கிராமத்தில் இருந்துதான் தொடங்குவார். அமைச்சரின் வலதுகரமாக இருப்பவரே சேவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன்தான்.

மந்திரி தந்திரி - 8 !

 புதிய நபர்கள் அமைச்சரின் வீட்டுக்குள் நுழையும்போது, செல்போன், கேமரா போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வரத் தடை. செல்போனில் முக்கியமான விஷயங்கள் பற்றிப் பேச மாட்டார்.

மந்திரி தந்திரி - 8 !

 ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அழுகாச்சி மந்திரிசபை பதவியேற்றபோது, ஓவர் அழுகை அமைச்சர்களில் டாப் 1 சுப்பிரமணியன்தான். பதவியேற்பு வாசகங்களைப் படிக்கக்கூட முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதார். உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்துப் போடும் வரை அழுகை ஓயவே இல்லை.