Published:Updated:

மிஸ் பண்ண கூடாத ஐந்து வைல்ட்-லைஃப் மினி சீரிஸ்!

மிஸ் பண்ண கூடாத ஐந்து வைல்ட்-லைஃப் மினி சீரிஸ்!
மிஸ் பண்ண கூடாத ஐந்து வைல்ட்-லைஃப் மினி சீரிஸ்!

பரபரவென ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பொழுதுபோக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அந்தப் பொழுதுபோக்கு பெரும்பாலும் சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்களுமாகவே இருக்கிறது. அதைவிட்டால் ஆங்கில சீரிஸ். ஆனால், சினிமாவையும், சீரிஸ்களையும் தாண்டி நம்மை பிரமிக்க வைக்கும் பல அதிசயங்கள் இயற்கையில் மறைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து அப்படியே அதன் அருகில் கூட்டிச்செல்லும் பல வைல்ட்-லைஃப் டாக்குமென்டரி சீரிஸ்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. அதில் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய சில சீரிஸ்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன் ஒரு குட்டித் தகவல், இயற்கை சார்ந்த டாக்குமென்டரிகள் பார்க்கும் மக்கள் மற்ற மக்களை விட மனஅழுத்தங்கள் இல்லாமலும், சந்தோசமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிளானட் எர்த் 1 (2005) & பிளானட் எர்த் 2 (2016)
பிபிசி எர்த் தயாரிப்பில் 2005ல் வெளியான இந்த சீரிஸின் முதல் சீசன் அன்று வைல்ட்-லைஃப் டாக்குமென்டரிக்கென இருந்த லெவலையே பல மடங்கு மேலேற்றியது. தமிழ் சினிமாவில் டிஜிட்டலே பெரிதாக வராதபோது ஃபுல் ஹை-டெபினிஷனில் வெளியானது பிளானட் எர்த். அதுவும் இது ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து (அதாவது 2000 த்திலிருந்து) ஷூட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்று மிகப்பெரிய பொருட்செலவில் வந்த வைல்ட்-லைஃப் சீரிஸ் இதுதான். அந்தப் பெருமை இப்போது இதன் இரண்டாம் சீசன் கைவசம். 11 எபிசோட்களில் பாலைவனம், நதிகள், பனிப்பிரதேசங்கள், மலைகள், குகைகள், கடல்கள் என உலகில் இருக்கும் அனைத்தையும் எபிசோடுக்கு ஒரு சூழலென விசிட் அடித்தது இந்த சீரிஸ். மேலும் இந்த அற்புதக் காட்சிகளுக்கு இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்ப்ரோவ்வின் வர்ணனை கூடுதல் சிறப்பு. 

உலகமெங்கும் டேவிட் அட்டன்ப்ரோவ்வின் வர்ணனையை கேட்கவென்றே மிகப்பெரிய ரசிகர்கூட்டம் உண்டு. இது மட்டுமல்லாமல் ஹெலிகாம் தொழில்நுட்பம் வர முக்கியக் காரணமாக இருந்ததும் இந்த சீரிஸ்தான். இப்படி அசத்திய பிளானட் எர்த்தின் இரண்டாவது சீசன் 2016ல் வெளிவந்தது. 4K வில் ஷூட் செய்யப்பட்ட 6 எபிசோட்கள் மீண்டும், மாறிவரும் பூமியின் மீது மக்களின் பார்வையைத் திருப்பியது. அனைத்துக்கும் மேல் டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் சிம்மர்தான் இந்த இரண்டாவது சீசனுக்கு இசை. இம்முறை ’சிட்டீஸ்’ (cities) என்ற தலைப்பில் நமது நகரங்களில் எப்படி விலங்குகள் உடன்பட்டு வாழப் பழகிவருகின்றன என ஒரு எபிசோட்டும் வைக்கப்பெற்றது. இந்த எபிசோட்டின் பெரும்பகுதி இந்தியாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trailers:

Full series:

ப்ளூ பிளானட் 1 ( 2001 ) & ப்ளூ பிளானட் 2 (2017)


அதே பிபிசி, அதே டேவிட் அட்டன்ப்ரோவ்; ஆனால் இம்முறை கடலில். 71 சதவிகிதம் தண்ணீராலான பூமியின் நீர்வாழ் உயிரினங்கள் பற்றி ஒரு பிரமாண்ட சீரிஸ் இல்லையென்றால் எப்படி? அதுதான் இந்த ப்ளூ பிளானட். 2001ல் வெளிவந்த இதுதான் கடல்களின் இயற்கையை பற்றி முழுமையாக வந்த முதல் வைல்ட்-லைஃப் சீரிஸ். இது ஆழ்கடல், திறந்தகடல், அலைகடல், உறைகடல் என்று கடலின் 8 அம்சங்களை எபிசோடுக்கு ஒன்றென வெளியிட்டது. முதல்முதலாக பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது கிட்டத்தட்ட 1.2 கோடி மக்கள் இந்த சீரிஸை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் இரண்டாம் சீசன் 16 வருடங்கள் கழித்து இப்போது வெளியாகிறது. 7 எபிசோடுகளில் 4 தான் இதுவரை வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் மற்றவை வெளிவரும். 2016ல் வந்த பிளான்ட் எர்த் 2 வில் கடல் சார்ந்த எதுவுமே இல்லாமல் போனதை ஈடுசெய்கிறது இந்த சீரிஸ். இத்தனை வருடங்களில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தால்  இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல ஆச்சர்யங்களை யாரும் செல்லாத ஆழம் சென்று தந்துகொண்டிருக்கிறது இந்த ப்ளூ பிளானட் 2. பிளானட் எர்த் 2 போன்று இதற்கும் இசை ஹான்ஸ் சிம்மரே.

நார்த்அமெரிக்கா (2013)

இந்த லிஸ்ட்ல பிபிசி எர்த் அல்லாத ஒரே சீரிஸ் இதுதான். டிஸ்கவரி தாமாகவே தயாரித்த முதல் பெரிய இயற்கைத் தொடரும் இதுதான். ஐந்தே எபிசோட் என்றாலும் பிபிசி தரத்துக்குத் தங்களாலும் ஒரு வைல்ட்-லைஃப் சீரிஸ் தயாரிக்கமுடியும் என டிஸ்கவரி நிரூபித்து காட்டியது இந்த நார்த் அமெரிக்கா மூலம்தான். வடஅமெரிக்காவின் இயற்கைச் சூழலையும், உயிர்களையும் மூன்று ஆண்டுகள் படம்பிடித்தது இந்த சீரிஸ். பிபிசி போல் அல்லாமல் சாதாரண ஆங்கில சீரிஸ் டைட்டில் பாணியில் பார்ன் டு பி வைல்ட், நோ பிளேஸ் டு ஹைட், லெர்ன் எங் ஆர் டை என எபிசோடுகளுக்குத் தலைப்பு வைக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் மேக்கிங் ஒரு எபிசோடாகவும், டாப் 10 நிகழ்வுகள் ஒரு எபிசோடாகவும் வெளிவந்தது. அமெரிக்கா வெர்சனுக்கு வர்ணனை செய்தவர் 12 இயர்ஸ் எ ஸ்லேவ், 2012 போன்ற படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் சிவெட்டல் ஏஜியோஃபெர் என்பது குறிப்பிடத்தக்கது.


லைஃப் (2009)

இந்த லிஸ்டில் மற்றுமொரு பிபிசி தயாரிப்பு. அதே டேவிட் அட்டன்ப்ரோவ் குரல். ஆனால், இந்தமுறை அமெரிக்கன் வெர்சன். வர்ணனை செய்தவர் பிரபல பெண் ஊடகவியலாளரான ஓப்ரா வின்ஃபிரே. சார்லஸ் டார்வினின் "வலியதுதான் உயிர்பிழைக்கும்"(Survival of the fittest) என்ற வாசகத்திற்கேற்ப உலகம் முழுவதும் உயிர்கள் அழியாமல் இருந்திட எவ்வெல்லைகள் வரை செல்கின்றன என்பதை மையக்கருவாக வைத்து நகர்ந்தது இந்த லைஃப். இதுவரை பார்த்திடாத உயிரினங்களின் அதிசய உத்திகளையும், தீவிர குணங்களையும் பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், மரங்கள் என ஒவ்வொரு வகையான உயிரினத்துக்கும் ஒரு எபிசோட் என்று 10 எபிசோடுகள் HDயில் படமாக்கப்பட்டது. இந்த சீரிஸில் இருந்துதான் மேக்கிங் காட்சிகள் நிகழ்ச்சியுடன் சேர்த்து ஒளிபரப்பும் ட்ரெண்டை பிபிசி எர்த் தொடங்கியது. இது பிளானட் எர்த் 2, ப்ளூ பிளானட் 2விலும் தொடர்ந்தது. இந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் எப்படிப் படமாக்கப்பட்டது என்பது எக்ஸ்ட்ரா ஆச்சர்யத்தை தரும். 

ஆப்பிரிக்கா (2013)

டிஸ்கவரியின் நார்த்அமெரிக்கா வெளியான அதே ஆண்டு பிபிசி ஆப்பிரிக்கா பக்கம் சென்றுவிட்டது. பிளானட் எர்த்தில் வரும் சிங்கம், யானை, ஒட்டகச்சிவிங்கி பத்தாது என்பவர்களுக்கு இது விஷுவல் ட்ரீட். ஏனென்றால் முழுமையாக அவற்றைச் சுற்றியே நடப்பதாக அமைந்தது இந்த சீரிஸ். ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஒன்றென 6 எபிசோடுகள் டேவிட் அட்டன்ப்ரோவ் குரலில் வெளிவந்தன. ”அதென்ன லிஸ்டில் இருக்கும் எல்லாவற்றிலும் இவர் பெயரே வருகிறதே” என்று யோசிக்கலாம். இந்த ஐந்தை விடுவோம்; இன்னும் 10 சிறந்த வைல்ட்-லைஃப் சீரிஸ்கள் லிஸ்ட் எடுத்தாலும் பெரும்பாலும் பிபிசியும், இவரும் இணைந்த சீரிஸ்கள்தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்தத் துறையில் இவர்களை அடித்துக்கொள்ள யாருமில்லை. மேலும் இந்த லிஸ்டில் இருக்கும் சீரிஸ்கள் தொகுக்கப்பட்டு படமாகவும் வெளிவந்தன.

இப்படி ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்படும், நம் இயற்கையை நமக்கே தெரியாத ஒரு கோணத்தில் தரும் இந்த சீரிஸ்களுக்கும் ஓய்வுநேரத்தில் ஒரு விசிட் கொடுக்காலமே.