Published:Updated:

ஆல்கஹால்... நண்பர்கள்... கொலை தாகம்! திறன்பொருள் கண்டறிந்த குற்றம் அத்தியாயம் - 1 #GadgetTippedCrimes

ஆல்கஹால்... நண்பர்கள்... கொலை தாகம்! திறன்பொருள் கண்டறிந்த குற்றம் அத்தியாயம் - 1 #GadgetTippedCrimes
ஆல்கஹால்... நண்பர்கள்... கொலை தாகம்! திறன்பொருள் கண்டறிந்த குற்றம் அத்தியாயம் - 1 #GadgetTippedCrimes

குற்றங்களுக்கு எதிரான சாட்சியங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. கைப்பட எழுதிய டைரியில் தொடங்கி சட்டையின் பட்டன் வரை குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய சாட்சிகள் பல ரூபத்தில் இருந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம்மைச் சுற்றி இருக்கிற அத்தனை பொருள்களுமே ஏதாவது ஒரு குற்ற வழக்கில் போலீஸுக்கு உதவியிருக்கும். இது அரச காலத்தில் இருந்தே நடந்துவரும் விஷயம்தான். இந்தச் சாட்சிகளின் பட்டியலில் கடைசியாகச் சேர்ந்த முக்கியமான ஒன்று சிசிடிவி கேமரா. ஆனால், அதையும் பின்னுக்குத் தள்ளி பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது திறன்பொருள்; தமிழில் கேட்ஜெட்டுக்குச் சரியான வார்த்தையாக இதைச் சொல்லலாம்.

ஒரு கேட்ஜெட் என்ன செய்யும்? அது எப்படிச் சாட்சி சொல்லும் என்கிறீர்களா? ஒன்றல்ல; பல வழக்குகளை உதாரணமாகச் சொல்ல முடியும். ஒவ்வொன்றாய் பார்க்கலாம், ஒவ்வொரு வாரமாய்.

ஜேம்ஸ் கேட்ஸ்:

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் கேட்ஸ். மனைவியைப் பிரிந்து தனியே வாழ்ந்து வருபவர். அலுவலகத்தில் எதிர்பாராதவிதமாக அவருக்கு போனஸ் கிடைக்கிறது. மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஹவுஸ்பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறார். அவருடைய 4 நண்பர்கள் அவர் வீட்டுக்கு வருகிறார்கள். நண்பர்களுக்காக ஜக்குசி (Jacuzzi) யைத் தயார் செய்து வைத்திருக்கிறார் ஜேம்ஸ். அன்று அவர்களுடைய ஃபேவரைட் அணியின் கால்பந்து போட்டி. போதாதா? பியர், கால்பந்து, வெந்நீர் குளியல் எனக் களை கட்டுகிறது அந்த இரவு. 

நண்பர்களில் இரண்டு பேர் நள்ளிரவில் அவரவர் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறார்கள். போதை அதிகமாக, ஜேம்ஸ் தனது அறைக்குச் சென்று தூங்கிவிடுகிறார். மறுநாள் காலை 9.30க்கு எழுந்து பார்க்கிறார். வீட்டிலே தங்கிவிட்ட நண்பர் ஜக்குசியில் தலைக்குப்புற விழுந்து கிடக்கிறார். அந்த நண்பர் முன்னாள் போலீஸ். ஜேம்ஸ், உடனே 911க்குக் கால் செய்கிறார். போலீஸ் வருகிறது. போலீஸார் இவரைக் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களிடம் மேலே சொன்னதையெல்லாம் சொல்கிறார் ஜெம்ஸ் கேட்ஸ்.

இந்தச் சம்பவம் நவம்பர் 21, 2015ல் நடந்தது. மூன்று நாள்கள் கழித்து ஜேம்ஸிடம் போலீஸ் “உங்கள் நண்பன் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார்” என்ற தகவலை மட்டும் சொல்கிறது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

3 மாதங்கள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் வீட்டிற்கு போலீஸ் வருகிறது. எந்த வாரன்ட்டும் இல்லாமல் போலீஸ் ஜேம்ஸை கைது செய்கிறார்கள். ஜேம்ஸ்தான் கொலையாளி என்பதற்கு போலீஸிடம் இருந்தது ஒரே ஓர் ஆதாரம். அது, அவர் வீட்டு ’ஸ்மார்ட் வாட்டர் வாட்டர் டிஸ்பென்ஸர்’ தந்த டேட்டா.

ஜேம்ஸ் வீட்டில் திறன்பொருளுக்குப் பஞ்சமில்லை. நாம் வாயால் சொன்னதைக் கேட்டு பதில்களைத் தரும் அமேசான் எக்கோவில் தொடங்கி அவர் கைதுக்குக் காரணமான ஸ்மார்ட் வாட்டர் மிஷின் வரை ஏகப்பட்ட பொருள்கள். விசாரணைக்கு வந்தபோது இதைக் கவனித்த போலீஸ், அந்தக் கோணத்தில் ஏதாவது க்ளூ கிடைக்குமா என யோசித்திருக்கிறார்கள். 

போலீஸ் விசாரணையைத் தொடங்கியபோது அவர்கள் மனதில் இருந்தவை 2 சாத்தியங்கள்தான். 4 நண்பர்கள் சேர்ந்து குடிக்கிறார்கள். இரண்டு பேர் சென்றதும், இருக்கும் இரண்டு பேருக்கு நடுவே ஒரு வாக்குவாதம் வருகிறது. போதையில் ஜேம்ஸ் நண்பரைத் தாக்க, அவர் இறக்கிறார். என்ன செய்வதென தெரியாமல் ஜக்குசியில் அவர் மயங்கி விழுந்தது போல் செட் செய்கிறார் ஜேம்ஸ். மறுநாள் அவரே 911-ஐ அழைக்கிறார். இதுமுதல் தியரி. இரண்டாவது தியரி, ஜேம்ஸ் விசாரணையில் சொன்னதெல்லாம் நிஜமாகவே நடந்தது. இரண்டாவது விஷயத்தைப் பற்றி போலீஸ் அலட்டிக்கொள்ளவில்லை. முதல் தியரி நடந்திருந்தால், அதற்கான ஆதாரம் வேண்டுமே.

ஜேம்ஸ் வீட்டிலிருந்த திறன்பொருள்களின் பட்டியலை எடுக்கிறார்கள். அவர்களின் முதல் டார்கெட் அமேசான் எக்கோதான். அமேசான் எக்கோ எப்போதும் அலெர்ட்டாக இருக்கும். நண்பர்கள் பேசியதெல்லாம் அதில் பதிவாகியிருக்கும் வாய்ப்புண்டு. அந்தப் பதிவுகள் கிடைத்தால் போலீஸின் வேலை மிச்சம். ஆனால், அமேசான் அதைத் தர முடியாது எனச் சொல்லிவிட்டது. அமெரிக்காவில் சட்டங்கள் அப்படி. அடுத்து, அவர்கள் தேடியது ஸ்மார்ட் வாட்டர் மிஷின். அதன் டேட்டா போலீஸுக்குக் கிடைக்க, அதை ஆராய்ந்திருக்கிறார்கள். வேறு எந்த நாளும் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் அன்றிரவு பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது. போலீஸுக்கு முடிச்சுகள் அவிழ்ந்தது போல இருந்தது. ஜேம்ஸ் சண்டையில் நண்பரை அடித்துக் கொலை செய்திருக்கிறார். அந்தக் கறைகளை அழிக்க தண்ணீரை எடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் அவரை வாரன்ட்டே இல்லாமல் கைது செய்திருக்கிறார்கள்.

இன்னமும் இந்த வழக்கு முடியவில்லை. ஜேம்ஸின் வழக்கறிஞர் கேட்ஜெட்டை நம்ப வேண்டாம் என வாதாடுகிறார். ”அதில், AM/PM சிக்கல் இருந்திருக்கலாம். என் கட்சிக்காரர் பகலில், ஜக்குசியை நிரப்ப தண்ணீர் எடுத்தார். அந்த டேட்டா இதில் காணவில்லை. போலீஸ் சொல்லும் நூற்றுக்கணக்கான தண்ணீர் காலையில் எடுக்கப்பட்டிருக்கலாம். AM/PM பிரச்னையில் இரவாகக் காட்டலாம்” என்கிறார். ஆனால், இந்தச் சந்தேகம் ஜேம்ஸைக் காப்பாற்ற போதாது. அடுத்து, ஜேம்ஸ் அமேசானை அணுகியிருக்கிறார். அமேசான் எக்கோவில் பதிவானத் தகவலைத் தரச் சொல்லியிருக்கிறார். வாடிக்கையாளரே சொல்வதால், அமேசான் அதைத் தர சம்மதித்திருக்கிறது. 

இந்த வழக்கு மிகமிக முக்கியமான ஒன்று. 24 மணி நேரமும் நம்மை யாரோ கண்காணித்துக்கொண்டேயிருக்கிறார்கள். ப்ரைவஸி என்ற ஒன்றே இல்லாத சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது நல்லதா கெட்டதா, வேறு எந்த வழக்குகளில் கேட்ஜெட்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன, அவை என்ன மாதிரி திறன்பொருள்கள்?

காத்திருங்கள்.