Published:Updated:

``எக்ஸெல் வச்சே படம் வரைவேன்..!” - 77 வயது ஜப்பானியரின் திறமை

``எக்ஸெல் வச்சே படம் வரைவேன்..!” - 77 வயது ஜப்பானியரின் திறமை
``எக்ஸெல் வச்சே படம் வரைவேன்..!” - 77 வயது ஜப்பானியரின் திறமை

ஐ.டி. ஊழியர்களுக்கும் மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் மென்பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தப் பச்சை நிற விண்டோவை பார்த்துப் பார்த்து பச்சை நிறத்தில் எதைக் கண்டாலும் எக்ஸெல் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர்களுக்கு அலுத்துப் போயிருக்கும். வங்கி ஊழியர்கள் மற்றும் கணக்குகள் பார்க்கும் அனைவருக்கும் எக்ஸெல் ஓர் அருமைத் தோழன். உங்கள் வேலையில் எண்களோ, எண்ணற்ற தரவுகளோ இருந்தாலே போதும், அதைச் சிறந்த முறையில், எளிதாக ப்ராசஸ் செய்ய எக்ஸெல் ஒரு சிறந்த கருவி. ஆனால், அதை வைத்து வேறு என்னவெல்லாம் செய்ய முடியும்? “எழில் கொஞ்சும் அசத்தல் இயற்கை ஓவியங்கள் வரையலாமே ஃபிரெண்ட்!” என்கிறார் 77 வயதான தட்சுவோ ஹோரியுச்சி (Tatsuo Horiuchi). இவர் ஒரு ஜப்பானிய ஓவியர்!

Photo Courtesy: Great Big Story

சுமார் 17 வருடங்களாக எக்ஸெல் மென்பொருள் கொண்டு அற்புதமான ஓவியங்களைப் படைத்துவருகிறார். முக்கியமாக, ஜப்பானின் கிராமப்புற அழகு மற்றும் இயற்கை வளத்தை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. எக்ஸலை வைத்து ஓவியம் வரையும் ஐடியா எப்படி வந்தது என்பதை விளக்குகிறார் தட்சுவோ.

“நான் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது, என் மீதி நாள்களை எப்படிக் கழிக்கப்போகிறேன் என்ற கவலை ஏற்பட்டது. ஓவியங்கள்மீது எனக்குத் தீராத காதல் எப்போதும் உண்டு. நல்ல முறையில் ஓவியம் வரைய, அதற்கான கேன்வாஸ், கலர் பாட்டில்கள், பெயின்ட் பிரஷ் என நிறையச் செலவுகள் செய்ய வேண்டும். கம்ப்யூட்டரில் விதவிதமான நவீன மென்பொருள்கள் கொண்டு வரைய வேண்டும் என்றால், அதற்காகக் குறைந்தபட்சம் ஆன்லைன் வகுப்பிலாவது சேர வேண்டும். அதற்கும் செலவு ஆகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே, எக்ஸெல் வைத்தே படம் வரையலாம் என்று முயற்சி செய்தேன். முதலில் பெயின்ட் மென்பொருளில் முயற்சி செய்தாலும், பின்பு அதைவிட எக்ஸெலில் நிறைய ஆப்ஷன்கள் உண்டு என்று தெரிந்துகொண்டேன். எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று எக்ஸெல் பயன்படுத்தினால், பிரின்ட் செய்யத் தகுதியான தரத்தில் (Vector Output) ஓவியங்களை வரைய முடியும். எக்ஸெலில் க்ராஃப் மற்றும் சார்ட்கள் (Graphs and Charts) வரையப் பயன்படுத்தப்படும் டூல்களை வைத்தே ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தேன்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

முதல் நாளிலிருந்தே இப்படி அசத்தல் ஓவியங்கள் கிடைத்துவிட்டனவா என்று கேட்டால் சிரிக்கிறார். இப்படி ஒரு பிரமாதமான ஓவியம் வரைய, தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பயிற்சிகளையும் விவரிக்கிறார்.

“2000-வது வருடத்தில்தான் முதன் முதலில் எக்ஸெல் கொண்டு வரைய ஆரம்பித்தேன். கோடுகள் வரையப் பயன்படும் லைன் டூல்தான் என் முதல் பிரம்மாஸ்திரம். அப்போது என்னிடம் இருந்தது ஒரே ஒரு இலக்குதான். இன்னும் பத்து வருடத்தில், அனைவரிடமும் காட்டும் தகுதி உடைய ஓவியம் ஒன்றை வரைய வேண்டும் என்பதே! அப்போது எல்லோரும் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்கள். ‘எதற்கு இந்தத் தேவையில்லாத வேலை? இதனால் யாருக்கு என்ன பயன்? நீங்கள் என்ன முட்டாளா?’ என்று விமர்சிப்பார்கள்.

அப்போது நான் எனக்குள் கூறிக் கொள்வேன். ‘ஆமா, நான் முட்டாள்தான். அதுக்கு என்ன இப்ப?’. அவர்களின் கிண்டல் பேச்சுதான் என்னை ஊக்கப்படுத்தியது என்று நினைக்கிறேன்.

உங்களுக்குள் ஓவியத் திறமை இல்லாவிட்டாலும் கூட, எக்ஸெல் கொண்டு சிறந்த ஓவியங்களை உங்களால் வரைய முடியும். ஒரு ஓவியத்தை விற்பது என்பது ஒரு போரில் பங்கெடுப்பதைப் போன்றது. நீங்கள் உங்கள் வாழ்நாளில் யாரிடமாவது ஓர் ஓவியத்தையாவது விலை கொடுத்து வாங்கி இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழச் செய்கிறார்.

Photos Courtesy: pasakonga.com

எண்ணற்ற ஓவியங்களைப் படைத்துவிட்ட மனிதர், தற்போது பலருக்கு தான் எக்ஸெல் மென்பொருளில் நிகழ்த்தும் மாயாஜாலங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார். ‘ExcelArt class’ என்ற பெயரில் வெளியே சென்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். ஓவியக் கண்காட்சிகள் நடத்துகிறார். அவரின் அனைத்துப் படைப்புகளையும் காண, https://pasokonga.com/ என்ற தளத்துக்குச் செல்லுங்கள்.

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, என்று பல மெசேஜ்கள் இவரின் கதையை வைத்துக் கூறலாம் என்றாலும், அவர் கூறிய அந்த ஒற்றை வரி, பல ஆயிரம் பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அது, “ஆமா, நான் முட்டாள்தான். அதுக்கு என்ன இப்ப?”.