Published:Updated:

நான்கே மணி நேரப்பயிற்சி... உலகின் டாப் செஸ் சாம்பியனை வீழ்த்திய கூகுள் AI #AlphaZero

நான்கே மணி நேரப்பயிற்சி... உலகின் டாப் செஸ் சாம்பியனை வீழ்த்திய கூகுள் AI #AlphaZero
நான்கே மணி நேரப்பயிற்சி... உலகின் டாப் செஸ் சாம்பியனை வீழ்த்திய கூகுள் AI #AlphaZero

லகில் குற்றங்கள் நடக்கும் முன்னரே தடுக்க ‘தி மெஷின்’ என்று அழைக்கப்படும் AI ஒன்றை வடிவமைக்கிறான் ஹேரால்டு ஃபின்ச் என்ற ஜீனியஸ். செயற்கை நுண்ணறிவுகளைப் பொறுத்தவரை என்னதான் நீங்கள் எல்லாவற்றையும் ப்ரோக்ராம் செய்தாலும், மெஷின் லேர்னிங் (Machine Learning) என்பது மிகவும் அவசியம். அதாவது அந்த AIயே தன்னைக் களத்தில் நிறுத்தி, தனக்காக ஏவப்பட்ட செயல்களைச் செய்து அதன் எதிர்வினைகளை அறிந்துகொண்டு தன் செயல்பாட்டை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும். இதை அதன் பரிணாம வளர்ச்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியை ‘தி மெஷின்’ AIக்கு அளிக்க செஸ் ஆட்டம் கற்றுக்கொடுக்கிறான் ஃபின்ச். இதன் மூலம் அதன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால் இதைச் செய்கிறான்.

இக்கட்டான சூழ்நிலைகளில் இப்படிச் செய்தால் என்ன நடக்கும், அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று சிமுலேஷன்கள் (Simulations) கொண்டு முன்னரே அறிந்துகொண்டு காய்களை நகர்த்த பழகிக்கொள்கிறது AI. அதன் மூலம் செஸ் ஆட்டத்தில் வெற்றியும் பெறுகிறது. இந்த வெற்றி சூத்திரத்தை நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. செஸ் ஆட்டம் போன்றே இந்த முடிவை எடுத்தால், அந்த அப்பாவியை ஒரு குற்றவாளியிடமிருந்து காக்கலாம், அந்தக் கொலையை நடக்காமல் தடுக்கலாம், இந்தத் திருடனை முன்னரே பிடிக்கலாம் என்று அதகளம் செய்கிறது. இது ‘Person of Interest’ என்ற ஆங்கில நாடகத்தின் சாராம்சம். இது அறிவியல் புனைவுதான் என்றாலும், நிஜமாக அதிக காலம் தேவையில்லை என்று மார் தட்டுகிறது கூகுளின் புதிய AIயான ‘ஆல்ஃபாஜீரோ’ (AlphaZero).

இயல்பாகவே, செஸ் என்பது சற்று கடினமான ஆட்டம். விதிமுறைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ஜெயிப்பதற்கான வியூகங்களை வகுக்கக் கற்றுகொள்ள சில காலம் பிடிக்கும். அந்தச் சில காலம் என்பது உங்கள் பயிற்சியைப் பொறுத்தது என்பதை விட, உங்களுடன் ஆடும் எதிராளியைப் பொறுத்துதான். அவர் செஸ் ஆட்டத்தில் ஒரு சாம்பியன் என்றால் நாளடைவில் உங்கள் வியூகங்களும் அவரின் ஆட்டம் போல சிறந்தவையாக மாறும். இல்லையென்றால், சுமார்தான். கூகுள் நிறுவனத்தின் புதிய AI ‘ஆல்ஃபாஜீரோ’ (AlphaZero) இந்த செஸ் ஆட்டத்தில் அட்டகாசம் செய்கிறது. ஆடக் கற்றுக்கொண்ட நான்கு மணி நேரத்திலேயே (அதாவது தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்ல ஆகும் நேரம்தான்) செஸ் ஆட்டத்தில் உலகச் சாம்பியன் ஆன ‘ஸ்டாக்ஃபிஷ்’ (Stockfish) என்ற ப்ரோக்ராமை வென்றுள்ளது. இந்த ‘ஸ்டாக்ஃபிஷ்’ சிறந்த செஸ் இயந்திரங்களிடையே நடக்கும் சாம்பியன்ஷிப் (Top Chess Engine Championship) போட்டிகளில் பலமுறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஆல்ஃபாஜீரோ’விற்கு செஸ் ஆட்டம் குறித்த பயிற்சி வெறும் நான்கு மணிநேரமே அளிக்கப்பட்டது. அதுவும் ஆட்டத்தின் விதிமுறைகள் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது. வியூகங்கள் எதுவும் அதனுள் ப்ரோக்ராம் செய்யப்படவில்லை. ‘ஸ்டாக்ஃபிஷ்’ உடனான ஆட்டத்தின் போதே ‘ஆல்ஃபாஜீரோ’ மெஷின் லேர்னிங் மூலம் வியூகம் அமைக்க கற்றுக்கொண்டு சாதித்திருக்கிறது. மொத்தம் நடந்த நூறு ஆட்டங்களில் 28 முறை ‘ஆல்ஃபாஜீரோ’ வென்றிருக்கிறது. இதில் 25 முறை வெள்ளை, 3 முறை கருப்புக் காய்களை வைத்திருந்தது. மீதி நடந்த 72 ஆட்டங்களும் ட்ராவில் முடிந்திருக்கின்றன. ஸ்டாக்ஃபிஷ்ஷால் ஒரு முறை கூட ஆல்ஃபாஜீரோவை வெல்ல முடியவில்லை.

செஸ் ஆட்டத்தின் அறிவியல் பேசும் ‘Chessable’ என்ற வலைதளத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் செஸ் ஆராய்ச்சியாளர் டேவிட் கிரமலே (David Kramaley) இது குறித்து பேசுகையில், “செஸ் ஆட்டத்தில் புதிய கடவுள் யாரென்று இப்போது தெரிந்துள்ளது. இது செஸ் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த அளவிற்குக் கற்றுக்கொள்ளும் திறன் உள்ள ஒரு AIயால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று நினைத்துப் பாருங்கள். இதன் அல்காரிதத்தை கொண்டு நகரங்கள், கண்டங்கள் என்ன பிரபஞ்சத்தைக் கூட ஆள முடியும்” என்று சிலாகிக்கிறார்.

‘ஆல்ஃபாஜீரோ’ என்னும் இந்தச் செயற்கை நுண்ணறிவு கூகுளின் டீப்மைண்ட் (DeepMind) என்ற நிறுவனத்தின் படைப்பு. இது அவர்களது முந்தைய படைப்பான ‘ஆல்ஃபாகோ ஜீரோ’ (AlphaGo Zero) AIயின் அடுத்த கட்ட முயற்சி. ஏற்கெனவே இந்த ‘ஆல்ஃபாகோ ஜீரோ’ AI, சீனாவில் பிரபலமான போர்டு விளையாட்டான ‘Go’ என்ற ஆட்டத்தில் கில்லி. இந்த விளையாட்டில் சாம்பியனான பல மனிதர்களை அசால்ட்டாக வீழ்த்தியுள்ளது. இப்போது செஸ் ஆட்டத்திலும் ‘ஆல்ஃபாஜீரோ’ அதையே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஆட்டத்தை நேரில் பார்த்த எம்ஐடியை (MIT) சேர்ந்த கணினி விஞ்ஞானி நிக் ஹைன்ஸ் (Nick Hynes), “அதன் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு, ஒரு ஏலியன் இனம் தங்களுக்கு என ஒரு கணிதப் பாடத்தை வடிவமைப்பதுபோல் இருந்தது” என்று பாராட்டினார். செஸ் கிராண்ட்மாஸ்டர் பீட்டர் ஹெயின் நீல்சன், “மனிதனை விட அறிவில் சிறந்த இனம் ஒன்று பூமியில் இறங்கி செஸ் ஆடினால் எப்படி இருக்கும் என்று நிறைய நாள்கள் நினைத்திருக்கிறேன். இன்று நேரிலேயே பார்த்து விட்டேன்” என்று பிபிசி ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

‘Person of Interest’ நாடகத்தில் ஹேரால்டு ஃபின்ச்சின் ‘தி மெஷின்’ AI தான் கற்றுக்கொண்ட செஸ் ஆட்டத்தின் சாராம்சத்தை நிஜ வாழ்விலும் பொருத்திப்பார்க்கத் தொடங்குகிறது. அதாவது தன்னை உருவாக்கிய ஹேரால்டு ஃபின்ச்சிற்கு ‘ராஜா’ என்று ஒரு அந்தஸ்தைக் கொடுத்து, அவனது உயிரை மற்ற மனிதர்களின் உயிரை விடப் பெரிதாக எடுத்துக்கொள்கிறது. அவனைப் பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. இதை அறிந்த ஃபின்ச் அது தவறு என்று தன் AIக்கு சுட்டிக் காட்ட பின்வரும் வசனத்தைக் கூறுகிறான்.

“செஸ் நம் அறிவுக்கூர்மையடைய உதவும் ஒரு சிறந்த பயிற்சி. பல மேதைகள் அதன் பயன்கள் குறித்துப் பல இடங்களில் பேசியுள்ளனர். ஆனால், அந்த ஆட்டம் தவறானது. ஏனென்றால், அது ஓர் உயிரை விட இன்னோர் உயிர் பெரியது என்ற தவறான கோட்பாட்டை கற்றுத் தருகிறது. சிப்பாயை விட மந்திரியின் உயிர் பெரியது, ராஜாவின் உயிர் பெரியது என்று அது நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை யாருடைய உயிரும், மற்றவர்களின் உயிரை விட பெரியது இல்லை. செஸ் விளையாட்டை நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்பது முட்டாள்தனம். ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் செஸ் ஆட்டத்தின் காய்கள் அல்ல, பலி கொடுக்க. எந்த ஒருவருக்கும் நீ முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. என்னையும் சேர்த்துதான். எல்லோரும் ஒன்றுதான். நிஜ வாழ்க்கையை செஸ் ஆட்டம் போல பார்க்கும் அனைவரும், ஆட்டத்தில் ஜெயித்தாலும், நிஜ வாழ்க்கையில் தோற்றதாய்தான் அர்த்தம்.”

இதை உணர்ந்து கொண்ட ‘தி மெஷின்’ AI தன் தவற்றை சரி செய்துகொள்கிறது. எல்லோரையும் சமமாக, மனிதர்களாக மட்டும் பார்க்க தொடங்குகிறது. இந்தத் தார்மீகத்தை, மிக முக்கியமான பாடத்தை உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுகளுக்கு, விஞ்ஞானிகள் முதலில் புரியவைத்தால் நலம்.