Published:Updated:

போக்கிமான் கோ நிறுவனத்தின் புதிய ஹாரிபாட்டர் கேம்… அதே மேஜிக் இருக்குமா?

போக்கிமான் கோ  நிறுவனத்தின் புதிய ஹாரிபாட்டர் கேம்… அதே மேஜிக் இருக்குமா?
போக்கிமான் கோ நிறுவனத்தின் புதிய ஹாரிபாட்டர் கேம்… அதே மேஜிக் இருக்குமா?

போக்கிமான் கோ நிறுவனத்தின் புதிய ஹாரிபாட்டர் கேம்… அதே மேஜிக் இருக்குமா?

“ப்ரோ, எந்த வழியா வீட்டுக்குப் போறீங்க?”

“நேத்துப் போன மாதிரி விநாயகர் கோவில் வழியாதான்!”

“இன்னைக்கு வேணா அவர் தம்பி முருகன் கோவில் வழியா போலாமா ப்ரோ?”

“அட அது ரொம்ப சுத்தாச்சே? பத்து நிமிஷம் எக்ஸ்ட்ரா ஆகாது?”

“ஆனா பரவால்ல, அங்கதான் ரேரான ‘டிட்டோ’ போக்கிமான் கெடைக்குதுனு சொல்றாங்க. அப்டியே போவோம்!”

இது என்னடா சோதனை என்று அவரும் வண்டியைக் கிளப்பியிருப்பார்.

கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் நம்மூர் ஆட்கள் போக்கிமான் பிடிக்கிறேன் என்று செய்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஊரில் உள்ள அனைத்துத் தெருக்களையும் இரவு பகல் பார்க்காமல் அளந்திருப்பார்கள். அதுவரை போகாத இடங்களுக்குக் கூட, போகவே அவசியமில்லாத இடங்களுக்குக் கூட பைக், சைக்கிள், நடைபயணம், இவ்வளவு ஏன் கார் எடுத்துக்கொண்டு சென்றவர்கள் கூட உண்டு. அதுவரை கோவில் பக்கமே செல்லாதவர்கள் கூட அது போக்ஸ்டாப் (Pokestop) என்று தெரிந்தவுடன் "பக்கத்துக் கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினார்கள். உலகையே ஒரு கேம் போர்டாக பாவித்து ஆக்மென்டெட் ரியாலிட்டி (Augmented Reality - AR) தொழில்நுட்பம் மூலம் சுவாரஸ்யமான விளையாட்டாக வெளிவந்த போக்கிமான் அசத்தல் வெற்றி பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏதோ, இப்போதுதான் சற்றே அதன் மோகம் குறைந்திருக்கிறது.

நியான்டிக் லேப் என்ற நிறுவனம் ஐந்து வருடங்களுக்கு முன் தயாரித்து வெளியிட்ட இந்த AR கேம் பெற்ற வெற்றி, அந்த நிறுவனத்தை தற்போது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக்கியிருக்கிறது. சென்ற முறை வீடியோ கேம் மற்றும் அனிமியாக (Anime) வெளிவந்து குழந்தைகளைக் கவர்ந்த போக்கிமான் என்றால், இந்த முறை அதே குழந்தைகளின் மற்றொரு ஃபேவரைட்டான ஹாரிபாட்டர்! “நாங்கெல்லாம் 90ஸ் கிட்ஸ்” என்று மனதளவிலும், மீம்ஸ் சூழ் உலகிலும் இன்னமும் மழலைகளாகத் திரியும் பெரிய குழந்தைகளுக்கு இந்தச் செய்தி நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். ‘ஹாரிபாட்டர்: விஸார்ட்ஸ் யூநைட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேமை போக்கிமான் கோ போலவே நம் ஸ்மார்ட்போன்களில் விளையாட முடியும். வார்னர் ப்ரோஸ் இன்டராக்ட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த கேமை தயாரித்திருக்கிறது நியான்டிக் லேப் நிறுவனம்.

இது குறித்து தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விளையாட்டை ஆடுபவர்கள், ஹாரிபாட்டரின் மாயாஜால உலகில் வரும் ஸ்பெல்களை கற்றுக்கொள்வார்கள். தங்கள் ஊரில் ஒளிந்திருக்கும் ஹாரிபாட்டர் உலகின் அதிசய மிருகங்களைப் பிடிக்கச் செல்வார்கள். அந்த மாயாஜால உலகத்தின் மற்ற கொடிய மிருகங்கள் மற்றும் எதிரிகளை எதிர்த்து போராடுவார்கள். AR தொழிநுட்பத்தின் மூலம் இதற்கும் நம் நிஜ உலகத்தையே மேடையாக ஆக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் AR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாடும் ஆட்டம்தான் என்றாலும்,  போக்கிமான் கோ ஆட்டத்தை விடவும் நிறைய ஆப்ஷன்கள், புத்தம் புதிய கேம்பிளே என்று ஆடுபவர்களை ஆச்சர்யப்படுத்தவுள்ளது என்கின்றனர். கேம் வெளியாகும் தேதியோ, கேம்பிளே குறித்த வீடியோவோ எதுவும் வெளியாகவில்லை. கேமின் பெயர் சொல்லும் லோகோ போஸ்டர் மட்டுமே வெளியாகியிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்படங்கள் முடிந்து 6 வருடங்களுக்கும் மேலான நிலையில், அதற்கு முன்னர் நடந்த கதைகளை (சமீபத்தில் வெளியான ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்) தற்போது படமாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் பழைய ஹாரிபாட்டர் கதைக்களத்தில் AR தொழில்நுட்பத்தில் இந்த கேம் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிபாட்டர் ரசிகர்கள் மீண்டும் மந்திரக்கோலை எடுக்கும் நேரம் வந்துவிட்டது!

அடுத்த கட்டுரைக்கு