Published:Updated:

விண்வெளியை ஆராய கூகுள் AI… முதல் முயற்சியிலேயே புதிய கோள் கண்டுபிடிப்பு!

விண்வெளியை ஆராய கூகுள் AI… முதல் முயற்சியிலேயே புதிய கோள் கண்டுபிடிப்பு!
விண்வெளியை ஆராய கூகுள் AI… முதல் முயற்சியிலேயே புதிய கோள் கண்டுபிடிப்பு!

விண்வெளியை ஆராய கூகுள் AI… முதல் முயற்சியிலேயே புதிய கோள் கண்டுபிடிப்பு!

ரந்துவிரிந்த பேரண்டத்தில் நம் சூரியக் குடும்பத்தைப் போல் பல்வேறு பால்வெளி மண்டலங்கள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை அறிந்துகொள்ளும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மிகமுக்கிய மைல்கல்லாக அமைந்த கண்டுபிடிப்புதான் கெப்லர்-90 (Kepler-90) என்ற நட்சத்திரமும் அதைச்சுற்றும் கோள்களும். ட்ராகோ (Draco) என்னும் விண்மீன் கூட்டத்திலிருக்கும் இந்த நட்சத்திரம் அப்படியே நம் சூரியனைப் போன்றது. இதைக் கண்டறிய உதவிய கெப்லர் தொலைநோக்கியின் பெயரே, இந்தச் சூரியக் குடும்பத்திற்கும் வைக்கப்பட்டது. நாசாவின் ஆராய்ச்சியின்படி, இந்த கெப்லர்-90 குடும்பம், பூமியிலிருந்து 2,545 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாகவும், அதில் மொத்தம் ஏழு கோள்கள் சுற்றிவருவதாகவும் அறியப்பட்டது. தற்போது இந்தக் குடும்பத்தில் எட்டாவதாக மற்றுமொரு கோள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Photos Courtesy: NASA

புதிய கோள்

கெப்லர்-90i (Kepler-90i) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கோள், அதே குடும்பத்தில் மீதம் உள்ள கோள்களை விடவும் மிகவும் சிறியது என்றாலும், நம் பூமியை விட மூன்றில் ஒரு பங்கு பெரியது. கடும்பாறையாக காட்சியளிக்கும் இதில், 420 டிகிரி செல்சியஸிற்கு வெப்பம் இருக்கிறது. இது தன்னுடைய சூரியனான கெப்லர்-90-ஐ வெறும் 14.4 நாள்களில் (பூமிக் கணக்கு) சுற்றிவிடுகிறது. இது குறித்து வாஷிங்டன் டி.சி. நாசாவின் தலைமையகத்தில் உள்ள வானியற்பியல் இயக்குநரான பால் ஹெர்ட்ஸ் பேசுகையில், “இந்த எட்டாவது கோளை கண்டுபிடித்ததின் மூலம், இந்தப் பேரண்டத்தில், அதிக கோள்கள் கொண்ட குடும்பம் என்ற நம் சூரியக் குடும்பத்தின் சாதனையை, கெப்லர் குடும்பம் சமன் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கண்டுபிடித்தது யார்?

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் ஒரு மைல்கல் அல்ல, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) குறித்த ஆராய்ச்சியிலும் ஒரு மிகமுக்கிய நிகழ்வு. ஆம், இந்தப் புதிய கோளை நாசாவிற்கு கண்டுபிடித்து சொன்னதே கூகுள் நிறுவனத்தின் AI ஒன்றுதான். கெப்லரின் கோள்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் குழு தங்களின் கெப்லர் தொலைநோக்கி சேகரித்த தரவுகளை கூகுள் நிறுவனத்தின் AI ஒன்றைவைத்து ஆராய்ந்துள்ளனர். இதில்தான் இந்தப் புதிய கோள் குறித்த உண்மை வெளிவந்துள்ளது.

எதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் AI?

கெப்லர்-90 சூரியனில் தொலைநோக்கியை நிலைநிறுத்தி அதில் ஏற்படும் ஒளி மாற்றங்களை ஆராய்வதுதான் ஆராய்ச்சியாளர்களின் வேலை. இந்த ஆராய்ச்சியின் போது, கெப்லர் சூரியனின் மேல் பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு பரப்பளவுகளில் இருள் அவ்வப்போது படரும். கெப்லர் சூரியனின் ஒளி சற்று மங்கும். இதற்குக் காரணம், அப்போது எல்லாம் கெப்லரை மறைத்து வேறு ஒரு கோள் சுற்றி வருகிறது என்று அர்த்தம். இதன்படி, பல ஆண்டுகள் காத்திருந்து தரவுகளைச் சேகரித்தது தொலைநோக்கி. இந்தத் தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏழு விதமான நிழல்கள் சீரான இடைவெளியில் கெப்லர் சூரியன் மேல் படர, ஏழு கோள்கள் அதைச் சுற்றி வருவதாக உறுதிசெய்தனர். இது முழுக்க முழுக்க தொலைநோக்கியின் தரவுகளில் மனிதர்கள் செய்த ஆராய்ச்சியின் முடிவு மட்டுமே. ஆனால், இதில் நிச்சயம் தவறுகள் இருக்கலாம் அல்லது வேறு சில ரகசியங்கள் ஒளிந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். காரணம், ஒரு சில கோள்களால் படரும் இருளை மனிதனால் உணர முடியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அது குறைந்த இடைவெளியில் தோன்றும், மிகவும் மங்கலான சமிக்ஞையாக இருக்கலாம் அல்லது தொலைநோக்கியிலிருந்து கிடைத்த கடலளவு தரவுகளில் அவை ஆராயப்படாமல் விடுபட்டுப் போயிருக்கலாம். இதைச் சரிசெய்ய யார் உதவுவார்கள்?

Photos Courtesy: NASA

AIயிடம் தஞ்சம்

20 வருடங்களுக்கு முன், கம்ப்யூட்டர்கள் எவ்வாறு எல்லாத் துறைகளிலும் நுழைந்ததோ, அதேபோல் தற்போது செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) ஒரு மாபெரும் புரட்சிக்குத் தயாராகி வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. உற்பத்தி தொழிற்சாலைகள், ஐ.டி., மேலாண்மை என்று நான்கு கால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கும் அதை விண்வெளி ஆராய்ச்சியிலும் உதவிக்கு அழைத்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்ற, கூகுள் அவர்களுக்கு உதவ முன்வந்தது.

கூகுள் AIஐயின் செயற்கை ‘நரம்பியல் பிணையம்’ எனப்படும் Artificial Neural Network, நாம் தேர்வுகளுக்கு மனப்பாடம் செய்வதுபோல் ஒரு விஷயத்தை உள்ளே ஏற்றி சேமித்துவைத்துக் கொள்வதில் கில்லாடி. ஒரு வடிவம் இப்படிததான் என்று அதனிடம் கூறிவிட்டால், அதைக் கோடிக்கணக்கில் குவிந்திருக்கும் தரவுகளிலிருந்து சுலபமாக ஸ்கேன் செய்து கண்டுபிடித்து விடும். அதனிடம், கெப்லர் சூரியனை சுற்றி அடிக்கடி தோன்றும் ஒளி வேறுபாடுகள், உருவாகும் நிழல்கள் இவற்றைப் பதிவு செய்தனர். பின்பு கெப்லர் தொலைநோக்கியின் தரவுகளை அதனிடம் கொடுக்க, அடித்தது ஜாக்பாட்! அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த கெப்லர்-90i (Kepler-90i).

இந்தச் சாதனையைத் தொடர்ந்து விண்வெளி குறித்து நாசா இதுவரை சேமித்து, இன்னமும் ஆராயப்படாமல் இருக்கும் தரவுகளை கூகுள் AI வசம் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட 1,50,000 நட்சத்திர கூட்டங்களின் தரவுகளை இந்த AI தூசி தட்டவிருக்கிறது. இதன்மூலம் பல புதிய விஷயங்கள், புதைந்துகிடந்த ரகசியங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மேலோட்டமாய் பார்த்தால் இந்த கூகுள்-நாசா கூட்டுமுயற்சி, AI பங்களிப்பு என்பது ஆச்சர்யமாக இருந்தாலும், நம் ஃபேஸ்புக்கில் படங்கள் அப்லோட் செய்தால் அந்தப் படத்தில் இருக்கும் நபர் இவர்தான் என்று காட்டும் தொழில்நுட்பத்தைப் போல்தான் இதுவும். உங்களின் ஃபேஸ்புக் கணக்கில் நீங்கள் படங்கள் அப்லோடு செய்யும்போது, உங்கள் முகத்தை, அதன் வடிவத்தை, உள்ளிருக்கும் நுணுக்கங்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் AI பதிவு செய்துகொள்ளும். பின்பு உங்களின் நண்பர்கள் ஒருவர் உங்களுடன் இருப்பதுபோல ஏதேனும் படங்கள் அப்லோடு செய்தால், அந்தப் படத்தில் உங்கள் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு, உங்களை டேக் செய்யச்சொல்லி அடம்பிடிக்கும். கிட்டத்தட்ட, அதே தொழில்நுட்பம் கொண்டுதான் இந்த கூகுள் AIயும் செயல்படுகிறது. இடமும், சூழலும்தான் வேறுவேறு.

அடுத்த கட்டுரைக்கு