Published:Updated:

கரன்ட்பில் பற்றி இனி கவலை இல்லை... வந்துவிட்டது 'மைக்ரோ க்ரிட்' கருவி!

கரன்ட்பில் பற்றி இனி கவலை இல்லை... வந்துவிட்டது 'மைக்ரோ க்ரிட்' கருவி!
கரன்ட்பில் பற்றி இனி கவலை இல்லை... வந்துவிட்டது 'மைக்ரோ க்ரிட்' கருவி!

தொழில்நுட்ப வளர்ச்சியால் நாளுக்கு நாள் ஒரு புதிய டெக்னாலஜி அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனை மக்களும் பயன்படுத்த ஆவல் கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது சில புதிய மின்சாதனப் பொருள்கள் வீட்டு உபயோகத்துக்காக நம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நம் வீட்டில் இருக்கும் மின்சாதனப் பொருள்கள் அனைத்தும் ஏ.சி.,யில் (ஆல்ட்ரனேட்டிவ் கரன்ட்) இயங்கும் வகையில் இருந்தன. மின்சாதனத்துக்கு நேரடியாக வரும் ஏ.சி., கரன்ட், டிரான்ஸ்பார்மர் மூலம் டி.சி.,யாக (டைரக்ட் கரன்ட்) மாறி சாதனத்தை இயங்கவைக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால், 'டிரான்ஸ்பார்மர்'களுக்கு பதில் எஸ்.எம்.பி.எஸ் (சுவிட்சுடு மோட் பவர் சப்ளை) என்ற சர்க்யூட் பொருத்தி ஏ.சி.,யை, டி.சி.,யாக மாற்றி தற்போது நாம் அனைவரும் பயன்படுத்திவருகிறோம். குறிப்பிட்ட இந்த சர்க்யூட்டின் வழியாக டி.சி கரன்ட்டை அனுப்பினால் அது டி.சி கரன்ட்டாகத்தான் வெளியேவரும் என மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவா் P.S. கண்ணன் கண்டறிந்தார். அதன் விளைவாக, மின்சாதனப் பொருள்களை டி.சி.,யாக (டைரக்ட் கரன்ட்) பயன்படுத்த உதவும் மைக்ரோ க்ரிட் (Micro-Grid) என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றுக்காக தேனி வந்திருந்தவரிடம், மைக்ரோ க்ரிட் கருவியின் பயன்கள் என்ன, இதனால் மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதுகுறித்துப் பேசினோம்.

“அடிப்படையில் நான் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மாணவன். அதே துறையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன். இன்று எங்கு திரும்பினாலும் மின்சாரப் பொருள்களாகத்தான் இருக்கின்றன. ஒன்று, மின்சாரத்தைப் பெற்றால் மட்டுமே இயங்கும் என்ற நிலையில் உள்ள பொருள்கள். மற்றொன்று, மின்சாரத்தைப் பெற்று பேட்டரியில் சேமித்து இயங்குபவை. இவை இரண்டுக்கும் அடிப்படை மின்சாரம்தான். நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட மின்சாரத்தை பல வழிகளில் பெறுகிறோம். அதனைப் பயன்படுத்துவதில்தான் நாம் கோட்டை விடுகிறோம். தற்போது உள்ள பெரும்பாலான மின்சாதனப்பொருள்கள் அனைத்தும் SMPS (Switch Mode Power Supply) என்று சொல்லக்கூடிய சுவிட்சுடு மோட் பவர் சப்ளை மூலமாக இயங்கக்கூடியவை. எவை எவை என ஒரு பெரிய பட்டியலே போடலாம். எல்.இ.டி. டிவி முதல் பிரிட்ஜ் வரை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏ.சி கரன்டை டி.சி. கரன்ட்டாக மாற்றும் இந்த சர்க்யூட்டின் வழியாக டி.சி கரன்டை அனுப்பினால் அது டி.சி கரன்ட்டாக வருவதைக் கண்டறிந்தேன். டி.சி கரன்ட் மூலம் இயங்கும் பெரும்பாலான மின்சாதனப் பொருள்களில் நாம் ஏன் டி.சி கரன்ட்டை நேரடியாக செலுத்தக்கூடாது என்ற யோசனையின் முடிவில் உருவானதே ‘மைக்ரோ க்ரிட்’ (Micro-Grid) என்ற கருவி.

சூரிய ஒளி மின்சாரம் என்பது நமக்கு இயற்கை வழங்கும் ஒரு டி.சி கரன்ட். அதனை நேரடியாக நம் வீட்டில் இருக்கும் மின்சாதனப் பொருள்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது உள்ள இன்வெட்டர் முறையில் இல்லாமல், நேரடியாக பேட்டரியில் சேமிக்கும்போது மின் இழப்பு ஏற்படாது. இன்வெட்டர் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது நாம் பார்த்திருப்போம், இன்வெட்டர் சூடாகும்; இது மின் இழப்பு. ஒரு மின்சாதனப் பொருள் சூடானால் மின் இழப்பு ஏற்படுகிறது என்று அர்த்தம். இன்வெட்டர் இல்லாமல் மைக்ரோ கிரிட் கருவி மூலம் நேரடியாக பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கும்போது மின் இழப்பு ஏற்படாது. மின்சாரமும் மிச்சமாகும், மின் கட்டணமும் குறையும் அதற்கு எனது மைக்ரோ கிரிட் கருவி உதவி செய்யும். சூரிய ஒளி மூலம் கிடைக்கும்  மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுவதால், இரவில் கூட டிவி, லைட், பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியும்.” என்றார்.

நேரடியாக மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள், இன்வெட்டர் பயன்படுத்தினால்தான் மின்சாதனப்பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறதே?

“உண்மைதான். அது ஒரு காலம். ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் மேலே சொன்னது போல, SMPS ( Switch Mode Power Supply) மூலம் இயங்கும் மின்சாதனப் பொருள்கள் நம் வீட்டை நிறைந்திருக்கின்றன. அவை, LED TV, DVD PLAYER, SET TOP BOX, MOBILE CHARGER, LAP TOP, COMPUTER, CCTV CAMERA DVR, LED BULB, CFL LIGHTS, ELECTRONICS TUBE LIGHTS, ELECTRONICS CEILING FAN, ELECTRONICS TABLE FAN, INDUCTION ELECTRIC STOVE, VFD DRIVES, INVERTED AIR CONDITIONER, FRIDGE. என்று ஒரு பெரும் பட்டியலே போட முடியும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உதாரணத்துக்கு, நாம் வாங்கும் மின்சாதனப் பொருள் ஒன்றின் பின்பக்கம், ’180 - 240 AC ல் இயங்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது ஏசியில் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அந்த மின்சாதனம் 180 - 300 DC யில் இயங்கும். இதனை மின்சாதனப்பொருள் தயாரிக்கும் நிறுவனம் குறிப்பிடுவதில்லை.! குறிப்பிட்டால்தான் நீங்கள் DC யில் பொருள்களை இயக்கிவிடுவீர்களே. மின் இழப்பு இருக்காதே. வெப்பத்தால் வேகமாக பொருள்கள் சேதமாகாதே. இதனைக் கருத்தில்கொண்டு, எனது உதவியாளர் கருணாநிதி மூலம், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். அதில், 'மின்சாதனப் பொருள்களுக்குப் பின்னால் ஏ.சி., கரன்ட்டில் இயங்கும் என்று குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர்கள், டி.சி., கரன்டிலும் இயங்கும் என்பதைக் குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்டால் நுகர்வோர், டி.சி., கரன்ட் கிடைக்கும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த முன்வருவார்கள்; சூரிய ஒளி மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்;  சுற்றுச்சூழல் வெப்பமயமாவதைத் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டேன். எனது கடிதத்தை மத்திய மின்சார அமைச்சகத்துக்கு அனுப்பினார் பிரதமர். அவர்கள், IBS (பிரோ ஆப் இந்தியன் ஸ்டேன்ட்டர்ஸ்) க்கு அனுப்பி பரிசீலித்தார்கள். அதன் தொடர்ச்சியாக, ’மின் சாதனங்களில் 'ஹை ஒல்டேஜ்' டி.சி (180-300 வோல்ட்) என்று குறிப்பிடுவதற்கான பணிகள் நடைமுறையில் உள்ளது’ என எனக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்பினார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

வீணாகும் சூரிய ஒளி மின்சாரத்தைச் சேமித்து நம் கைகளில் இருக்கும் மின்சாதனப் பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சார சேமிப்பும், மின்சாரப் பொருள்கள் வெப்பமாவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும். இதனால், என்னால் முடிந்த அளவு பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று சூரிய ஒளி மின்சாரத்தின் அவசியம்குறித்து இலவச வகுப்புகள் எடுக்கிறேன். எனது கண்டுபிடிப்பான ‘மைக்ரோ க்ரிட்’ கருவிகள்குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களையும் புதிய கருவிகள் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்துகிறேன். சில நண்பர்கள் என்னிடம் வந்து எனது கண்டுபிடிப்பை அவர்களது வீட்டில் செயல்படுத்திக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கும் செய்துகொடுக்கிறேன். மக்கள் சூரிய ஒளி மின்சாரத்தின் அவசியத்தை உணர வேண்டும். அதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன்.’’ என்றார் புன்னைகையோடு.

முனைவர் P.S. கண்ணனுடன் பேச : 98946-45308 / 99944-36660

அணு, அனல், நீர், காற்று, சூரிய ஒளி என பல்வேறு வழிகள் நாம் மின்சாரம் தயாரித்தாலும், மிகவும் எளிமையான, சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாதது சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தான். இந்த மின்சாரத்தை சேமித்துப் பயன்படுத்த உதவும் ‘மைக்ரோ க்ரிட்’ கருவி போன்ற, புதிய கண்டுபிடிப்புகளை மத்திய மாநில அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும்.!