Published:Updated:

விர்ச்சிவல் ரியாலிட்டியில் ஐ.பி.எல்... டி.வி மூலம் மைதானத்துக்கே செல்லலாம்! #IPL

விர்ச்சிவல் ரியாலிட்டியில் ஐ.பி.எல்... டி.வி மூலம் மைதானத்துக்கே செல்லலாம்! #IPL
விர்ச்சிவல் ரியாலிட்டியில் ஐ.பி.எல்... டி.வி மூலம் மைதானத்துக்கே செல்லலாம்! #IPL

விர்ச்சிவல் ரியாலிட்டியில் ஐ.பி.எல்... டி.வி மூலம் மைதானத்துக்கே செல்லலாம்! #IPL

#IPL முதல் சீசன் நடைபெற்றது 2007. ஸ்மார்ட்போன்களே பெரிதாக பிரபலமடையாத காலம் அது. அன்று தொடங்கிய இந்த கிரிக்கெட் லீக் இத்தனை வருடங்களில் டிஜிட்டல் முன்னேற்றங்களில் பல புதுமைகளைக் கண்டுள்ளது. இதில் முக்கியமானது ஆன்லைன் ஸ்ட்ரீமிங். இது மக்களை எங்கிருந்தும் மேட்ச் பார்க்க உதவியது. கடந்த சீசன்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சோனியிடமும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமம் ஹாட்ஸ்டாரிடமும் இருந்தது. ஆனால், சமீபத்தில் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் முழுவதையும் தன்வசப்படுத்தியது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதன்மூலம் இந்த சீசன் ஒளிபரப்புகுறித்த விஷயங்களில் முழுஅதிகாரமும் இப்போது ஸ்டார் இந்தியா கையில். இந்நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியாக விர்ச்சுவல் ரியாலிட்டி ஒளிபரப்பை இந்த சீசனில் கொண்டுவர மிகவும் மும்முரமாக ஸ்டார் இந்தியா இறங்கியிருக்கிறது.

ஐ.பி.எல் தனது 11-வது சீசனில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இதைப்போன்று புதிய தொழில்நுட்பங்களை பார்வையாளர்களுக்குக் கொண்டுசெல்வதின் மூலம் உலகின் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றான ஐ.பி.எல் தொடருக்கு இது மேலும் பெருமைசேர்க்கும் என்றே கூறலாம். எல்லாம் நினைத்தபடி நடந்து இந்த சீசனில் விர்ச்சுவல் ரியாலிட்டி சாத்தியமானால் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கியமான விஷயமாகும். 

இதை தனது நீண்டநாள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து செய்யப்போகிறது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் வருவாய்த்துறைத் தலைவராக இருக்கும் பிரபு சிங், ஐ.பி.எல் 2018ல் தங்கள் செய்யவிருக்கும் புதுமைகளைப் பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதே நிகழ்ச்சியில் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி பிளான் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டபோது “ஆம்… அதற்கான வேலை நடக்கிறது” என அவர் கூறியிருக்கிறார். 2018-ம் வருடத்தை மாற்றப்போகும் 10 மீடியா மாற்றங்கள் பற்றி டெல்லியில் நடந்த சி.ஐ.ஐ பிக் பிக்சர் சம்மிட்டிலும் இது குறிப்பிடப்பட்டது. ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றிய முழுமையான விவரங்கள் தர ஹாட்ஸ்டார் மறுத்துவிட்டது. ”எல்லாவற்றையும் பொறுத்திருந்துப் பாருங்கள் இன்னும் நாள்கள் பல இருக்கின்றன” என்றும் கூறியுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி மட்டுமின்றி இன்னும் சில மாற்றங்களையும் இந்த சீசன் ஒளிபரப்பில் எதிர்பார்க்கலாமாம். இம்முறை ஸ்ட்ரீமிங்கின்போது ஸ்கோர் பார்க்கும் முறையும் பலவகைகளில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பொறுத்தவரை, அந்த வீடியோக்களைத் தயாரிப்பது எந்த அளவு கடினமோ அதைவிட இந்தத் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பது மிகக்கடினம். இதற்காக சிறப்புப் போட்டிகளின் மூலம் பார்வையாளர்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களைக் கொண்டுசேர்க்கும் வழிகளை யோசித்துக்கொண்டு இருக்கிறதாம் ஹாட்ஸ்டார். எல்லாம் நல்லபடியாய் நடந்தால் வீட்டில் இருந்தபடியே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கும் உணர்வை இதன்மூலம் மக்கள் பெறமுடியும். சொல்லமுடியாது கிரவுண்ட்க்கு உள்ளே பிளேயர்களின் நடுவே கூட நம்மை கூட்டிச் செல்ல வாய்ப்புகள் உண்டு.

எல்லாம் சாத்தியப்படுமா என்று தெளிவான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை, ஹாட்ஸ்டார் சொல்வதுபோல் என்னென்ன ஆச்சர்யங்கள் இந்த ஐ.பி.எல்லில் காத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

இந்த ஆண்டுதான் கனடா, நார்வே போன்ற நாடுகள் VR தொழில்நுட்பத்தைத் தொலைக்காட்சிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. முதல் VR ஷோ நார்வே நாட்டில் ஒளிப்பரப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு