Published:Updated:

மாணவர்கள் வகுப்பில் தூங்கிவிடுகிறார்களா? காரணமும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

மாணவர்கள் வகுப்பில் தூங்கிவிடுகிறார்களா? காரணமும் தவிர்க்கும் வழிமுறைகளும்!
மாணவர்கள் வகுப்பில் தூங்கிவிடுகிறார்களா? காரணமும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

“தூக்கம் வருது, நான் கிளாஸ்க்கு (class)  வரல” என்று பின்வாங்கும்   நண்பனை "வாடா... கிளாஸ்ல போய் தூங்கிக்கலாம்" என ஊக்கப்படுத்தி அழைத்துச்செல்லும் மகான்கள் வாழும் நாடிது. கடுமையான சிலபஸ், 8 மணி நேர வகுப்பு, பதின் பருவ மாற்றங்கள் என பல பிரச்சனைகளைச் சமாளித்து  கொண்டிருக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு கவனிக்கப்படாத பிரச்னை வகுப்பில் வரும் தூக்கம்.

இந்தத் தூக்கம், மாணவர்களின் கற்றல் திறனைக் குறைப்பதோடு உடல் மற்றும் மனநலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்கின்றன ஆய்வுகள். இந்தக் குட்டித் தூக்கத்திற்கான முக்கிய காரணம், நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.

குட்டித் தூக்கத்தை எப்படி எதிர்கொள்வது?

1) வகுப்பறையை வெளிச்சமாக வைத்துக் கொள்ளுங்கள்:

இருட்டான வகுப்பறையில், ஒளிப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, அது இரவு நேரம் என்று தவறான தகவல் மூளைக்கு அனுப்பப்படும். இதனால் உங்கள் மூளைத் தூங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடும். அதன் பிறகு நீங்கள் தூங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

2)காற்றோட்டம் சீராக இருக்க வேண்டும்:

வகுப்பறையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடும்பொழுது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும். உங்கள் இரத்தத்தில் ஆக்சிஜன் குறையத் தொடங்கும். சுற்றி கார்பன்டையாக்சைட் அதிகரிப்பதால் உடல் மயக்க நிலைக்கு செல்லும். வகுப்பறையில் காற்றோட்டம் சீராக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

3)சீரான இரவுத் தூக்கம்:

இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அவற்றில் நீங்கள் பார்க்கும் தகவல்களை இரவு முழுக்க பிராசஸ் செய்து கொண்டிருக்கும் உங்கள் மூளை. அடுத்த நாள் காலை நீங்கள் எழுந்தாலும் உங்கள் மூளை தூங்கிக் கொண்டிருக்கும்.

4)வகுப்பிற்கு மூளையை தயார் படுத்துங்கள்:

அன்றைய வகுப்பிற்கான பாடம் குறித்த குறைந்த அளவு தகவல்களையாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அட்லீஸ்ட், லக்சரின் (lecture )தலைப்பாவது தெரிந்திருப்பது அவசியம். தெரிந்த தகவல் ஒன்றை உள்வாங்கிக் கொள்ளும்பொழுது உங்கள் மூளை “ஹேப்பி மோட்”-ல் இருக்கும். இதனால் தகவலை உள்வாங்க செலவாகும் ஆற்றல் குறைவதால், உங்கள் மூளையைச் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

5)உணவு முறை:

வகுப்பிற்கு செல்லும் முன் அதிக அளவு உணவை உட்கொண்டால் உங்கள் உடலில் உள்ள ஆக்சிஜன் முழுக்க செரிமானத்திற்காக வயிற்றுக்கு  திசைதிருப்பப்  படும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறையும். அதற்காக கொஞ்சம் கூட சாப்பிடாமல் வகுப்பிற்கு சென்றால் தூங்க மாட்டீர்கள். மயங்கி விடுவீர்கள்.

6.பேராசிரியரிடம் பேசுங்கள்:

உங்கள் பேராசிரியர் மெலிதான குரலில் பேசினாலோ அல்லது ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொன்னாலோ, உங்கள் மூளை ‘கவனிக்கத் தேவையில்லை’ என்ற டேக்(tag)-ஐ வெளியிடும். அதேபோல எழுத்து சின்னதாக இருந்தாலும் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வகுப்பில் தொடர்ந்து இது நடந்தால் உங்கள் பேராசிரியரிடம் வெளிப்படையாக இது குறித்து பேசுங்கள். அவர் உழைப்பும், உங்கள் படிப்பும் காப்பாற்றப்படும்.

Quick hacks:

1) கால்களை வேகமாக ஆட்டுங்கள் , இது உங்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
2) சிறிது நேரம் பிடித்த வடிவத்தை வரையுங்கள்.
3) பேனாவை வேகமாக அசையுங்கள்.
4) பிடித்த உணவின் பிம்பத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
5) சாக்லேட் சாப்பிடுங்கள். ஆசிரியருக்கும் ஒன்று கொடுப்பது இருவருக்ககும் நல்லது.
6) குளிர்ந்தத் தண்ணீர் குடிக்கலாம்.

அல்லது , உலகத்தை எப்படி காப்பாற்றுவது எனக்கூட யோசிக்கலாம்.