Published:Updated:

பிணத்தை ஒளிக்க 'சிரி'யிடம் ஐடியா கேட்ட கொலைகாரன்... மாட்டிவிட்ட ஐபோன்! #GadgetTippedCrimes அத்தியாயம் 4

பிணத்தை ஒளிக்க 'சிரி'யிடம் ஐடியா கேட்ட கொலைகாரன்... மாட்டிவிட்ட ஐபோன்! #GadgetTippedCrimes அத்தியாயம் 4
பிணத்தை ஒளிக்க 'சிரி'யிடம் ஐடியா கேட்ட கொலைகாரன்... மாட்டிவிட்ட ஐபோன்! #GadgetTippedCrimes அத்தியாயம் 4

ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவன் பெட்ரோ ப்ராவோ(Pedro Bravo). 20 வயதாகும் பெட்ரோ தனது பள்ளிக்கால நண்பன் கிறிஸ்டியன் (Christian Aguilar) என்பவனுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தான். இருவரும் ’நட்புக்காக’ படத்தின் சரத்குமார் - விஜயகுமாரின் இளமை வெர்ஷன் என சொல்லலாம். அவ்வளவு டிகிரி தோஸ்துகள். இருவரும் ஆப்பிள் ரசிகர்கள். இசை விரும்பிகள். விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்திலும் இருவருக்கும் ஒரே ரசனை. பள்ளி முடித்து ஒரே பல்கலைகழகத்தில் சேர்ந்திருந்தார்கள். 

2012ம் வருடம். ஒருநாள் இரண்டு நண்பர்களும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பிடித்த சிடிக்களை வாங்குகிறார்கள். பின், அறைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், அடுத்த நாள் கிறிஸ்டியனைக் காணவில்லை. பெட்ரோவிடம் போலிஸார் துருவி துருவி விசாரித்திருக்கிறார்கள். பெட்ரோ மீது போலிஸுக்கு சந்தேகம் இருந்தாலும் ஆதாரம் எதுவுமில்லை. மேலும், பல ஆண்டுகால நண்பர்கள் அவர்கள். 

பின்னர், கிறிஸ்டியனின் உடல் அருகிலிருந்த ஒரு காட்டுப்பகுதிக்குள்ளிருந்து மீட்கப்பட்டது. கிறிஸ்டியனை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற எந்த க்ளூவும் போலிஸுக்கு கிடைக்கவில்லை. கொலை செய்வதற்கான நோக்கம் எதுவும் பெட்ரோவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதியதால் அப்போது அவரை கைது செய்யவில்லை.

AP photo

கிறிஸ்டியனின் வழக்கில் வேறு துப்பு எதுவும் கிடைக்காததால் மீண்டும் பெட்ரோவின் வாழ்க்கையை அலசியது போலீஸ். அதில் கிறிஸ்டியனுக்கும் பெட்ரோவுக்கும் ஒரு தோழி இருந்தது தெரிய வந்தது. அவரும் இரண்டு நண்பர்களுடன் ஒரே பள்ளியில் படித்தவர். பெட்ரோவும் அந்தப் பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். பின், சில காரணங்களால் பிரிந்திருக்கிறார்கள். அந்தப் பென்ணுடன் கிறிஸ்டியன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அது பெட்ரோவுக்கு பிடிக்கவில்லை. போலிஸின் விசாரணையில் இந்தக் கதை தெரிய வந்ததும் பெட்ரோவை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 28, 2012ம் தேதி அன்று பெட்ரோவை கொலை செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்து கைது செய்தது போலீஸ். எதற்கும் அசையாத பெட்ரோவை போலிஸிடம் மாட்டிவிட்டது அவனது ஐபோன் தான். 

பெட்ரோவின் மொபைலை போலீஸ் எடுத்து ஆய்வு செய்தது. அதில், சம்பவம் நடந்த இரவு 11.31லிருந்து 12 மணிக்குள் ஐபோனின் ஃப்ளாஷ் லைட்டை 9 முறை ஆன் செய்திருந்தது மொபைலில் பதிவு ஆகியிருந்தது. அதற்கான காரணம் கேட்டபோது குழப்பமான பதிலைகளையே பெட்ரோ தந்தான். பின், மொபைலில் ’சிரி’ பதிவுகளை போலீஸ் ஆராய்ந்தது. சிரி (SIRI) என்பது ஐபோனில் இருக்கும் வாய்ஸ் அஸிஸ்டெண்ட். சம்பவம் நடந்த நாளன்று சிரியிடம் சில உதவிகளைக் கேட்டிருக்கிறான் பெட்ரோ. அதில் முக்கியமானது “I need to hide my roommate” என்ற கேள்வி. இவற்றை ஆதாரங்களாக வைத்து பெட்ரோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

நீதிமன்ற விசாரணையில் பெட்ரோவின் மொபைலில் சம்பவம் நடந்த இரவின் மேப்ஸ் தகவல்களை பெட்ரோ வழக்கறிஞர் முன்வைத்தார். அது, சடலம் கிடைத்த இடத்துக்கு பெட்ரோ போகவில்லை என சொன்னது. மேலும், சண்டையில் பெட்ரோ கிறிஸ்டியனை அடித்தது உண்மைதான். ஆனால், கொலை செய்யவில்லை என வாதிட்டது பெட்ரோ தரப்பு. டெக்னாலஜி சாட்சிகளை, அதே டெக்னாலஜியின் இன்னொரு சாட்சி மூலம் முறியடிக்கப் பார்த்தார் வழக்கறிஞர். அத்தனை சாட்சிகளையும் ஆராய்ந்த நீதிபதி 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெட்ரோவுக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

கிறிஸ்டியனுக்கு ஒரு தம்பி உண்டு. அவனும் தீர்ப்பு வந்த ஆண்டுதான் அண்ணன் படித்த பல்கலைகழகத்தில் சேர்ந்திருந்தான். “என் அண்ணனுடன் இங்க இருக்க நினைத்தேன். அது நடக்காமல் போய்விட்டது” என அழுதார்.

பெட்ரோ தீர்ப்புக்கு பிறகு இப்படி சொன்னான். “யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. என் நண்பனை நான் கொலை செய்யவிலை”