Published:Updated:

ஆசீர்வாதம் செய்யும் உலகின் முதல் ரோபோ பாஸ்டர்! ரசீது வாங்க மறக்காதீர்கள்

ஆசீர்வாதம் செய்யும் உலகின் முதல் ரோபோ பாஸ்டர்!  ரசீது வாங்க மறக்காதீர்கள்
ஆசீர்வாதம் செய்யும் உலகின் முதல் ரோபோ பாஸ்டர்! ரசீது வாங்க மறக்காதீர்கள்

பார்ப்பதற்கு ஏ.டி.எம் மெஷின் போல இருக்கிறது அந்தப் பொருள். கூடுதலாக இரண்டு கைகள், தொடுதிரையை வயிறாகப் பாவித்து அதற்கு மேலே கண்களின் புருவங்கள் மட்டும் அசையக்கூடிய தலை. ஒளி தட்டுத் தடுமாறி ஊடுருவக்கூடிய அக்ரிலிக் கண்ணாடிகள், மரத் துண்டுகள், மேலே தகடுகள். இதைக் கொண்டு தான் அந்த ரோபோவை தயாரித்திருக்கிறார்கள். ஒரு பெண் அதற்கு முன் வந்து நிற்கிறாள். பல மொழிகளில் வணக்கம் சொல்கிறது. வேண்டிய மொழியைத் தெரிந்தெடுக்கச் சொல்கிறது. அந்தப் பெண் ஆங்கிலம் தேர்ந்தெடுக்கிறாள்.

“ஆண் குரல், பெண் குரல், எந்தக் குரலில் உங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்?”

ஆண் குரலைத் தேர்ந்தெடுக்கிறாள். எந்த விதமான ஆசீர்வாதம் வேண்டும் என்பதைக்கூட அவளே தேர்ந்தெடுக்கிறாள். இப்போது அந்த ரோபோ தன் இரண்டு கைகளையும் மெதுவாக தன் தலைக்கு மேலே உயர்த்துகிறது. வெள்ளை LED லைட்டுகள் ஒளிர்கின்றன. கரகர வெண்கலக் குரலில் ஆசீர்வாதம் செய்கிறது. ஆசீர்வாதம் பெற்ற சந்தோஷத்துடன் அந்தப் பெண் அங்கிருந்து நகர முற்படுகிறாள். உடனே ரசீது வேண்டுமா என்று அதே குரல் ஒலிக்கிறது. பெண் அந்த தொடு திரையை மீண்டும் சொடுக்க, ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுத்த பின்பு வரும் ரசீதைப் போல ஒரு ரசீது வெளியே வருகிறது. இது நடந்தது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனி நாட்டில்.

கிறிஸ்தவ மதத்தின் ப்ரோட்டஸ்டண்ட் இனத்தவர் கடந்த மே மாதம் நடத்திய ‘உலக சீர்திருத்தக் கண்காட்சி’யில் (World Reformation Exhibition) வந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது இந்த ரோபோ பாஸ்டர். BlessU-2 என்று அழைக்கப்படும் இது கிட்டத்தட்ட ஒரு பெரிய iPod போலத் தான். ஹெஸ்ஸி மற்றும் நாசோவிலுள்ள ப்ரோட்டஸ்டண்ட் சர்ச் (Protestant Church in Hesse and Nassau) தான் இந்தப் பரிசோதனை முயற்சியைச் செய்துள்ளது. வளரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆன்மிகத்துக்கும் இடமுண்டு என்று நிரூபிக்கவே இதைச் செய்ததாக கூறப்படுகிறது.

ஜெப்ரி மியர்ஸ், என்னும் அமெரிக்க பிரஸ்பீடிரியன் போதகர் ஒருவர் தற்போது ஜெர்மனியில் சேவையாற்றி வருகிறார். “இந்த ரோபோவுடனான ஒரு சந்திப்புக்குப் பிறகு, ஒருவரின் மனதில் பல கேள்விகள் எழும். ‘ஆசீர்வாதம் என்பது எதற்கு?’ ‘என் நம்பிக்கை என்பது யாரின் மேல் வைக்கப்படுகிறது?’ ‘ஆசீர்வாதம் என்ற ஒரு அனுபவத்தைப் பெற தேவையானவை அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனது மட்டும் தானே?’ என்று அவை பல புரிதல்களை ஏற்படுத்தும்” என்று கூறும் அவர், வைத்த முதல் வாரத்திலேயே 600 ஆசீர்வாதங்களை BlessU-2 ரோபோ வழங்கியதாகச் சிலாகிக்கிறார்.

இந்த ரோபோ பாஸ்டர் பெற்ற வெற்றி அறிவியல் உலகில் மட்டுமல்ல, ஆன்மிக உலகிலும் பல பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது. ஹாலிவுட் அறிவியல் புனைவுப் படங்களில் வருவதுபோல ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை கடவுளாகப் பாவித்து மக்கள் வணங்கும் நாள் தொலைவில் இல்லை என்கின்றனர். நம் BlessU-2 ரோபோவை உருவாக்கிய எழுத்தாளர் மற்றும் இறையியலாளர் ஃபேபியன் வோக்ட், “AI ஆன்மிகத்தில் வருவதனால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால், சரியான கேள்வியை கேட்க இது உதவி செய்யும்” என்கிறார்.

“ஆசீர்வாதம் என்பது எப்படி வேலை செய்கிறது? கடவுள் ரோபோவை வைத்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிப்பதை ஏற்றுக்கொள்ளலாமா? ரோபோவின் வருகையால் ஆன்மிகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அதனால் சமுதாயத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?”

இங்கே நிறுவப்பட்டிருக்கும் ரோபோ செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence) வகையைச் சேர்ந்தது. மனிதர்கள் செய்யும் வேலையை மட்டுமே இதனால் செய்ய முடியும். மற்றொரு வகையான செயற்கை சூப்பர் நுண்ணறிவு (Artificial Super Intelligence) தான் மனிதர்களைவிட அறிவு மிகுந்தது. நம் சிட்டி ரோபோவைப் போல! AI தொடர்பான முன்கணிப்பு மற்றும் கொள்கை பகுப்பாய்வு செய்யும் பால் செயர்ஸ், “தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில், நம்மிடம் பெரும்பாலும் இருப்பது செயற்கை பொது நுண்ணறிவு சார்ந்த ரோபோக்கள் தான். இதன் அடுத்த கட்டம் செல்லும்போது, ஆன்மிக கேள்விகள் மட்டுமல்ல, அறிவியல் ரீதியான விடைத்தெரியா கேள்விகளுக்கும் அவை விடைகளைத் தரலாம். விடை தருவது அவை என்றாலும், அதற்கு அப்படி இரு அறிவை ப்ரோக்ராம் செய்வது மனிதன்தான். இது மனிதனே அவனால் முடியாத ஒரு காரியத்தை செய்ய அவனைவிட மேம்பட்ட ஒன்றைக் கண்டறிந்து அதைச் சாத்தியமாக்குகிறான்!” என்கிறார். இதைக் கேட்கும்போது, இப்போது இங்கே கடவுள் யார் என்ற கேள்வி எழாமலில்லை.

இப்போது ரோபோ பாஸ்டர் என்பதுபோல, பின்பு ரோபோ சாமியார்கள் வரலாம். அதீத தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு பின்பு இதுதான் கடவுள் என்றுகூட ஒரு செயற்கை சூப்பர் நுண்ணறிவை நிறுத்தலாம். ஆனால், அப்படி நிறுத்தப்படுவதை நாம் எந்தக் கோணத்தில் பார்ப்போம்? தொழில்நுட்பம் என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது, முடிவேயில்லாதது. உதாரணமாக, தானியங்கி கார்கள் 1980களில் அறிவியல் புனைவு மட்டுமே. ஆனால், தற்போது அவை நிஜத்தில் உலாவுகின்றன. அதே 1980-ம் வருடத்துக்குச் சென்று அப்போதுள்ள மனிதனிடம் தற்போதைய புதிய ஐபோனை கொடுத்தால் அவன் ஒரு போன் இதெல்லாம் செய்யுமா என்று அதிசயித்துப்போவான். எனவே, பின்னாளில் செயற்கை நுண்ணறிவைக் கடவுள் என்று நிறுத்தினால், “அடுத்த அப்டேட் எப்ப சார் விடுவீங்க?” என்று கடந்து விடுவார்கள். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ஆன்மிகம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதில் என்னதான் செயற்கை நுண்ணறிவுடன் சாமியார் ரோபோக்கள் வந்தாலும், மக்கள் அதை முழுமையாக ஏற்பார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் தான் செயற்கை நுண்ணறிவு என்பது தற்போதுள்ள கடவுள்களைப் போல் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நம்புகின்றனர் இந்த ரோபோவை பார்த்த மதபோதகர்கள்.

இந்தத் தர்க்கத்திற்குள் செல்லாமல், இதை ஒரு புது முயற்சியாக மட்டுமே கடந்து சென்றுவிட வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்த, அவன் வாழ்வைச் சிறக்கவைக்க வரும் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஓர் ஆசீர்வாதம்தான் என்று புரிந்துகொண்டாலே போதும்!