Published:Updated:

ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!

ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!
ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!

ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!

முன்பெல்லாம் இன்டர்நெட் டேட்டா பேக் என்றால், மாதத்திற்கு 1 ஜிபி மட்டுமே. அதை வைத்தே 28 நாள்கள் ஓட்டுவோம். தப்பித்தவறி யூ டியூபில் வீடியோ ஏதாவது ஓபன் செய்துவிட்டால், அவ்வளவுதான்! அன்று முழுவதும் இன்டர்நெட்டே ஆன் செய்யாமல் அதற்கு ஈடுகட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா கொடுத்தாலும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. காரணம், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அசத்தல் 4ஜி பிளான்களை அள்ளிவழங்கியதே! அதற்குப் போட்டியாக மற்ற நிறுவனங்களும் கோதாவில் இறங்க, பயனீட்டாளர்களுக்கான நமக்குத்தான் ஏக குஷி! நானும் களம் காண்கிறேன் என்று இந்திய அரசின் நிறுவனமான BSNL முயற்சி செய்தும் டாப் 3-யில் அதனால் கால்பதிக்கவே முடியவில்லை.

நிலைமை இப்படியிருக்க, தற்போது இந்தப் போரில் இன்னும் அதிக பலத்துடன் களமிறங்கவிருக்கிறது ஆந்திர அரசு. அம்மாநில அரசின் Andhra Pradesh State Fibernet Limited நிறுவனத்தைக் கொண்டு இன்டர்நெட், டெலிபோன், டிவி என்ற மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் குறைந்த செலவில் வழங்கும் புதிய பிளான்களை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச தொகையான ரூ.149க்கு, 250 டிவி சேனல்கள், அன்லிமிடெட் பிராட்பேண்ட் இன்டர்நெட், டெலிபோன் சேவை என்று கலக்கல் காம்போவாக பல பிளான்களை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளே எல்லா வீடுகளுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் எல்லாத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை என்பதுதான். 2018 ஏப்ரல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 25 லட்சம் குடும்பங்களை இந்த Andhra Pradesh Fiber Grid திட்டத்தில் இணைப்பது என்ற இலக்குடன் இதைத் தொடங்கியுள்ளனர்.

மோடம் இல்லாமல் இன்டர்நெட்

இன்டர்நெட் சேவை பயன்படுத்த தனியாக மோடம் எதுவும் தேவையில்லை. கேபிள் சேவைக்காகக் கொடுக்கப்படும் செட்டாப் பாக்ஸே wifiயாக செயல்பட்டு இன்டர்நெட் சேவையை வழங்கப்போகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீடும் wifi zoneகளாக மாறிவிடும். இன்டர்நெட் சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று வீட்டிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும். டிஜிட்டல் திரையில் எந்தச் சேவை வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்தால் போதும். அந்த பிளான் ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இதன் மூலம் வீட்டிலிருந்து கொண்டே, ஒருவர் அரசுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்ப முடியும்.

வீட்டிற்கான இன்டர்நெட், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவையில் கிடைக்கும் பிளான்கள்

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பிளான்கள்

ஸ்மார்ட் டிவி தேவையில்லை

நவீன தொழில்நுட்பம், கேபிள் சேவை என்றாலே, ஸ்மார்ட் டிவி தேவையோ என்ற கேள்வி எழும். இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஸ்மார்ட் டிவி தேவையில்லை. இந்த கனெக்ஷனை வாங்கிவிட்டாலே, உங்கள் சாதாரண டிவி, ஒரு கம்ப்யூட்டர் போல மாறிவிடும். ஆண்ட்ராய்டு ஆப்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம், யூ டியூப் பார்த்துக்கொள்ளலாம், கூகுள் சர்ச் செய்யலாம் என்று வசதிகளோ ஏராளம்.

‘வாவ்’ செட்டாப் பாக்ஸ்கள்

இரண்டு பாக்ஸ்கள் இந்தச் சேவையில் அளிக்கப்படும். ஒன்று கம்ப்யூட்டர் CPUவாகவும், மற்றொன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் போலவும் செயல்படும். வயர்லெஸ் கீபோர்டு மாட்டிக்கொண்டால், உங்கள் டிவி இப்போது ஒரு கம்ப்யூட்டர். MS Office, PDF என எல்லா அலுவலக வேலைகளையும் இதில் செய்துகொள்ளலாம். இந்த பாக்ஸில் இருக்கும் router wifi மூலம் உங்கள் டேப், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றில் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பாக்ஸில் கேமரா, மற்றும் லேண்ட்லைன் போனை இணைத்துவிட்டால் வீடியோ காலிங் செய்யலாம். 5 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்தப் பாக்ஸ்கள் ஆண்ட்ராய்டு 5.1.1 வெர்ஷன் கொண்டு இயங்கும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் என்பதால் யூ டியூப், ஸ்கைப், IMO, ஃபேஸ்புக், அமேசான், ஃப்ளிப்கார்டு போன்ற பிரபல ஆப்களை சுலபமாகப் பயன்படுத்த முடியும். விரைவில், மற்ற ஆப்களை பயன்படுத்தவும் வசதிகள் வரும். அலாரம் வைக்க முடியும். பிடித்த டிவி நிகழ்ச்சிகளை ரெகார்டு செய்யமுடியும். DVDகளை பிளே செய்து பார்க்க முடியும். ‘Video on Demand’ சேவை மூலம் 425க்கும் மேல் படங்களைப் பார்க்க முடியும். பட எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவிருக்கிறார்கள்.

டிஜிட்டல் இந்தியா உருவானதா தெரியவில்லை. ஆனால், இந்தத் திட்டம் ஸ்கெட்ச் போட்டது போலவே உயிர்பெற்று விட்டால், டிஜிட்டல் ஆந்திரா நிச்சயம் உருவாகிவிடும். ஆங்... தமிழக அரசு கவனத்திற்கு!

அடுத்த கட்டுரைக்கு