Published:Updated:

"ஒரே ஆப்பில் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கலாம்!’’ சென்னை இளைஞரின் புதிய முயற்சி

"ஒரே ஆப்பில் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கலாம்!’’  சென்னை இளைஞரின் புதிய முயற்சி
"ஒரே ஆப்பில் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கலாம்!’’ சென்னை இளைஞரின் புதிய முயற்சி

தொழில்நுட்ப உலகில் சமீப காலமாக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று IoT (Internet Of Things). எலெக்ட்ரானிக் பொருள்களை ஒரே நெட்வொர்க்கில் இணைத்து அவற்றை இணையம் மூலம் கட்டுப்படுத்துவதுதான் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். 

இதையே வீட்டில் இருக்கும் மின்விளக்குகள், டி.வி, மின்விசிறி, பாதுகாப்பு கேமராக்கள், ஸ்பீக்கர்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல பொருள்களை இதன்கீழ் கொண்டுவந்து அவற்றை மொபைல் ஆப்ஸ் மூலமாகவோ, வாய்ஸ் கமாண்டுகள் மூலமாகவோ கட்டுப்படுத்தினால், அது ஹோம் ஆட்டோமேஷன். நம் வீட்டையே ஸ்மார்ட் ஹோமாக மாற்றும் தொழில்நுட்பம்தான் இவை. வீட்டை மட்டுமின்றி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வேளாண் நிலங்கள் எனப் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில் IoT-யைப் பயன்படுத்தமுடியும். இந்தச் சந்தையைக் குறிவைத்து உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் புதுப்புது எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை அறிமுகம் செய்துவருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் நம் வீட்டை ஸ்மார்ட் ஹோமாக மாற்றலாம். ஆனால், இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது விலை. ஸ்மார்ட் மின்விளக்கு, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர் என நம் வீட்டில் இருக்கும் எல்லாமே IoT தொழில்நுட்பத்துக்கு ஏற்ற கேட்ஜெட்களாக இருந்தால் மட்டுமே நம்மால் வீட்டில் 'ஹோம் ஆட்டோமேஷன்' செய்யமுடியும். ஆனால், இவை அனைத்தையும் வாங்க வேண்டுமென்றால், அதிகம் செலவாகும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரேவழி, நம் வீட்டிலிருக்கும் எலெக்ட்ரானிக் பொருள்களையே ஸ்மார்ட் டிவைஸ்களாக மாற்றுவதுதான். அதற்கான கருவியை வடிவமைத்து அசத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த விஜயராஜா ரத்தினசாமி. இதன் மூலம் ஸ்மார்ட்ஹோமை உருவாக்க 20,000 ரூபாயே போதும் எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

"பொறியியல் படிக்கும்போதே, எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பாகவும், ஆட்டோமேஷன் தொடர்பாகவும் சின்னச் சின்ன புராஜெக்ட்களை செய்துவந்தேன். கல்லூரிக்குள்ளேயே அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் இளங்கலைப் படிப்பை முடித்தபின்னர், மேற்படிப்புக்காக 'கேட் தேர்வு' எழுதினேன். நல்ல மதிப்பெண் கிடைத்தும், குடும்ப பொருளாதாரம் கைகொடுக்காததால் முதுகலைப் படிப்பில் சேராமல் இருந்தேன். அந்த சமயம் நிறுவனங்களுக்காக புராஜெக்ட்கள் செய்யத் தொடங்கினேன். அப்போது என்னுடைய புராஜெக்ட் பிடித்துப்போன ஒரு கம்பெனி நிறுவனர், என்னுடைய மேற்படிப்புக்காக உதவி செய்வதாகக் கூறினார். அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். அங்கு இரண்டு வருடம் மேற்படிப்பு. அங்கேயும் என்னுடைய புராஜெக்ட்களைத் தொடர்ந்தேன். அப்போதுதான் IoT மீது கவனம் திரும்பியது. அப்போதே வாய்ஸ் கமாண்டுகள் மூலம் இயங்கும் ரோபோ ஒன்றைத் தயார் செய்தேன். போதுமான அளவுக்கு நிதி இல்லாததால், அதனைப் பெரிய அளவில் செய்யமுடியவில்லை. பிறகு தொடர்ந்து IoT தொடர்பான புராஜெக்டுகளை செய்துவந்தேன். அப்போது உருவாக்கியதுதான் இந்த Hagway ஆட்டோமேஷன் கிட்.

Hagway-ன் ஸ்பெஷல்:

பொதுவாக ஹோம் ஆட்டோமேஷன் வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவைஸ்களைத்தான் வாங்குவார்கள். அவை நன்றாக இயங்கும் என்றாலும், வீட்டில் பயன்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக ஸ்மார்ட் லைட் ஒன்றை நாம் வாங்குகிறோம் என்றால், அவற்றைப் பயன்படுத்த ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யவேண்டும்; ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருக்கிறது என்றால் அதற்கும் ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யவேண்டும். இப்படி ஒவ்வொரு டிவைஸ்க்கும் தனித்தனி ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யவேண்டியிருக்கும். இதனால் அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது என்பது கடினம். மேலும், செலவும் அதிகம். வாய்ஸ் அசிஸ்டன்ட்களான அமேசான் எக்கோ அலெக்ஸா, கூகுள் ஹோம் மூலம் இவற்றைப் பயன்படுத்தினாலும் இதே சிக்கல்கள்தான். 

ஆனால், நான் தயாரித்திருக்கும் Gemicates ஆட்டோமேஷன் கிட் மூலமாக ஒரே ஆப் கொண்டு பல கருவிகளை இணைக்கலாம். Hagway என்னும் ஒரே ஒரு ஆப்பை டவுன்லோடு செய்தாலே போதுமானது. மேலும், வீட்டில் தற்போது இருக்கும் மின்விளக்கு, மின்விசிறி, டி.வி-க்கள் போன்றவற்றையே ஸ்மார்ட் டிவைஸ்களாக மாற்றிவிட முடியும். இதற்காக ஆகும் செலவு அதிகபட்சம் 20,000 ரூபாய்தான். தற்போது இருக்கும் ஆட்டோமேஷன் சிஸ்டத்தில் இருக்கும் இன்னொரு சிக்கல், அதனை டெக்னாலஜி பற்றி கொஞ்சம் அதிகம் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்பது. ஆனால், என்னுடைய கருவியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அலெக்ஸா போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருந்தால், அதனையும் இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதனை வீட்டுக்காக மட்டுமின்றி வேளாண்துறை, விளையாட்டு மைதானங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

IoT சிஸ்டம்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதற்குக் காரணம், இவற்றால் ஏற்படும் நன்மைகள்தான். சாதாரணமான சிஸ்டம்களோடு ஒப்பிட்டால், IoT சிஸ்டம் மிகக்குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும். வீடு அல்லது அலுவலகங்களின் பாதுகாப்பை இது எப்போதும் உறுதிசெய்கிறது. எங்கே இருந்து வேண்டுமானாலும் இயக்கலாம் என்பது மற்றொரு வசதி. இப்படி பாதுகாப்பு, மின்சிக்கனம், ரியல்டைம் கன்ட்ரோல் என எல்லா விதத்திலும் நமக்குப் பயன்படும். உலகளவில் ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் அது தொடர்பான கேட்ஜெட்கள் வளர்ந்துவந்தாலும் இந்தியாவில் இன்னும் அதிகளவு வரவேற்பு இல்லை. இதற்குக் காரணம், இதற்கு மிகவும் செலவு அதிகம், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே இவற்றைக் கையாள முடியும், பயன்படுத்துவது மிகவும் கடினம் என்றெல்லாம் நினைப்பதுதான். இந்த அத்தனை தயக்கத்தையும் தாண்டி வெல்வதுதான் என் முன்னாலிருக்கும் சவால்" என உற்சாகமாக் கூறுகிறார் விஜயராஜா.

இந்தப் பணியில் இவர் மட்டும் ஈடுபடுவதில்லை. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறார். "தகுதி வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதே தற்போது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அப்படி உருவாகுபவர்களும் போதுமான வேலைவாய்ப்பு இன்றி வெவ்வேறு துறைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இவ்வளவு ஏன்... நான் பொறியியலில் படித்த பாடத்திட்டமே மிகவும் பழையது. நான் இவற்றைக் கற்றுக்கொண்டது எல்லாமே இணையத்தில்தான். இன்றைய மாணவர்களுக்கும் இதைத்தான் நான் அறிவுரையாகக் கூறுவேன். எனவேதான் மாணவர்களுக்கு புதுப்புது தொழில்நுட்பங்கள் குறித்து நானே பயிற்சியளிக்கிறேன். என்னுடன் பணியிலும் இணைத்துக்கொள்கிறேன்" என்கிறார் அக்கறையுடன்.

தற்போது சின்ன அளவில் மட்டுமே இவற்றைத் தயாரித்துவரும் விஜயராஜா, கூடிய விரைவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். மேலும், முன்னணி நிறுவனங்களைப் போலவே, முழுமையான கேட்ஜெட்களாக அவற்றை சந்தைப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார் இந்த வி.ஐ.பி. 

தொடர்புக்கு : 97908 08689