Published:Updated:

ஆஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர் காணாமல் போன வழக்கு... க்ளு கொடுத்த மொபைல்! #GadgetTippedCrimes அத்தியாயம் 6

ஆஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர் காணாமல் போன வழக்கு... க்ளு கொடுத்த மொபைல்! #GadgetTippedCrimes அத்தியாயம் 6
ஆஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர் காணாமல் போன வழக்கு... க்ளு கொடுத்த மொபைல்! #GadgetTippedCrimes அத்தியாயம் 6

``இருட்டினிலே நீ நடக்கையிலே... உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்” எனப் பாடியிருக்கிறார்கள். ஆனால், எப்போதும் விலகாமல் இருப்பது மொபைல் போன்கள். லொகேஷன் ட்ராக்கர், மொபைல் சிக்னலை வைத்துக் கண்டறிவது என ஒருவரின் இருப்பிடத்தையும் வழித்தடத்தையும் மொபைல் பிழையின்றி எடுத்துச் சொல்லிவிடும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜில் மேகர் வழக்கையும் முடித்து வைத்தது மொபைலில் இருக்கும் ஒரு வசதிதான். 

ஜில்லியன் மேகருக்கு (Gillian "Jill" Meagher) அப்போது வயது 29. ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரின் வாழ்ந்த ஜில், பிரபல செய்தி நிறுவனமான ஏ.பி.சி-யில் பணியாற்றி வந்தார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜில்லின் அப்பா பெர்த் நகரின் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இருந்தாலும், ஆஸ்திரேலியா நாட்டு குடிமகளாகவில்லை ஜில். 2008-ம் ஆண்டு டாம் மேகரைச் சந்தித்து, காதலித்து, திருமணம் முடித்தப் பின்தான் ஆஸ்திரேலியா நாட்டு பிரஜை ஆனார்.

சம்பவம் நடந்தது 2012, செப்டம்பர் 22-ம் தேதி. ஜில், தனது அலுவலக நண்பர்களோடு பார்ட்டிக்குச் சென்றிருந்தார். பார்ட்டி முடிந்தபின் இரவு 1.30க்கு தனது வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார் ஜில். பார்ட்டி நடந்த பாரிலிருந்து அவரது வீடு நடக்கும் தொலைவுதான். 

மறுநாள் காலையில் எழுந்த டாம், ஜில்லைக் காணாமல் தேடினார். நண்பர்களிடம் விசாரித்தார். எல்லோரும் ஜில் 1 மணிக்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். டாம் உடனே அருகிலிருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெண், ஊடகத்தில் வேலை செய்பவர், இரவில் தனியாக சென்றிருக்கிறார் என்றதும் உடனே தேடுதலைத் துவக்கினர் போலீஸார். அவர்களின் முதல் சந்தேகம், ஜில்லின் கணவர் டாம் மீதுதான். டாமை கஸ்டடியில் எடுத்து தீவிரமாக விசாரித்தது போலீஸ். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. 2 நாள்கள் போனது.

ஜில் கிடைக்கவில்லையென்றதும், அவரது அலுவலக நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் தொடங்கினர். அது லட்சம் லைக்ஸ் வாங்கியது. அவரைப் பற்றிய குறிப்புகள் பகிரப்பட்டன. ஆனால், யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா நாடு முழுக்க இந்த விஷயம் பரவியது. ஜில்லுக்கு என்ன ஆனது என்பதை உடனடியாக கண்டறிய வேண்டிய அழுத்தம் போலீஸ்மீது விழுந்தது. முழு வீச்சில் விசாரணையை நடத்தியது போலீஸ். டாமின் வீட்டில் சோதனையை நடத்தியது. ஆனாலும் பயனில்லை.
ஜில் கடைசியாக நடந்துசென்ற பாதையை லென்ஸ் வைத்து சோதித்தது போலீஸ். வழியில், ஓரிடத்தில் ஜில்லின் ஹேண்ட்பேக் கிடைத்தது. அந்த இடத்திலிருந்த அத்தனை கடைகளின் சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தது போலீஸ். அப்போதுதான் வழக்கில் நுழைந்தான் நீலநிற புல் ஓவர் போட்ட ஒருவன். சி.சி.டி.வி காட்சியில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அது டாம் ஆக இருக்குமோ என்றே யோசித்தது போலீஸ்.

பல முயற்சிகளுக்குப் பிறகு, அந்த வீடியோவில் இருப்பது ஏட்ரியன் பெய்லி (Adrian Bayley) என்ற முடிவுக்கு வந்தது போலீஸ். பெய்லியை அவனது வீட்டில் வைத்து செப்டெம்பர் 27-ம் தேதி கைதுசெய்தது போலீஸ். ஆனால், விசாரணையில் எதுவுமே தெரியவரவில்லை. பெய்லி, ரொம்ப கூலாக “மேன் பேகுனாஹ்” என்றே சொல்லியிருக்கிறான் பெய்லி. திக்குத் தெரியாமல் இருந்த போலீஸூக்கு அப்போதுதான் மொபைல் போன் இருப்பது உறுத்தியது. உடனே, பெய்லி மற்றும் ஜில்லின் மொபைல் போன் சிக்னல் சம்பவ தினத்தன்று எங்கெல்லாம் நகர்ந்தது என பார்த்திருக்கிறார்கள்.

ஜில் காணாமல் போன செப் 22, 1.30 மணிக்கு இருவரின் மொபைல் போன்களும் ஒரே இடத்தில் இருந்திருக்கிறது. அங்கிருந்து 30 கி.மீ ஒரே திசையில் நகர்ந்திருக்கிறது. அடுத்த சில மணி நேரத்தில் பெய்லியின் மொபைல் மட்டும் மீண்டும் மெல்போர்ன் வந்திருக்கிறது. இந்தத் தகவல் கிடைத்ததும், வழியிலிருந்த டோல் கேட்டில் விசாரித்திருக்கிறார்கள். சரியாக, அதே சமயத்தில் பெய்லியின் கார் டோல்கேட்டைத் தாண்டியிருக்கிறது. போலீஸ் உண்மையை நெருங்கிவிட்டார்கள் என்றதும் பெய்லியின் “கூல்” நடத்தையில் மாற்றம் தெரிந்தது. சுதாரித்தப் போலீஸ், தீவிரமாக விசாரிக்க உண்மையைக் கக்கினான் பெய்லி.

ஜில்லைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். பின், அவரைக் கொலைசெய்து புதைத்திருக்கிறான். உண்மையைச் சொன்னதும் பெய்லி சொன்ன இடத்துக்கு விரைந்தது போலீஸ். அங்கிருந்து ஜில்லின் உடல் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்காக நீட்டிக்கப்படவில்லை. உடனுக்குடன் பெய்லிக்கு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் 40 ஆண்டுகளுக்கு.

ஒரு பெண் காணாமல் போன ஆறு நாளில் குற்றவாளி பிடிபட்டான். அடுத்த ஆறு மணி நேரத்தில் அவன் நடந்த உண்மையை ஒப்புக்கொண்டான். ஆறு மாதத்தில் நீதிபதி அவனுக்கான தண்டனையைத் தந்துவிட்டார். நடந்த அத்தனையையும் தனக்குத் தெரிந்த மொழியில் தனக்குள் பதிவு செய்துகொண்டது ஜில்லின் மொபைல் போன்.