Published:Updated:

வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது?

வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது?

வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது?

சென்ற மாதம் நண்பர்களுடன் ஒரு பயணம் சென்றிருந்தேன். அப்போது, ஒரு நண்பர் எடுத்த புகைப்படத்தைக் காட்டுவதற்காக மொபைலை தந்தார். படங்களைப் பார்த்துகொண்டிருந்த போதே, மேலே நோட்டிஃபிகேஷனில் வாட்ஸ்அப் மெஸெஜ் ஒன்று வந்தது. மெஸெஜை அனுப்பியவர் எங்கள் குழுவில் இருக்கும் ஒருவருக்கு ஆகாதவர். அவர் அனுப்பிய தகவலையும் நாங்கள் படிக்க வேண்டியதானது. அவ்வளவுதான். பிரச்னை ஆரம்பமானது.

“நீ எதுக்கு அவன் கூட பேசுற... பேசுறது கூட உன் இஷ்டம். இந்த விஷயத்தையெல்லாம் ஏன் சொல்ற” என மொபைல் ஓனரிடம் சண்டை பிடிக்கத் தொடங்கினார் இன்னொரு நண்பர். அதுவரை மகிழ்ச்சியாக சென்ற பயணம், அதன் பின் மாறிப்போனது. எல்லோரும் எப்போது ஊருக்குத் திரும்புவோம் என நினைக்க வேண்டியானது. ஊருக்குத் திரும்பியதும் மொபைலைக் காட்டிய நண்பர் அழைத்தார்.
“எல்லோருக்கும் தான ரகசியம் இருக்கும்? ரகசியம் இல்லாத மனுஷன் யாராச்சும் இருப்பானா? என்னோட ஒரு ரகசியம் தெரிஞ்சதால என்னை குற்றவாளி ஆக்கிட்டீங்க. உங்களோட ரகசியத்தை யோசிச்சு பாருங்க. அது வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்” என குமுறித் தீர்த்தார்.

எனக்கு அந்தச் சம்பவம் மறந்துபோனது. ரகசியம் என்பது மட்டும் மனதில் நின்றது. வாட்ஸ்அப் என்ற ஒரு தொழில்நுட்பம் எவ்வளவோ நன்மைகளை நமக்கு தந்திருந்தாலும் உறவுகளிடையே அது உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் ஏராளம். இது தொடர்பான ஏராளமான செய்திகளை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நேர்ப்பேச்சிலும் எதிர்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் வாட்ஸ்அப் தான் பிரச்னை என்றே சொல்லப்பட்டாலும், நிஜமான காரணம் அது நம் ரகசியத்தை யாருக்கோ சொல்லிவிடுகிறது. அதுதான் பிரச்னை. எப்படி?

ஸ்டேட்டஸ்:

முன்பெல்லாம் டென்ஷன் அதிகமானால் தண்ணீர் குடிப்போம்; தரையை ஓங்கி குத்துவோம். இப்போதெல்லாம் அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிடுகிறோம். “மனுஷனை நம்பறதுக்கு மரத்தை நம்பலாம்” என ஸ்டேட்டஸ் வைத்தால் “நான் என்னடா பண்ணேன்?” என 4 பேராவது ரிப்ளை போடுகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் கிசுகிசு எப்போதுமே ருசிகரமானதுதான். ஸ்டேட்டஸ் தான் ”கேட்வே ஆஃப் காஸிப்”

Last seen:

இரவின் நடுவில் தண்ணீர் குடிக்க எழுந்திருப்போம். அனிச்சையாகவே கை வாட்ஸ்அப்பைத் திறந்திருக்கும். அவ்வளவுதான். “காலைல 4 மணிக்கு என்ன பண்ற?” என அக்கறை, கோபம், நக்கல் எல்லாம் கலந்து கேள்வி ஒன்று வரும். “நீ என்ன பண்ற” என திரும்பக் கேட்க அப்போது தோன்றாது. எதோ பெரிய தவறைச் செய்து மாட்டிக்கொண்டோமோ என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கும். ஏனெனில், நம் ரகசியம் ஒன்று வெளியே போய்விட்டது.

தவறாக அனுப்பப்பட்ட மெஸெஜ்:

“லவ் யூ பேபி” என்பதை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பும் சாத்தியங்களும் வாட்ஸ்அப்பில் உண்டு. அதுவும் க்ரூப்புக்கு போய்விட்டால் அவ்வளவுதான். 

க்ரூப்ஸ்:

உங்கள் மொபைலை எடுத்து எத்தனை வாட்ஸ்அப் க்ரூப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். அந்த க்ரூப்பில் இருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவருக்கும் உங்கள் எண் கிடைத்துவிட்டது. இனி உங்களால் டி.பி.யை கூட உங்கள் விருப்பப்படி வைக்க முடியாது. அப்படி வைத்தால் “Hi" என 10 பேராவாது மெஸெஜ் அனுப்புவார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியுமே வட்டங்கள் உண்டு. யார் யாரை எந்த வட்டம் வரை அனுமதிக்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், வாட்ஸ்அப் அந்த வட்டத்துக்குள் நுழையும் அனுமதியை நம்மை அறியாமலே நமக்கு தெரியாதவருக்கும் தந்துவிடுகிறது. ரகசியங்கள் வெளிப்படும்போதும் அதை எதிர்கொள்ளும் சக்தி பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. 

இனிவருங்காலத்தில் வாட்ஸ்அப் தான் ஒவ்வொரு குழுவினர் பேசும் தலைப்புகளை முடிவு செய்யும். அனைவரது சிந்தனையையும் வாட்ஸ்அப்பில் வரும் ஒரு ஃபார்வர்டு மாற்றி அமைக்கும். நம்மை சொந்தமாக யோசிக்கவே விடாது. உண்மையையும் பொய்யையும் மாற்றி மாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். எது சரி எது தவறு என யோசிக்கக்கூட நேரம் தராது. ”உடனே பகிரவும்...அவசரம்” என்பதைப் படித்ததும் அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் ஃபார்வர்டு செய்கிறோமே... அதற்கு காரணம் அந்த அவசரம்தான்.

முத்து படத்தில் வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.
“கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்...
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்..!”

காசு எப்படியோ. வாட்ஸ்அப்புக்கு இந்த வரி அப்படியே பொருந்தும். இப்போதே கொஞ்சம் நேரமெடுத்து உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கையை பரிசீலியுங்கள். எதையாவது மாற்ற வேண்டும் என தோன்றினால் அதை மாற்ற முயலுங்கள். நீங்கள் என்பது நீங்கள்தான்; உங்கள் வாட்ஸ்அப் புரொஃபைல் அல்ல என்பதை உணருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு