Published:Updated:

லைசென்ஸுடன் 5,000 பாடல்கள், ப்ளூடூத், எஃப்.எம்... மீண்டும் வரும் ரேடியோ பெட்டி... வாங்கலாமா? #Carvaan

லைசென்ஸுடன் 5,000 பாடல்கள், ப்ளூடூத், எஃப்.எம்... மீண்டும் வரும் ரேடியோ பெட்டி... வாங்கலாமா? #Carvaan
லைசென்ஸுடன் 5,000 பாடல்கள், ப்ளூடூத், எஃப்.எம்... மீண்டும் வரும் ரேடியோ பெட்டி... வாங்கலாமா? #Carvaan

ற்போது நீங்கள் இருக்கும் அப்பார்ட்மென்ட் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் தாத்தா, பாட்டி காலத்துப் பெட்டிகளை எடுத்துப் பார்த்தால், உள்ளே டேப் ரெக்கார்டரின் கேஸட்டுகள் சில இருக்கலாம். அதைக் கேட்கத் தேவையான டேப் ரெக்கார்டரைதான் தற்போது காணவில்லை. FM அலைவரிசையில் புது பாடல்கள் முதல் பழைய பாடல்கள் வரை துல்லியமான, தரமான ஒலிபரப்பு கிடைக்கத் துவங்கியவுடன் AM ரேடியோவை மறந்துவிட்டனர். வெள்ளிக்கிழமை டிவியில் ஒலிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியைக் கூட மறந்துவிட்டனர்.

“என்னதான் கேட்ஜெட்ஸ் இருந்தாலும், என்னோட பழைய ட்ரான்ஸிஸ்டர் மாதிரி வருமா? அதுல காதை வெச்சு கிரிக்கெட் கமென்டரி, எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டெல்லாம் கேட்கறதே தனி சுகம்!” என்று தாத்தாவோ, பாட்டியோ அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்போம். அந்த அனுபவங்களில் சிலவற்றை திரும்ப மீட்டெடுக்கும் முயற்சியாக, சீனியர் சிட்டிசன்களை குறிவைத்து சரிகமா ஆடியோ நிறுவனம் ஒரு நவீன கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் ‘கார்வான்’ (Carvaan). இது ஒரு டிஜிட்டல் ஆடியோ பிளேயர். இதே நிறுவனம், சென்ற வருடம் இதை இந்தி மொழியில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதுவே தமிழ் மொழியில் வந்திருக்கிறது.

பழைய பாடல்கள் கேட்போமா?

பார்ப்பதற்குப் பழைய ரேடியோ வடிவில் இருந்தாலும், பல நவீன வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது ‘கார்வான்’. என்னதான் தற்போது பல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்கள் தமிழ்ப் பாடல்களை இலவசமாக அளித்தாலும், ஒரு சில பழைய பாடல்கள் வலைத்தளங்களில் என்ன வலை வீசினாலும் கிடைக்காது. வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டிகள் ஏதோ ஒரு பழைய பாடல் வேண்டுமெனக் கேட்க அதைத் தேடவே நமக்கு ஒரு நாள் ஆகிவிடும். அப்படி எங்கும் கிடைக்காத பல பாடல்கள் உட்பட 5000 புகழ்பெற்ற பாடல்களை 80 தனித்தனி ஃபோல்டர்களாக இந்த பிளேயரில் முன்னரே பதிந்திருக்கிறார்கள். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்படப் பல நடிகர்கள் என இதுவரை நாம் கேட்டிராத, அதே சமயம் பெரியவர்கள் கேட்க விரும்பும் பாடல்கள்தான் இதில் அதிகமாக இருக்கின்றன.

மூன்று விதமாக ட்யூன் செய்யலாம்

பழைய ரேடியோவில் ட்யூன் செய்வதே ஒரு அலாதியான விஷயம். அந்த உணர்வைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக இங்கேயும் ட்யூன் செய்யும் வசதி உண்டு. ரேடியோவின் முகப்பில் மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘Artistes’, ‘Devotional’ மற்றும் ‘Carnatic’ என்று இருக்கும் மூன்றில், நமக்கு எந்த வகையில் பாடல்களைத் தேட வேண்டுமோ அதைச் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, ‘Artistes’ மோட் தேர்வு செய்துவிட்டு ட்யூன் செய்யத் தொடங்கினால் வெவ்வேறு இசைக் கலைஞர்களின் பெயர்கள் வரிசையாக டிஜிட்டல் டிஸ்பிளேயில் தெரியும். யாருடைய பாடல் வேண்டுமோ, அவர் பெயர் வரும்போது ட்யூன் செய்வதை நிறுத்திவிட்டால் அவரின் பாடல்கள் வரிசையாக ஒலிக்கத் தொடங்கும். முன்னர் பாடிய பாடல் அல்லது அடுத்து வரும் பாடல் போன்றவற்றுக்குத் தாவ ‘Previous’ மற்றும் ‘Next’ பட்டன்களும் உண்டு. ட்யூன் செய்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ரிமோட் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘Artistes’ மற்றும் ‘Carnatic’ மோடில் கலைஞர்கள் வாரியாக பாடல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன என்றால், ‘Devotional’ மோடில் கடவுள்கள் வாரியாக பாடல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன.

கூடுதல் வசதிகள்

அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள 5000 பாடல்களைத் தாண்டி பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது கார்வான். இந்தப் பாடல்கள் பெரியவர்களைக் கவர என்றால், இளைஞர்களைக் கவர இந்தக் கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரேடியோ பெட்டி போல வடிவமைக்கப்பட்ட பின்பு, ரேடியோ கேட்காமல் இருந்தால் எப்படி? ஆம். இதில் FM ரேடியோ மட்டும் கேட்டுக்கொள்ளலாம். ட்யூன் செய்து விருப்பப்பட்ட ஸ்டேஷன்களை ரசிக்கலாம்.

USB போர்ட் இருப்பதனால், பென் டிரைவ் மாட்டிக்கொண்டு அதிலிருக்கும் பாடல்களை கேட்கலாம். ப்ளூடூத் வசதியும் இருப்பதனால், உங்கள் போனை இதனுடன் பேர் (pair) செய்துகொண்டு அதிலிருக்கும் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். இடதுபுறம் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு பட்டன்களில் முதல் பட்டன் (Saregama) ஏற்கெனவே உள்ளே பதியப்பட்டிருக்கும் பாடல்களைக் கேட்பதற்கு. அதன் கீழே FM கேட்கத் தனி பட்டன், USB, ப்ளூடூத் மோட்களுக்குச் செல்ல தனித்தனி பட்டன்கள் என, சுலபமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னால் இருக்கும் USB போர்டின் அருகிலேயே ஹெட்போன் ஜாக்கும் இருப்பதனால் உங்கள் 3.5mm ஹெட்போனை மாட்டிவிட்டு, யாருக்கும் தொந்தரவில்லாமல் பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம். கூடுதல் ஸ்பீக்கர்களும் மாட்டிக்கொள்ளலாம். ரீ-சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ரேடியோ பெட்டிக்கு சார்ஜரும் நம் ஆண்ட்ராய்டு போன்களின் சார்ஜர்கள் போலத்தான். ரேடியோவுடன் ஒரு சார்ஜரும் கொடுத்துவிடுகிறார்கள். 

சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

  • 5000 பாடல்கள் இலவசம் (பல்வேறு இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளின் பாடல்கள், பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதப் பாடல்கள்)
  • ப்ளூடூத், USB 2.0
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • ரீ-சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி - 5 மணி நேர பிளேபேக்
  • அளவு: 27cm x 17cm x 8cm, எடை: 1.5 கிலோகிராம்
  • ஒரு வருட வாரன்ட்டி
  • பெட்டியில் வரும் பொருள்கள்: சார்ஜர், ரிமோட், கையேடு

குறைகள் என்னென்ன?

எல்லாம் சரிதான். நல்ல முயற்சிதான். தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கமான கேட்ஜெட் என்று இதை எடுத்துக்கொண்டால், சந்தையில் தற்போது இதைப் போல ஒன்றில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ரேடியோவை நோட்டமிட்டால் ஒரு சில குறைகளும் வரிசைகட்டி நிற்கின்றன.

எடை குறைவாக இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால், வெளிப்புறப் பகுதி அத்தனை வலிமையானதாக இல்லை. இரண்டு முறை கீழே விழுந்தால் உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அடுத்ததாக, ஐந்து மணி நேரம் மட்டுமே நிற்கும் பேட்டரி சற்று ஏமாற்றம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதன் காரணமாகவே நீண்ட பயணங்களின்போது இது உற்றத் துணையாக இருக்காது. நம் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் போட நாம் ஓடிக்கொண்டிருப்பது போல, இதற்கும் ஓட வேண்டியதிருக்கும். அது மட்டுமின்றி 2 நாள் பேக்கப் நிற்கும், ஒரு நாள் பேக்கப் நிற்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் கேட்ஜெட்களே ஒரு முழு நாளுக்குக் கூட வருவதில்லை. இங்கே ஆரம்பமே 5 மணி நேரம் என்று கூறிவிட்டதனால், அதை விடவும் குறைவாகவே வரும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடிகிறது.

இதன் விலை 5,990 ரூபாய் என்கிறார்கள். 5000 அரியப் பாடல்கள் காப்பிரைட்ஸ் உடன் அதிகாரபூர்வமாக வருவதால், இந்த விலை என்று எடுத்துக்கொண்டாலும் இது சற்றே கூடுதலாகத்தான் படுகிறது. சொல்லப்போனால் இந்தப் பாடல்கள் இல்லாமல் இந்தக் கேட்ஜெட்டைப் பார்த்தால், இது ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் போலத்தான். அதற்கு ஏன் இவ்வளவு விலை தர வேண்டியிருக்கிறது என்ற யோசனை வராமல் இல்லை. ரேடியோவில் எந்தப் பிரச்னை என்றாலும் வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்யப்படும் என்கிறார்கள். அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்றும் தெரியவில்லை. ஆனால், 60 வயதைத் தாண்டியவர்களுக்கு இது ஒரு சிறந்த பரிசாக இருக்கும். அவர்களின் பழைய நினைவுகளை இது நிச்சயம் மீட்டெடுக்கும். அதற்காகவே இதை வரவேற்கலாம்!