Election bannerElection banner
Published:Updated:

கத்தியின்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யப்போகும் ’4 மிமீ டாக்டர் ரோபோ’..!

கத்தியின்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யப்போகும் ’4 மிமீ டாக்டர் ரோபோ’..!
கத்தியின்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யப்போகும் ’4 மிமீ டாக்டர் ரோபோ’..!

கத்தியின்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யப்போகும் ’4 மிமீ டாக்டர் ரோபோ’..!

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு காட்சி. அயர்ன் மேன் (Iron Man) அணிந்திருக்கும் கவசத்தினுள்ளே, எறும்பு மனிதன் (Ant Man) புகுந்து விடுவான். கிட்டத்தட்ட, யானையின் காதுக்குள் நுழையும் எறும்பு போல. உருவத்தில் எறும்பைப் போன்ற அளவிலேயே இருப்பதால், உள்ளே சென்று அயர்ன் மேனின் எலக்ட்ரானிக் கவசத்தைச் சேதப்படுத்தி செயலிழக்க வைக்க முயற்சி செய்வான். இந்தக் காட்சியை அப்படியே எடுத்துக்கொண்டு, செயலிழக்க வைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயலிழந்த பாகங்களைச் சரி செய்ய முயன்றால்? கவசத்திற்குப் பதிலாக அது நம் உடலாக இருந்தால்? அப்படிப்பட்ட அறுவை சிகிச்சையை செய்யத்தான் களமிறங்க போகிறது 4மிமீ அளவே இருக்கும் நவீன ரோபோக்கள்!

Photo Courtesy: phys.org

அறுவை சிகிச்சை என்றாலே பலருக்கு பயம் தொற்றிக்கொள்ளும். கத்தியை வைத்து உடலைக் கிழிப்பார்கள்; சரியான நிலைக்கு உடல் திரும்பவே குறைந்தது மூன்று நாள்கள் தேவைப்படும் என்று எல்லோருக்கும் ஒருவித தயக்கம் இருக்கும். அவர்களுக்கு என்றே மருத்துவத் துறையில் கொண்டு வரப்பட்டதுதான் Non-invasive வகை அறுவை சிகிச்சைகள். அதாவது இதில் உடலில் எந்த வித கீறல்கள், துளைகள் ஏற்படுத்தாமல் அல்லது மிகக் குறைவாக மட்டுமே ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்வது. வலி இருக்காது, அதிக நாள்கள் மருத்துவமனையில் தங்கவேண்டிய தேவையும் இருக்காது. ஆனால், இதன் பிரச்னை என்னவென்றால் எல்லா உடல் உபாதைகளுக்கும் இத்தகைய சிகிச்சை ஏற்புடையதல்ல என்பதே! சில இடங்களில், சில நேரங்களில், நம் பாரம்பரிய அறுவை சிகிச்சை முறை என்பது அவசியமாகிப் போகிறது. அதற்கும் ஒரு மாற்றாக இந்த நவீன ரோபோ இருக்கும் என்கிறார்கள் இதை வடிவமைத்த விஞ்ஞானிகள்.

பொதுவாக ரோபோக்கள், படங்களில் அதிவேகமாகச் செயல்படும் ஒன்றாகக் காட்டப்பட்டாலும், நிஜ உலகில் அதன் செயல்பாடு சற்று சிரிப்பை வரவழைப்பதாகத்தான் இருக்கிறது. முக்கியமாக அதன் அசைவுகள்! கொஞ்சம் தட்டுத் தடுமாறித்தான் செயல்படும். இந்த நவீன ரோபோவை பொறுத்தவரை அங்கிருந்தே மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டெலிஜென்ட் சிஸ்டம்ஸ் (Max Planck Institute for Intelligent Systems) தயாரித்துள்ள இந்த 4மிமீ அளவே இருக்கும் ரோபோ ஊர்கிறது, குதிக்கிறது, நீந்தக் கூட செய்கிறது. ஈரமான இடத்திலிருந்து, ஏன் ஒரு குளத்திலிருந்து கூடச் சுலபமாக வெளியேறுகிறது.

Pliable Millirobot (வளைந்து கொடுக்கும் மில்லிரோபோ) என்று அழைக்கப்படும் இது அளவில் ஒரு சிறிய அரிசியைப் போல இருக்கிறது. இதன் உடலமைப்பு வண்டின் லார்வாக்கள் மற்றும் புழுக்களை ஒத்த வடிவில் இருக்கிறது. எலாஸ்டிக் ரோபோவை போல இது செயல்படக் காரணம், வெளிப்புறத்திலிருந்து மின்காந்த அலைகள் பிரயோகிக்கப்படுவதுதான். இந்த வகையில், இதன் உடலமைப்பையும், இயக்கத்தையும் சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பதால் எந்தவித கடினமான இடங்களில் நுழையவும் இதைப் பயன்படுத்தலாம்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒரு சில மாற்றங்களுடன் இதை non-invasive வகை அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, உடலின் குறிப்பிட்ட பாகத்தில், உதாரணமாகக் குடலில் ஒரு பிரச்னை என்றால், அங்கே அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல், இந்த நுண் ரோபோவை தேவையான மருந்துடன் உள்ளே அனுப்பிவிட்டால் போதும். அது அங்கேயுள்ள பிரச்னையைத் தீர்த்து விடும். இதுவரை, இதை ஒரு செயற்கை (synthetic) வயிற்றுப் பகுதியில் மட்டுமே சோதித்து பார்த்திருந்தாலும், விரைவில், இதைத் தன்னம்பிக்கையுடன் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர். இந்த ஆராய்ச்சி குறித்து ஆசிரியர் மற்றும் இயற்பியல் புலனாய்வு துறை இயக்குநர் மெடின் சிட்டி (Metin Sitti) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்தி அறிக்கையில்,

“மிக விரைவில் இத்தகைய ரோபோக்கள் கொண்டு நம் மருத்துவத் துறை சிகிச்சை அளிக்கத் தொடங்கும். தேவையான மருந்துகளை, தேவையான இடத்திற்கு ஒரு டோர் டெலிவரி போல இது நிச்சயம் செய்யும். ஒரு சில பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சைகளை முற்றிலுமாக ஓரங்கட்டிவிட்டு இதை விரைவில் பயன்படுத்த தொடங்கலாம். நோயாளியை ஒரு மாத்திரை விழுங்குவதை போல இதை விழுங்க வைத்தோ, தோலில் ஒரு சிறு துளையிட்டோ, இதை உடலினுள்ளே சுலபமாக செலுத்த முடியும். சிறுநீர்ப் பாதை, வயிற்றுப் புறம், இதய மேற்பரப்பு, செரிமான அமைப்பு போன்ற முக்கிய மற்றும் பிரச்னை தரக்கூடிய இடங்களின் சிகிச்சைக்கு இது ஒரு மிகப்பெரிய வரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு