Published:Updated:

இந்த மொபைல்கள் ‘கைப்புள்ள’ மாதிரி... எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்! #RuggedMobiles

இந்த மொபைல்கள் ‘கைப்புள்ள’ மாதிரி... எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்! #RuggedMobiles
இந்த மொபைல்கள் ‘கைப்புள்ள’ மாதிரி... எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்! #RuggedMobiles

இந்த மொபைல்கள் ‘கைப்புள்ள’ மாதிரி... எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்! #RuggedMobiles

மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் கரடுமுரடான ஆஃப் ரோடு(Off road) பயணங்களுக்காகவே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் உண்டு. அதைப்போலவே மொபைல்களிலும் வலிமையான கட்டமைப்பை உடைய மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான மொபைல்களைவிட இவை சிறப்பான வசதிகளைக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட கடினமான மொபைல்கள் சந்தையில் உண்டு என்பது ‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?’. 'ரக்கட்' (rugged) மொபைல்கள் என்று அழைக்கப்படும் இவை நம் ஊரில் இன்னும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்' னு சொல்வாங்களே அதற்கு இந்த மொபைல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

எப்படித் தோன்றியது இந்த ஐடியா?

இப்படி ஒரு மொபைலைத் தயாரிக்கும் எண்ணம் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பார்த்துத் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ராணுவத்தினர் பயன்படுத்தும் கருவிகள் எந்த விதக் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். தொடுதிரையைக் கொண்ட ஸ்மார்ட்போன்களே பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இப்படி ஒரு மொபைலை உருவாக்குவதற்கான அவசியங்களும் இருக்கின்றன. குளிர்பிரதேசத்தில் நிலவும் அதிகக் குளிரின் காரணமாக மொபைல்கள் செயல்படாமல் போகும். சுரங்கங்கள், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் அதிக தூசி இருப்பதால் அங்கு மொபைல்களைப் பயன்படுத்தும்போது பாதிப்படையும் வாய்ப்பு அதிகம். மொபைலை அடிக்கடி கீழே போட்டு உடைத்த அனுபவம்கொண்ட ஒருவருக்கும்கூட “இப்படி ஒன்றை உருவாக்கினால் என்ன?” என்று யோசனை தோன்றியிருக்கலாம்.

மற்ற மொபைல்களுக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம் ?

இவற்றிலிருக்கும் முக்கியமான அம்சங்கள் நீர்புகாத்தன்மை மற்றும் தூசியால் பாதிக்கப்படாத தன்மை. அதிக வெப்பநிலையிலும், உறை வெப்பநிலையிலும்கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். நீருக்கு அடியில்கூட இவற்றின் செயல்பாடு பாதிக்கப்படுவதில்லை. மழை, பனி, வெயில் என எந்தக் காலநிலைகளிலும் செயல்படும் திறன் படைத்தவை. இவற்றின் வெளிப்புறக் கட்டமைப்பு முழுவதுமே வலிமையான பொருள்களை வைத்து உறுதியாக வடிவமைக்கப்படுகிறது. கீழே விழுந்தால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும். இந்த வகை மொபைல்களில் பின்பக்கம் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கும், சிம் கார்டுகளைக்கூட ஸ்க்ரூ டிரைவர் மூலமாக கவரை அகற்றிய பிறகே பயன்படுத்த முடியும். சாதாரண மொபைல்களில் இருக்காத, கேள்விப்படாத சென்சார்கள் இதில் இருக்கும். CAT நிறுவனம் தயாரிக்கும் ஒரு மாடலில் தெர்மல் இமேஜிங் கேமராகூட இருக்கிறது. சாம்சங் நிறுவனம் ஹை எண்ட் மாடல்களைக்கூட ரக்கட் ஸ்மார்ட்போன்களாக மாற்றி வெளியிடுகிறது, கேலக்ஸி S6, S7, S8 என அனைத்து மாடல்களும் இதில் அடக்கம்.

யாருக்கு அதிகமாகத் தேவைப்படும்?

சாகச விரும்பிகளுக்கு ரக்கட் மொபைல்கள் சிறந்த தேர்வாக இருக்கும். காடுகளில் ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும், தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும் இதில் இருக்கும் வசதிகள் நிச்சயம் பயன்படும். இவற்றில் NFC வசதி தரப்பட்டுள்ளதால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எளிதாக நிகழ்த்த முடியும். கைக்குள் அடக்கமாக இருக்காது, தடிமன் மற்றும் எடை அதிகமாக இருப்பது போன்றவை இவற்றின் குறைகள். இந்தியாவில் ஒரு சில ரக்கட் மொபைல்கள் சந்தையில் கிடைக்கின்றன ஆனால், அவற்றின் விலை சற்று அதிகம்.

நமக்குத் தெரிஞ்ச ரக்கட் மொபைல்னா அது நோக்கியா 3310 தான் பாஸ். அதுதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்.

அடுத்த கட்டுரைக்கு