Published:Updated:

``கூகுள் பண்ண தெரிஞ்சதால மட்டும் நீங்க புத்திசாலி ஆகிட மாட்டீங்க..!” - ஒரு செம ஆய்வு

``கூகுள் பண்ண தெரிஞ்சதால மட்டும் நீங்க புத்திசாலி ஆகிட மாட்டீங்க..!” - ஒரு செம ஆய்வு
``கூகுள் பண்ண தெரிஞ்சதால மட்டும் நீங்க புத்திசாலி ஆகிட மாட்டீங்க..!” - ஒரு செம ஆய்வு

இன்று பல வேலைகளை நம்மால் எளிதாகச் செய்ய முடிகிறதென்றால் அதற்கு மொபைல் என்னும் கையடக்க ஜாம்பவான்களே முக்கியக் காரணம் என்று சொல்லலாம். கூகுள் நம் விரல் நுனியில் எல்லா விஷயங்களையும் தருகிறது. கூகுள் செய்தால் நமக்குத் தெரியாத விஷயமே கிடையாது என்பதே பரவலான கருத்து. நம் வாழ்க்கையை எளிதாக்குவதே மொபைல், கூகுள் போன்ற தொழில்நுட்பத்தின் வேலை என்கிறோம். எந்தவொரு விஷயத்தையும் சோதனை செய்யாமல் நம்ப மாட்டோம் என்பது மனித இயல்பு. டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் இதற்கும் ஓர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட் போன்கள் எந்தளவிற்கு நமது மனநிலையை மங்கச் செய்து அறிவை மழுங்கடிக்கின்றன எனக் கண்டறிவதற்காக டெக்ஸாஸ் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் 448 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பேட்டர்ன் கம்ப்ளீஷன்  pattern completion) மற்றும் கணக்கு சம்பந்தமான கேள்விகள் கொண்ட வினாத்தாள் அளிக்கப்பட்டது. இவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.  ஒரு குழுவினர் தங்கள் ஸ்மார்ட் போன்களைத் தாங்கள் தேர்வு எழுதும் மேசையிலும், இரண்டாம் குழுவினர் ஸ்மார்ட் போன்களைத் தங்கள் பைகளிலும், மூன்றாம் குழுவினர் தங்கள் ஸ்மார்ட் போன்களைப் பக்கத்து அறையிலும் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். தேர்வின் முடிவில் பக்கத்து அறையில் தங்கள் ஸ்மார்ட் போன்களை வைத்திருந்தவர்கள் மற்ற இரு குழுவினரையும் விட தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தனர். 

இதே மாணவர்கள் மீண்டும் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினர் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஸ்விட்ச் ஆன் செய்தும், மற்றொரு குழு ஸ்விட்ச் ஆஃப் செய்தும் முன்பிருந்த அதே இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இப்போது அவர்களுடைய செயல் திறனில் எந்த மாற்றமும் இல்லை. 

அதாவது ஸ்மார்ட் போன் எந்த நிலையில் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல, ஸ்மார்ட்போனின் இருப்பே நமது செயல்திறனைப் பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. நாமே சின்னதாய் ஒரு சுய பரிசோதனை மேற்கொள்ளலாம்.

ஒருநாள் நீங்கள் தினமும் செய்யும் ஏதாவது ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். இரண்டு மணி நேரம் போட்டித் தேர்வுக்குப் படிக்கப் போகிறீர்கள். இந்த இரண்டு மணி நேரமும் மொபைலைத் தொடுவதில்லை என சபதம் போட்டுக் கொள்ளலாம். முதல் ஒருமணி நேரம் மொபைலை உங்கள் கண் படாத இடத்தில் வைத்துவிடுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் உங்கள் கண் படும்படியான இடத்தில் எவரையேனும் மொபைலை கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கள். இந்த இரண்டு மணி நேரத்தில் எந்த ஒரு மணி நேரத்தை நீங்கள் நன்கு உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள். 

ஸ்மார்ட் போன் உங்கள் அருகில் வந்ததில் இருந்து எப்போது ஒரு மணி நேரம் முடியும், எப்போது நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கலாம் என உங்களையும் அறியாமல் உங்கள் மனம் மொபைலின் மீது மையம் கொண்டிருந்திருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் முக்கியமான ஓர் அங்கம். அது நமது தினசரி அலுவல்களை மிகவும் எளிமையாக மாற்றியிருக்கிறது. நமது நினைவுகளை அழியாமல் காட்சிப்படுத்தி பத்திரமாக நமக்காகப் பாதுகாக்கிறது. ஆனால், இதற்கு ஒரு கறுப்புப் பக்கம் உண்டு என்பதனையும் நம்மால் மறுக்க முடியாது. ஒரு சராசரி மனிதன் தன்னுடைய ஒரு நாளின் 85 சதவிகித நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2015-ம் ஆண்டு ‘தி ஜர்னல் ஆஃப் எக்பரிமென்டல் சைக்காலஜி’ (The journal of experimental psycology) வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உங்களுக்கு ஒரு சர்ச் இன்ஜினை உபயோகிக்கத் தெரிந்து இருந்தால் நீங்கள் இருப்பதைவிட அதீத அறிவுள்ளவராக உங்களை நினைத்துக்கொள்கிறீர்கள் என்கிறது அந்த ஆய்வு.

இதிலிருந்து எப்படி மீள்வது?
1.    மொபைல் போன் பயன்பாட்டில் உங்களுக்கு என சில வரையறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். படுக்கையில் இருக்கும்போது போன் பயன்படுத்த மாட்டேன், சாப்பிடும் போது போன் பயன்படுத்த மாட்டேன் என்பன போன்று.

2.   நோட்டிஃபிகேஷன்களை எல்லாம் ம்யூட் செய்து வையுங்கள். நாம் வேலைகளை முடித்துவிட்டு சும்மா இருந்து நாம் பார்க்கும்போது நமக்கு தகவல்களைத் தெரிவிப்பதற்காகத்தான் நோட்டிஃபிகேஷன்களே அன்றி, நமது வேலைகளை விட்டுச் சென்று பார்க்கும் அளவுக்கு முக்கியமானவை அன்று.

3.    கடைசியாக உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள், எவ்வளவு நேரம் போன் இல்லாமல் உங்களால் இருக்க முடியும்  - ஒரு நீண்ட டி.வி. ஷோ நேரமா, வீட்டுப் பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் அளவு நேரமா என. 

எவ்வளவு தூரம் உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்கள் நேரத்தை நீங்கள் காத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் டிஜிட்டல் மினிமலிஸ்ட் ஆக வேண்டிய நேரம் இது.