Published:Updated:

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் கேமராவும் ஸ்க்ரீனும்... ஃபேஸ்புக் காக்கும் ரகசியம் என்ன?

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் கேமராவும் ஸ்க்ரீனும்... ஃபேஸ்புக் காக்கும் ரகசியம் என்ன?
ஸ்மார்ட் ஸ்பீக்கரில் கேமராவும் ஸ்க்ரீனும்... ஃபேஸ்புக் காக்கும் ரகசியம் என்ன?

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் கேமராவும் ஸ்க்ரீனும்... ஃபேஸ்புக் காக்கும் ரகசியம் என்ன?

சமீபகாலமாக தொழில்நுட்ப உலகில் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் ஒரு சாதனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். இவை வெளிநாடுகளில் இப்பொழுதே பெரும்பாலான வீடுகளில் தனக்கென  ஓர் இடத்தைப் பிடிக்கத்தொடங்கிவிட்டன. அன்றாட வாழ்கையில் மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்குப் பல நவீன கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும் நாம் இருந்த இடத்தில் இருந்தே நமக்குத் தேவையான வேலையைச் செய்வதற்கு எதையாவது உருவாக்க வேண்டுமே என்ற சிந்தனையின் தாக்கத்தில் உருவானதுதான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். வாய்ஸ் அசிஸ்டென்ட்டாகச் செயல்படும் இவை குரல் மூலமாக இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றன.

எதிர்காலத்தில் இதற்கு இருக்கப்போகும் வரவேற்பைக் கணித்த டெக் ஜாம்பவான்களான  ஆப்பிள், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட்  என அனைவருமே ஆளுக்கொரு பெயரில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைக் கையில் வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஃபேஸ்புக்கும் கூடிய விரைவில் இணைய இருக்கிறது. வரும் ஜூலை மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக இரண்டு  ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

எப்படி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்?


வெளியாகியிருக்கும் தகவல்களின்படி ஃபேஸ்புக்கின் ஸ்பீக்கர் தற்பொழுது சந்தையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் .முன்னணியில் இருக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் பெரும்பாலானவற்றின் தோற்றம் சாதாரண ஸ்பீக்கர்கள் போல இருக்கும். ஆனால், ஃபேஸ்புக் அதிலிருந்து சற்று மாறுபட்டு அதனுடையதை வடிவமைத்திருக்கும். இந்த ஸ்பீக்கரில் 15-இன்ச் திரையும் கூடுதலாக ஒரு வைடு ஆங்கிள் கேமராவும் இருக்கக்கூடும். பெரிய திரை இருப்பதால் வீடியோ சாட்டிங்கிற்கு வசதியாக இருக்கும். வைடு ஆங்கிள் கேமரா இருப்பதால் இதற்கு முன்னால் இருக்கும் இடத்தை அதிக பரப்பளவில் படம்பிடிக்க முடியும். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து இயங்க வைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுத்திறன் பயன்படும். மியூசிக் சேவையை வழங்குவதற்காக உலக அளவில் முன்னணியில் இருக்கும் சோனி மற்றும் யுனிவர்சல் நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து 360° வீடியோ போன்ற பிற வசதிகளை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இரண்டு ஸ்பீக்கர்களுக்கும் அலோஹா(Aloha) மற்றும் ஃபியோனா (Fiona) என்று தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த வருட மே அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்பீக்கர்களின் விலை இந்திய மதிப்பில் முப்பதாயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

எதற்காக இதை அறிமுகப்படுத்த நினைக்கிறது ஃபேஸ்புக்?

மெய்நிகர் உலகில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்பதை உணர்ந்திருக்கிறது ஃபேஸ்புக். அதற்கேற்றவாறு ஹார்ட்வேர் பக்கமும் அதிக ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக ஓர் ஆய்வகமே தனியாக இருக்கிறது. புதிய கருவிகள் வடிவமைப்பு, அதன் பரிசோதனை போன்றவற்றிற்காக இந்த ஆய்வகம் பயன்படுகிறது. சமீபகாலமாக AI விஷயத்திலும் ஃபேஸ்புக் அதிக ஆர்வம் காட்டுகிறது, அண்மையில்தான் இந்த வசதியைப் பயன்படுத்தும் facial recognition தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பொறுத்தவரையில் அது சிறப்பாகச் செயல்படுவதற்கு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்கும்.  சந்தையில் ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களோடு ஒப்பிட்டால் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் நிறையவே இருக்கும், இன்னும் வேண்டுமென்றாலும் கூட அதை ஒருவரிடம் இருந்து பெறுவதற்கான வழிகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். வசதி, எளிமை என்று இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் சிறப்பை பற்றி ஃபேஸ்புக் எதை அள்ளிவிட்டாலும் அதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் ஒன்றுதான். அது வருமானம். 

அடுத்த கட்டுரைக்கு