Published:Updated:

பேக்கிரவுண்ட் ஆப்களுக்குக் கட்டுப்பாடு...ஆண்ட்ராய்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்! #AndroidP

பேக்கிரவுண்ட் ஆப்களுக்குக் கட்டுப்பாடு...ஆண்ட்ராய்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்! #AndroidP
பேக்கிரவுண்ட் ஆப்களுக்குக் கட்டுப்பாடு...ஆண்ட்ராய்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்! #AndroidP

பேக்கிரவுண்ட் ஆப்களுக்குக் கட்டுப்பாடு...ஆண்ட்ராய்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்! #AndroidP

ண்ட்ராய்டு ஓரியோ இன்னும் முழுமையாக ஒரு சதவிகித டிவைஸ்களில் கூட இடம்பெறவில்லை. அதற்குள்ளாகவே அடுத்த என்ட்ரிக்குத் தயாராகி வருகிறது கூகுள். ஆண்ட்ராய்டு வரிசையில் ஓரியோ 8-வது வெர்ஷன். அடுத்த வெர்ஷன் ஆண்ட்ராய்டு P.  ஒருபுறம் இதற்கான டெவலப்பர் பிரிவ்யூவை விரைவில் வெளியிட கூகுள் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அதுகுறித்த செய்திகளும், வதந்திகளும் எப்போதும்போல உலா வரத்தொடங்கிவிட்டன. அதில் முக்கியமான ஓர் அம்சம் பயனாளர்களின் பிரைவசி குறித்தது.

உலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், எளிமையான UI என நிறையப் பெருமைகள் ஆண்ட்ராய்டுக்கு இருந்தாலும், பாதுகாப்பு என வந்துவிட்டால் ஆண்ட்ராய்டு கொஞ்சம் வீக்தான். அதனை சரிசெய்வதற்கு கூகுள் நிறைய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது. பயனாளர்களின் தகவல்களை தேவையின்றி சேகரிக்கும் ஆப்களை தடை செய்வது, லாக் ஸ்க்ரீனில் விளம்பரங்களைக் காட்டும் ஆப்களை நீக்குவது, பேக்கிரவுண்டில் இயங்கும் ஆப்களைக் கட்டுப்படுத்துவது போன்றவை அவற்றுள் சில. கடந்த ஓரியோ அப்டேட்டிலேயே பேக்கிரவுண்ட்டில் இயங்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்தும் விதமாக சில அப்டேட்களை செய்திருந்தது கூகுள். தற்போது ஆண்ட்ராய்டு P-யிலும் இதேபோல பேக்கிரவுண்டில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறது கூகுள். அதில் முக்கியமானது பேக்கிரவுண்டில் இயங்கும் அப்ளிகேஷன்கள் கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துவதைத் தடுப்பது.

இதன்படி மொபைலின் பின்னணியில் செயல்படாமல் இருக்கும் ஆப்கள், மொபைலின் கேமராவையோ, மைக்ரோஃபோனையோ பயன்படுத்த முடியாது. ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யும்போதே ஆண்ட்ராய்டு சிஸ்டம் அதற்கு UID என்னும் User ID-யைக் கொடுத்துவிடும். அந்த ஆப் இயங்கும்போது அதன் UID-ஐ வைத்து, அது என்னென்ன விஷயங்களை எல்லாம் (கேமரா, GPS போன்றவை) பயன்படுத்துகிறது என்பதை ஆண்ட்ராய்டு P கண்காணிக்கும். ஒருவேளை பயனாளர் அந்த ஆப்பை பயன்படுத்தவில்லை எனில் அந்த ஆப் செயல்படாமல் பின்னணியில் அமைதியாக இருக்கவேண்டுமல்லவா? ஆனால், சில ஆப்கள் அப்படி இருக்காது.

ரகசியமாக நம் மொபைலின் சில பகுதிகளை இயங்கச்செய்யும். அதுபோன்ற சமயத்தில் கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் அவை இயக்க வாய்ப்புண்டு. மைக்ரோஃபோன் மூலமாக உரையாடல்களையும், கேமரா மூலம் படங்களையும் உருவாக்கி, சேமிக்க முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யும்போதே, அந்த ஆப் என்னென்ன பெர்மிஷன், எதற்கெல்லாம் கேட்கிறது எனக் கூகுள் தெளிவாகச் சொல்லிவிடும். அப்போதே நாமும் தெரிந்துகொள்வோம். ஆனால், ஒரு சாதாரண APK-ஐ மூன்றாம் நபர்களிடம் இருந்து வாங்கி இன்ஸ்டால் செய்கிறீர்கள் என்றால் அந்த ஆப் என்ன செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அந்த ஆப்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யலாம். இதனால் பயனாளர்களின் பிரைவசியும் பாதிக்கப்படும்.

இதற்கு 'செக்' வைக்கும் விதமாகத்தான் கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் பயனாளர்களின் பிரைவசிக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். எனவே, ஆண்ட்ராய்டு P-யில் ஏதேனும் ஆப்கள் உங்களுக்குத் தெரியாமல் கேமராவை இயக்க முயன்றாலோ, மைக்ரோஃபோனை இயக்க முயன்றாலோ உடனே Error மெசேஜ் காட்டப்படும். இதுதவிர ஐபோன் X-ஐ போலவே முன்புற வடிவமைப்பிற்கு ஏற்ற OS சப்போர்ட், மேம்படுத்தப்பட்ட கூகுள் அசிஸ்டன்ட் போன்ற வசதிகளையும் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் கூகுள் சேர்க்கவிருக்கிறது.

லேப்டாப்பின் வெப் கேமிலும், மைக்ரோஃபோனிலும் டேப் ஒட்டப்பட்டிருக்கும் மார்க் சக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் போட்டோ உங்களுக்கு நினைவிருக்கலாம். ஹேக்கிங்கிலிருந்து தப்பிப்பதற்காக மார்க் செய்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு அது. என்னதான் ஃபேஸ்புக் சி.இ.ஓ.வாகவே இருந்தாலும்கூட இந்த டிஜிட்டல் உலகில் சுதந்திரம் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான். நம்மை எந்த கேமராக்களும் கண்காணிக்கலாம். நம் தகவல்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அதுதான் நிதர்சனம். எனவே, இதுபோன்ற சின்னச் சின்ன முயற்சிகள் டிஜிட்டல் உளவாளிகளுக்குத் தடைகளாக இருக்கலாமே தவிர, தடுப்பரணாக இருக்காது; இருக்கவும் முடியாது!
 

அடுத்த கட்டுரைக்கு