Published:Updated:

மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810

மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810
மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810

நோக்கியா மீண்டும் சந்தைக்கு திரும்பிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருட காலத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி நோக்கியாவின் பிரபல 3310 பேஸிக் மாடல் மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், சந்தையில் பெரிதாக எதுவும் தாக்கத்தை நோக்கியா ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற நோக்கியா பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress 2018 என்ற நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது நோக்கியா. நான்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஒரு பேஸிக் மாடல் என ஐந்து மொபைல்களை அறிமுகப்படுத்தி இந்த வருடத் தொடக்கத்தை அதிரடியாகத் துவக்கியிருக்கிறது  நோக்கியா.

Nokia 8110


மக்களின் மனதில் இடம்பிடிக்க நாஸ்டால்ஜியா என்ற விஷயத்தை மிகவும் நம்புகிறது நோக்கியா. அதை மனதில் வைத்தே மக்களிடையே பிரபலமாக இருந்த மொபைல் மாடல்களை அதே பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நோக்கியா 8110. 1996-ம் ஆண்டு நோக்கியா இதை அறிமுகப்படுத்தியது. கீபோர்டின் மேலே ஸ்லைடரைக் கொண்டிருந்த இதுவும் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

1999-ம் ஆண்டில் வெளியான 'தி மேட்ரிக்ஸ்' திரைப்படத்தில் ஓர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கதாநாயகன் இந்த ஸ்மார்ட்போனை கொரியரில் பெறுவதாகவும், அங்கிருந்து தப்பிக்க முயலும்போது மொபைலை மாடியில் இருந்து தவற விடுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த மொபைலுக்கு மேட்ரிக்ஸ் மொபைல் என்ற செல்லப்பெயரும் உண்டு. தற்பொழுதும் அதே நோக்கியா 8110 மொபைலை, நவீன வசதிகளுடன் பழைய மொபைல் போன்ற வடிவமைப்புடன் ஸ்லைடரும் இருக்குமாறு வடிவமைத்திருக்கிறது நோக்கியா.

புதிய மொபைலில் 2.4 இன்ச் ஸ்க்ரீன் இருக்கிறது. 512 MB ரேம் மற்றும் 4 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 2 MP கேமரா ஃபிளாஷ் வசதி இருப்பதால் ஒளி குறைவாக இருந்தால்கூட புகைப்படம் எடுக்க முடியும். கடந்த முறை 3310 மொபைலை அறிமுகப்படுத்தும்போதே அதில் 4G வசதி இல்லாதது பெரிய குறையாகப் பார்க்கப்பட்டது. எனவே இந்த மொபைலில் 4G வசதியைத் தந்திருக்கிறது. வைஃபை வசதி இருப்பது இன்னும் ஸ்பெஷல், மொபைலை 4G ஹாட்ஸ்பாட்டாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 1500 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. இதன் மூலம் 25 நாள்கள் ஸ்டான்ட் பை டைமை (Standby Time) பெற முடியும் என்று கூறுகிறது நோக்கியா. மே மாதம் முதல் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 6,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. நாஸ்டால்ஜியா விரும்பிகள் அலர்ட்டாக இருக்கவும்!

Nokia 8 Sirocco

அடுத்து நோக்கியா அறிமுகப்படுத்தியிருப்பது நோக்கியா 8 சிராக்கோ என்ற ஸ்மார்ட்போன். 5.5” 2K டூயல் கர்வ்டு டிஸ்ப்ளேதான் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம். இந்த வடிவமைப்பில் வெளியாகும் முதல் மொபைலும்கூட. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸர், 6 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. டூயல் 12 MP கார்ல் செயிஸ் தாயரிப்பு கேமராக்கள் இந்த மொபைலின் பின்புறம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறம் 5 MP கேமரா இருக்கிறது. 3.5mm ஆடியோ ஜாக்கை இந்த மொபைலில் இருந்து நீக்கிவிட்டது நோக்கியா. Gorilla Glass 5 மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலைப் பயன்படுத்தியே இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் 'உறுதித்தன்மை'க்கு கியாரண்டி தருகிறது நோக்கியா. IP67 சர்டிஃபிகேட் இருப்பதால் தண்ணீர் மற்றும் தூசியால் பாதிப்படையாது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. ஆனால், இதில் 18:9  டிஸ்ப்ளே இல்லாதது மிகப்பெரிய குறை. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தைப் பயன்படுத்தும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 60,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. 

Nokia 7 plus

வடிவமைப்பில் அசத்துகிறது நோக்கியா 7 பிளஸ். 12MP வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 13MP டெலிபோட்டோ என டூயல் கார்ல் செயிஸ் கேமராக்கள் இருக்கின்றன. 16MP முன்புற கேமராவும் இருக்கிறது. 6" 18:9 IPS LCD ஸ்க்ரீன் இருக்கிறது. 4 GB LPDDR 4 ரேம் மற்றும் 64 GB இன்டர்னல் மெமரியைக்கொண்டிருக்கும் இதில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது இருபதாயிரம் ரூபாய்க்குள் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Nokia 1 மற்றும் Nokia 6


4.5 இன்ச் ஸ்க்ரீன், குவாட் கோர் ப்ராசஸர், 5 MP மற்றும் 2MP கேமரா,  2150 mAh பேட்டரி என ஆண்ட்ராய்டின் ஆதிகாலத்து வசதிகள் இதில் இடம்பிடித்திருக்கின்றன. வடிவமைப்பிலும் வசதியிலும் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று இதை வடிவமைத்திருக்கிறது நோக்கியா. அதுவும் இந்த மொபைல் ஆறாயிரம் ரூபாய் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சிதான், அதே விலையில் இதைவிட இரண்டு மடங்கு வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதனால்  இந்த மொபைல் சந்தையில் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகம்தான். கடந்த வருடம் அறிமுகப்படுத்திய நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் சில வசதிகளை அப்டேட் செய்து புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. பழைய மொபைலோடு ஒப்பிடும்போது முன்புறமாக இருந்த ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்புறமாக இடம் மாற்றப்பட்டிருக்கிறது, சற்று அதிகத் திறன் கொண்ட குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

நோக்கியா அறிமுகப்படுத்தியிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும் சந்தையில் இருக்கும் மற்ற மொபைல்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன்களில் புதிதாக எந்த வசதியுமே இல்லை. புதிதாக வசதிகளைச் சேர்ப்பதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது. நோக்கியாவில் இருந்து புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.