Published:Updated:

திகிலூட்டிய சிரிப்பு சத்தம்... பயனர்களை அலறவிட்ட அமேசான் எக்கோ! #AmazonEcho

திகிலூட்டிய சிரிப்பு சத்தம்... பயனர்களை அலறவிட்ட அமேசான் எக்கோ! #AmazonEcho
திகிலூட்டிய சிரிப்பு சத்தம்... பயனர்களை அலறவிட்ட அமேசான் எக்கோ! #AmazonEcho

ரவு நேரம். அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு சிரிப்புச் சத்தம். பூட்டியிருக்கும் வீட்டைக் கடந்து செல்லும்போது ஒரு சிரிப்புச் சத்தம். இதெல்லாம் பேய் படத்தில் வரும் காட்சிகள் இல்லை, நிஜத்தில் நடந்தவை. இந்தச் சத்தத்தைக் கேட்டது நானாயிருந்தால், தலைதெறிக்க ஓடியிருப்பேன். பலரும் அதைத்தான் செய்திருப்பார்கள். ஒரு சிலர் தைரியமானவர்களாக இருக்கலாம். ஆனால், உண்மையில் பலர் அப்படியில்லை என்பதை, அவர்களைப் பயந்து வீதியில் ஓடவிட்டு நிரூபித்துள்ளது, அமேஸான் எக்கோ (Amazon Echo).  

Photo Courtesy: Amazon

ஆப்பிள் நிறுவனத்தின் சிரியை போன்று, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி ஒரு ஸ்பீக்கரை வடிவமைத்தது, அமேஸான். இந்த ஸ்பீக்கரை பாட்டு கேட்பதற்காக மட்டுமில்லாமல், நம்முடன் பேசுவதற்கு, அலாரம் போன்றவற்றை வைப்பதற்கு, செய்ய வேண்டியவற்றை ஞாபகப்படுத்துவதற்கு, வானிலை, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை உடனே கண்டறிந்து சொல்வதற்கு என இதைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். இந்த ஸ்பீக்கர் இணையத்துடன் இணைக்கப்பட்டு, செல்போன் செயலி மூலமும் இதனைக் கட்டுப்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டது. இத்தனை வேலைகளையும் சாத்தியமாக்கி, சிறப்பாகச் செயல்பட்டு வந்தது அந்தச் செயற்கை நுண்ணறிவு.

அமேஸான் எக்கோ ரெகுலர் மோடில் இருக்கும்போது நாம் பேசும் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருக்கும். ஆனால், பதில் எதுவும் சொல்லாது. 'அலெக்சா' என்று சொன்னபின்னரே, நமக்குப் பதில்களைச் சொல்ல ஆரம்பிக்கும். அலெக்சா என்பது அமேஸான் நிறுவனத்தின் இணைய கம்பெனியின் பெயர். இதனோடு சேர்த்து 'அமேசான் எக்கோ' என்று தனது ஸ்பீக்கருக்குப் பெயர் வைத்தது, அமேஸான்.

மனிதனின் அறிவே குழம்புகிறது. அதேபோல் வெறும் கோடிங்குகளால் செயற்கை நுண்ணறிவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தானே செய்யும்? அப்படிப்பட்ட பிரச்னைக்கு உதாரணம், அமேஸான் எக்கோவின் அந்தத் திகிலூட்டும் சிரிப்புச் சத்தம். ஸ்பீக்கரைப் பயன்படுத்திய சில பயனர்கள் அது திடீரெனத் தானாகச் சிரிப்பதாகக் கூறினார்கள். அதுவும் ஒரு மனிதர் சிரிப்பதுபோல இல்லாமல் சற்று பயமுறுத்தும் விதத்தில் அந்தச் சிரிப்பு இருந்ததாக அதனைக் கேட்டவர்கள் சொல்கிறார்கள். இதேபோல இதற்கு முன்னர் ஒருமுறை  இந்த ஸ்பீக்கர் தனியாகப் பேசுவதாக ஒரு புகார் இருந்தது. ஆனால், அருகே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ஒன்றில் அந்த நேரத்தில் 'Alexa, Laugh' என்ற சொற்றொடர் வந்ததாகவும், அதனால்தான் ஸ்பீக்கர் சிரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை தவறான புரிதலால் ஏற்பட்டு விட்டதாக அமேஸான் நிறுவனமும் விளக்கம் அளித்தது. 

இந்தப் பிரச்னை புதிய அப்டேட்டில் சரிசெய்யப்பட்டு விட்டது. 'Alexa, Laugh' என்று கூறினால் சிரிக்கும் வகையில் இருந்ததை மாற்றியமைத்துள்ளோம். இனி, 'அலெக்சா, சிரிக்க முடியுமா?' (Alexa, Can you laugh?) என்று கேட்டபின் 'நிச்சயமாக, நான் சிரிக்கிறேன்' (Sure, I laugh) என்று சொல்லி அதன் பின்னரே சிரிக்கும். இவ்வாறு மாற்றியதால் ஸ்பீக்கர் தவறாகப் புரிந்துகொண்டு சிரிப்பதைக் குறைக்க முடியும் என அமேஸான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Photo Courtesy: Amazon

எக்கோ எனப் பெயர் வைத்ததற்காக அந்த எக்கோ படுத்தியபாடு இருக்கிறதே, அது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அப்படி இந்தச் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டவர்களின் ட்விட்டரில் பதிவுகள் சில... 

சமையலறையில் வேலைசெய்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு சிரிப்புச் சத்தம். அப்படியே பயத்தில் உறைந்து போனேன். ஏதோ ஒரு குழந்தை எனக்குப் பின்னால் நின்று சிரிப்பதுபோல் இருந்தது!

வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருக்கும்போது, அலெக்சாவின் சத்தமான அச்சுறுத்தக்கூடிய சிரிப்பைக் கேட்டேன்... என்னைக் கொல்வதற்கு இந்த இரவு சரியானது என நினைத்தேன்.

இந்தச் சிரிப்பைக் கேட்டதும் பேன்ட்டை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

புதிய வீட்டிற்குக் குடிவந்திருந்தோம். அந்தச் சிரிப்புச் சத்தம், சுடுகாடு இருந்த இடத்தில் வீட்டைக் கட்டி விற்றுவிட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டில் தனியாக இருந்தேன். மாடிப்படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும்போது, அந்தச் சிரிப்பு சத்தம். சிறிதுநேரம் சுயநினைவை  இழந்துவிட்டேன். 

என்னதான் தொழில்நுட்பம் மனிதனைவிடச் சிறப்பாக செயல்பட்டாலும், அதிலும் பல பிரச்னைகள் ஏற்படும் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது. அதுசரி, செயற்கை நுண்ணறிவை உருவாக்கியதே மனித அறிவுதானே? மனிதன் தன் கட்டுப்பாட்டில் இந்தக் கருவிகள் இருப்பதாகவும், இவற்றைக்கொண்டு பலவற்றைச் சாதிக்கப்போவதாகவும் நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், எப்போதும் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்கைத் தொழில்நுட்பம் இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வு மற்றுமொரு உதாரணமே!