Published:Updated:

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

Published:Updated:

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கார், பைக்... இவற்றையும் விட்டுவைக்காத சைபர் தீவிரவாதிகள்!

சைபர் டெரரிஸ்ட் மற்றும் அவர்களது சைபர் அட்டாக்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் சைபர் தாக்குதல்கள் நடக்கின்றன. அதில் குறிவைக்கப்படுவது ஒரு தனிநபருடைய அல்லது ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கியமான தரவுகள், ஆவணங்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள். இதுவரை வலைதளங்களில், இணையக் கணக்குகளில் டேட்டா இழப்புகளைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால், இனிமேல் நமது வீட்டு உபயோகப் பொருள்களில் இந்த சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சைபர் தீவிரவாதிகள் எப்படிச் செயல்படுவார்கள்? சைபர் அட்டாக்ஸ் செய்வது எப்படிச் சாத்தியமாகிறது? என்று பார்க்கலாம். நாம்தான் பாஸ்வேர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்து இருக்கிறோமே என்று நினைக்காதீர்கள். இதுவரைக்கும் 500 மில்லியன் யாஹூ (Yahoo) கணக்குகள், 359 மில்லியன் மை ஸ்பேஸ் (MySpace) கணக்குகள், 164 மில்லியன் லின்கிட்இன் (LinkedIn) கணக்குகள் மற்றும் 152 மில்லியன் அடோப் (Adobe) கணக்குகள் தங்கள் டாட்டாவை இழந்துள்ளன. இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களது பாஸ்வேர்ட் கணிக்கும் விதத்தில் அமைந்ததே ஆகும். பெரும்பாலான மக்கள் தாங்கள் ஆரம்பிக்கும் எந்தவொரு இணையக் கணக்கிற்கு ஒரு டீபால்ட் பாஸ்வர்டை மட்டுமே கொடுக்கிறார்கள். அதை மாற்றி அமைப்பதே இல்லை. ஆகையால் அவற்றை எளிதில் யூகித்துத் தாக்க முடிகிறது. 2016-ம் ஆண்டில் மிராய் (Mirai) என்ற மால்வேர் இந்த பாஸ்வேர்ட் யூகிப்புத் தந்திரத்தைக்கொண்டு பல ஐ.ஓ.டி (IoT’s) கருவிகளை ஹேக் செய்து உள்ளது.

எதில் எல்லாம் சைபர் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டலாம் என்று யோசித்து இருக்கீர்களா? நீங்கள் நம்பினால் நம்புங்கள், உங்கள் செல்போன் தொடங்கி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், வெப் கேமரா, பாதுகாப்பிற்காக வைக்கப்படும் செக்யூரிட்டி கேமரா, கார், பைக், ஸ்மார்ட் டிவி ரிமோட், ஏசி ரிமோட், தண்ணீர் டேங்க் சென்சார்ஸ், டிவி செட்டாப் பாக்ஸ், காலிங் பெல், சென்சார் மூலம் இயங்கும் லைட், மின்விசிறிகள், மின்சாரப் பயன்பாட்டைக் குறிக்கும் மீட்டர்கள் என எல்லாமே இந்த லிஸ்டில் அடங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உடல் நலப் பராமரிப்பு சாதனங்களும் இந்த டெக்னாலஜி திருடர்களுக்கு அடிபணிந்து அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும். ஒரேயொரு கண்டிஷன்; இவை அனைத்தும் இணையத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி, இணையம் இல்லாமலும், எங்கு வேண்டுமானாலும் இருந்துகொண்டு, ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டு இருக்கும் இதயத் துடிப்பை உண்டாக்கும் பேஸ் மேக்கரை இயக்கும் வல்லமை சைபர் தீவிரவாதிகளுக்கு இருக்கிறது. அதேபோல், ஒரு விமானப் பாதையை மாற்றி அமைத்தல், தவறான வானிலை அறிக்கை, டிராஃபிக் சிக்னலில் ஒளி மாற்றங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள செக்யூரிட்டி கேமராக்கள், பெரு நிறுவன கட்டுப்பாடுகள், கட்டடங்களில் இயங்கும் சென்சார்கள் போன்ற இன்னும் ஏராளமான கருவிகளை இவர்களால் இயக்க முடியும்.

உதாரணமாக ஒரு சைபர் தீவிரவாதி இணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு காரினைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அந்தக் காரை தவறான திசையில் செலுத்தினாலே அவரது குறிக்கோள் நிறைவேறி விடும். மாற்று வழியில் வரும் இந்தக் காரின் போக்கு புரியாமல் மற்ற வாகனங்கள் தடுமாறும், பல விபத்துக்கள் நிகழும் வாய்ப்புகளும் அதிகமாகும். சென்சார்களை செயல்படாது வைக்கவும், அவற்றில் தவறான டேட்டாவை பதிவு செய்யவும் இவர்களால் முடியும். இதற்கெல்லாம் இவர்களுக்கு உதவுவது பாட்நெட் (Botnet) எனப்படும் ஒரு தொழில்நுட்பம். பாட்நெட் என்பது ஹேக் செய்யப்பட்ட பல கணினிகளின் ஒரு நெட்ஒர்க். இது நூறு அல்லது ஆயிரம் அல்லது மில்லியன் கணக்கில் கணினிகள் ஒருங்கிணைந்த ஹேக் செய்யப்பட்ட நெட்ஒர்க். இதில் இருந்து ஸ்பேம் மெசேஜ் அல்லது கோரிக்கைகளை நாம் தாக்கவிருக்கும் கருவிக்குத் தொடர்ந்து அனுப்பினால் அதனை நிலைகுலையச் செய்ய முடியும். சென்னையில் காலை 8 மணிக்கு இந்த பாட்நெட் டைடல் பார்க் சிக்னலைத் தாக்கினால் என்னவாகும்? நாலா பக்கமும் இருந்து பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், அலுவலக வாகனங்கள், கார்கள், பைக்குகள் சாலையில் நடந்து செல்பவர்கள் என எல்லாரும் ஒரே நேரத்தில் சிக்கலுக்கு ஆளாவார்கள். மஞ்சள் சிக்னல் பார்த்தாலே வேகத்தை அதிகரிக்கும் நாம் நாலா பக்கமும் பச்சை சிக்னல் பார்த்தால் சும்மாவா இருப்போம். எடுடா வண்டியன்னு ஓடிடுவோம்ல?

ஹெல்த் கேர் (Health care) எனப்படும் உடல்நலம் சார்ந்த கருவிகள் மற்றும் சேவைகளை செய்யும் நிறுவனங்கள் தொழில்நுட்ப யுகத்தில் அதிகம் வளர்ந்து வருகிறது. ஒரு நோயாளிக்குக் கொடுக்கப்படும் ஆக்சிஜனின் அளவை மாற்றவும், அவருக்கு வழங்க வேண்டிய உணவுகளில் திருத்தம் செய்யவும் முடியும். இதைத் தடுக்கவும் கண்காணிக்கவும் அந்தந்த நிறுவனங்கள்தான் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள வார்ஃப்7 (Wharf7) அலுவலகம் ஹேக் செய்யப்பட்ட போது பி.பி.சி-க்காக ஒரு ஹேக்கர் கொடுத்த தகவல் இது. "கட்டடங்களை நாங்கள் மிகவும் எளிதாகத் தாக்குவோம். ஏறத்தாழ 50,000 கட்டடங்கள் இணையம் மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதில் 2000 கட்டடங்கள் பாஸ்வேர்ட் ஏதும் இன்றி இணையத்தில் இணைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, அவை மூலம் நாங்கள் மற்ற கட்டடங்களையும் குறிவைத்துத் தாக்க முடியும்" இது ஆஸ்திரேலியாவில்தானே என்று நினைக்காதீர்கள். நம் நாட்டிலும்  ஸ்மார்ட் ஹோம் பொருள்களை வாங்கி வைத்துள்ளோம். அவையும் இந்த சைபர் தாக்குதல்களுக்கு பலியாகக்கூடும் அபாயம் உள்ளது.

இங்கே நாம் குறிப்பிடுவது ஒரு நியாயமான அச்சுறுத்தல். எதிர்காலத்தில் நீங்கள் தனியாக உங்கள் வீட்டில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் தனியாக இருக்கவில்லை என்று நம்புங்கள். ஏனெனில் தொழில்நுட்பம் உங்களை உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் அனுமதி இல்லாமலேயே உங்களைப் பலருடன் இணைத்துள்ளது. அந்தப் பலர் யார் என்பதை நீங்களோ நானோ அறியவும், அந்த இணைப்பைத் தகர்க்கவும் முடியும் என்ற நிலை வருமானால், மகிழ்ச்சி.