Published:Updated:

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

படிக்கத் தூண்டும் 4D

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

யானையின் பிளிறல் சத்தத்தோடு காட்டில் இருக்கிற மாதிரியும், அண்டவெளியில் சுற்றும் கோள்களைக் கண்ணெதிரில் பார்த்தும் வியந்துபோகும் மாணவர்கள் முகங்களில் அவ்வளவு சந்தோஷம். அந்தச் சந்தோஷத்தோடு பாடங்களைப் படிக்கும்போது, அவங்க மனதில் எளிதாகப் பதியுது. இது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்கிற அந்த ஆசிரியரின் முகத்தில் குழந்தைகளின் அதே உற்சாகம்.

இந்த உற்சாகத்துக்குக் காரணம், தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு செயலி (App). நம்   தாத்தாக்கள் காலத்தில், மணலில் ‘அ, ஆ, இ...' என எழுதி பாடம் கற்றார்கள். அப்பாவும்  அம்மாவும் சிலேட்டில் பலப்பத்தால் எழுதினார்கள். நீங்களோ ‘A for Apple', ‘B for Ball' என நோட்டில் எழுதினீர்கள். இனி, ‘E for Elephant' எனச் சொல்லும்போதே, உங்கள் டேபிளில் ஒரு யானை வந்து நிற்கும். அதன் பிளிறலைக் கேட்டுக்கொண்டே படிக்கலாம் என்றால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

இது மாயாஜாலம் அல்ல; மந்திரக்கோலும் வேண்டாம்; ஒரு ஸ்மார்ட்போன் போதும். அந்த செல்போனில் ‘Animals 4D+' என்ற செயலியைத் தரவிறக்கம் செய்துகொண்டால் போதும். இவர்களுடைய இணையதளத்தில் A முதல் Z வரை ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு விலங்கு, பறவைகள், பூச்சிகளின் படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்களை பிரதி எடுத்துக்கொண்டு, இந்தச் செயலியைப் பயன்படுத்தி, கேமரா வழியாகப் பார்க்க வேண்டும். நாம் பார்க்கும் அந்த விலங்கு, காகிதத்தில் இருந்து எழுந்து ஓடும், பறக்கும், மிதக்கும், சத்தம் எழுப்பும். நீங்கள் காட்டுக்குள் இருக்கும் உணர்வை உண்டாக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி இந்தச் செயலியின் மூலம் பாடங்களையும் கற்கலாம். விண்வெளி பற்றித் தெரிந்துகொள்ள ‘Space 4D+', மனித உடல் உறுப்புகள் பற்றிக் கற்றுக்கொள்ள ‘OctagonAR Humanoid', டைனோசர்கள் பற்றிப் படிக்க, ‘Dinosaur 4D'  எனப் பல்வேறு செயலிகள் உள்ளன. இதுபோல எழுத்துக்களையும் வரவைக்கலாம். அதைத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர்  தன்னார்வத்துடன் செய்துகாட்டி, தங்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியோடு பாடங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையான அப்ளிகேஷன்கள் மிகை யதார்த்தம் (Augmented Reality) எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பொருளைப் பார்த்ததும், நம் கண்களும் மூளையும் சேர்ந்து அதைப் பற்றிய அதிகத் தகவல்களைப் புரிந்துகொள்ளவைக்கும். இந்த ஆக்மென்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்தான், இப்போது பல துறைகளிலும் உள்நுழைந்து கலக்க ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான ’போக்கிமான் கோ’ விளையாட்டு, இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவானதே.

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

விழுப்புரம் மாவட்டம், சோமண்டார்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான மு.விஜயகுமார், ‘‘இந்த ஆப் பற்றித் தெரிஞ்சதும் டவுண்லோடு செய்து மாணவர்களுக்குக் காட்டினேன். ரசிச்சு, சந்தோஷப்பட்டாங்க. அழிந்துவரும் விலங்குகள், காட்டில் வாழும் உயிரினங்கள், வானியல் சார்ந்த பாடப் பகுதிகள், தொழில்கள் போன்றவற்றை இந்தத் தொழில்நுட்பம் வாயிலாகக் கற்பிக்க முடிகிறது. மாயத் தோற்றம்தான் என்றாலும், மாணவர்களுக்கு நேரில் காட்ட முடியாத இடங்களை, நேரடி அனுபவம் போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து, கற்பிக்க முடிகிறது'' என்கிறார்.

‘‘எங்க சார் இந்த அனிமேஷனைக் காண்பித்தபோது, மேஜிக் பார்த்த மாதிரி இருந்துச்சு. அந்த விலங்குகளைப் பிடிக்கத் தோன்றிச்சு. குரங்கு வாழைப்பழம் சாப்பிடுறது ரொம்பப் பிடிச்சது'' என்கிறார், எட்டாம் வகுப்புப் படிக்கும் சங்கமித்ரா.

‘‘நான் இதுவரைக்கும் கங்காருவும் திமிங்கிலமும் எப்படி சத்தம் போடும்னு கேட்டதே இல்லை. இதில்தான் தெரிஞ்சுக்கிட்டேன். என் பக்கத்தில் வர்ற மாதிரி இருந்த ஆமையைத் தொட்டுப் பார்த்தேன்'' என குஷியாகச் சிரிக்கிறார், ஆறாம் வகுப்பு மாணவர், அஜித்.

சத்தியமங்கலம், அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ஸ்ரீதிலீப்,  ‘‘இந்த ஆப்ஸ் மூலம், ஒரு சில படங்களை மட்டுமே இலவசமாக பிரின்ட்அவுட் எடுக்க முடிகிறது. எனினும், இதயத்தின் செயல்பாடு, உடல் உறுப்புகள், தனிமங்கள் எனப் பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு எளிதாகப் புரியவைக்கலாம். மாணவர்களுக்கு இது புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்'' என்கிறார்.

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

வேலூர் மாவட்டத்தின் சின்னாரப்பட்டி,  கந்திலி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியரான ஆர்.கார்த்திகேயன், ‘‘எங்கள் பள்ளியிலிருந்து ஒரேயொரு முறைதான் சுற்றுலா சென்றிருக்கிறோம். அப்போதுதான் விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆனால், இந்த 4D ஆப் மூலம் காட்டையும் அண்டவெளியையும் வகுப்புக்கு வரவைத்தேன். செல்போனைவிட டேப்லட் (Tablet) மூலம் இன்னும் பெரியதாகக் காட்ட முடியும். மாணவர்களை அந்த உயிரினங்களோடு இருப்பதுபோல புகைப்படமும் எடுத்துக் கொடுத்தால், மிகவும் மகிழ்வார்கள்'' என்கிறார்.

‘‘இனிமே, ‘பாடம் படிக்க போரடிக்குது' என்கிற வார்த்தையே எங்ககிட்டே வராது. பார்த்துப் பார்த்து மகிழ்வோம். பாடங்களை நல்லாப் படிப்போம்'' என்கிற குழந்தைகளின் குரலில் பொங்குகிறது உற்சாகம்.

- வி.எஸ்.சரவணன்,சுப.தமிழினியன்
அட்டையில்: சென்னை, ஆலந்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.
அட்டைப் படம்: கே.ராஜசேகரன்  படங்கள்: கே.சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்.

எப்படிப் பயன்படுத்துவது?

ஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்!

பள்ளி ஆசிரியர்களே, மாணவர்களே...உங்கள் ஆண்ராய்டு ஸ்மார்ட்போன்  இணையதளத்தில், ‘Animal 4D+ App' என்று டைப் செய்யவும்.

அதில் வரும் செயலியை (App) டவுண்லோடு செய்யவும்.

பிறகு, உங்கள் செல்போனில் இருக்கும் செயலியைத் திறந்து, இங்கே இருக்கும் ஒட்டகச்சிவிங்கி மற்றும் ஆமைக்கு முன்பாகக் காண்பிக்கவும்.

சில நொடிகளில் ஸ்கேன் ஆகி, செல்போன் வழியே அவை உயிர்பெற்றுக் கண்ணெதிரே நிற்கும்; சத்தம் எழுப்பும். அட்டைப் படத்தில் இருக்கும் யானையையும் அதேபோல உயிர்பெறச்செய்து, பார்த்து மகிழுங்கள்!