Published:Updated:

200 மில்லியன் ஃபேஸ்புக் சிங்கிள்களே... மார்க் உங்களுக்காகச் செய்யும் புது உருட்டு தெரியுமா?

200 மில்லியன் ஃபேஸ்புக் சிங்கிள்களே... மார்க் உங்களுக்காகச் செய்யும் புது உருட்டு தெரியுமா?
200 மில்லியன் ஃபேஸ்புக் சிங்கிள்களே... மார்க் உங்களுக்காகச் செய்யும் புது உருட்டு தெரியுமா?

200 மில்லியன் ஃபேஸ்புக் சிங்கிள்களே... மார்க் உங்களுக்காகச் செய்யும் புது உருட்டு தெரியுமா?

ஃபேஸ்புக் 2007-ம் ஆண்டிலிருந்து இரண்டு நாள்கள் நடைபெறக்கூடிய டெவெலப்பர் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  F8 எனப்படும் இந்த மாநாட்டில் ஃபேஸ்புக்கின் புதிய தயாரிப்புகளும், வசதிகளும் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் அது தொடர்பான விசாரணைகள் எனப் பரபரப்பாகவே இருந்தாலும் உற்சாகமாக நடந்து முடிந்திருக்கிறது இந்த வருட மாநாடு. ஒவ்வொரு வருடமும் புதிய அறிமுகங்களுக்குத்தான் இந்த மாநாட்டின்போது முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இந்த வருடம் வேறு சில விஷயங்களையும் எதிர்பார்க்கலாம் என்று பலர் நினைத்தது போலவே இந்த மாநாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் தனிநபர் தகவல்களைத் தவறாக கையாளப்பட்டதில் உலக நாடுகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, பதில் சொல்லத் திணறியது ஃபேஸ்புக் நிர்வாகம். செய்த தவற்றை ஒப்புக்கொண்ட மார்க் சக்கர்பெர்க் தவற்றைத் திருத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். தற்போழுது அதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். இதுதொடர்பாக Clear History என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது தகவல்களை எந்தெந்த ஆப்கள், இணையதளங்கள் பயன்படுத்துகின்றன என்பதை இப்பொழுது இருப்பதை விடவும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். தகவல்களைப் பகிர்வதற்கு விருப்பமில்லை என்றால் அதை அழித்துவிடலாம். ஆனால், இது பயன்பாட்டுக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம். புதிதாக OCULUS GO எனும் VR ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்பொழுது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான VR ஹெட்செட்களைப் போல இதைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் தேவையிருக்காது என்பது ஸ்பெஷல். தேவைப்பட்டால் ப்ளூடூத் மற்றும் வைஃபை மூலமாகப் பிற சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதில் காட்சிகளை காண்பதற்கு 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. விலை 199 அமெரிக்க டாலர். வாட்ஸ்அப்பில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வசதியான க்ரூப் வீடியோ சாட் வசதி கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதேபோல இன்ஸ்டாகிராமிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஃபேஸ்புக் மேசெஞ்சரின் வடிவமைப்பை இன்னும் எளிமையானதாக மாற்றப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார் மார்க்.

இவற்றையெல்லாம் தவிர ஃபேக் நியூஸ்களுக்கு எதிராகப் போராடுவது, விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை, தேர்தல்களில் நேர்மையாகச் செயல்படுவது எனப் பல விஷயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் இவையனைத்தையும் விடவும் வேறு ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் எளிதாக ஈர்த்துவிட்டது. இங்கே ஃபேஸ்புக்கில் 200 மில்லியன் பேர் தங்களை 'சிங்கிள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நக்கலாகக் கூறிய மார்க் அவர்களுக்கு உண்மையாகவே ஏதாவது செய்ய வேண்டிருக்கிறது என்றார். உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய இந்தத் தீவிரமான பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மார்க் அறிமுகப்படுத்தியதுதான் 'dating' என்ற புதிய வசதி. டேட்டிங் செல்ல விரும்கிறவர்களுக்கு அவசியம் தேவைப்படக் கூடிய ஒரு வசதி, சிங்கிள்களுக்கும் கூடத்தான். இதெல்லாம் செட் ஆகுமா பாஸ் என்பவர்களுக்கு அமெரிக்காவில் நடைபெறும் திருமணங்களில் மூன்றில் ஒன்று ஆன்லைன் மூலமாகவே நடக்கிறது என்று ஆதாரம் காட்டுகிறார் மார்க்.

இதைப் பயன்படுத்த விரும்புபவர்கள் இதற்கென தனியே டேட்டிங் ப்ரொஃபைல் ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடியும். ப்ரொஃபைல் உருவாக்கிய பின்னர் இடம் மற்றும் ஒருவரின் விருப்பத்தேர்வை அடிப்படையாக வைத்து அருகில் இருக்கும் குழுவோ அல்லது நிகழ்வோ காட்டப்படும். அதைத் தேர்ந்தெடுத்து அன்லாக் செய்தால் அதில் இணைந்திருக்கும் மற்றவர்களின் டேட்டிங் ப்ரோபைல் காட்டப்படும். டேட்டிங் செய்ய விரும்பும் இருவரும் தனிப்பட்ட முறையில் சாட் செய்துகொள்ள முடியும். இந்த டேட்டிங் ப்ரோபைல் உறுதியாக அவர்களுடைய ஃபேஸ்புக் நண்பர்களுக்குக் காட்டப்படாது என்று மார்க் தெரிவித்திருக்கிறார். அதேபோல இது முழுக்க முழுக்க பிரைவசியை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மேசென்ஜர், வாட்ஸ்அப் போன்ற இதர சாட்டிங் வசதிகளுடன் இது இணைக்கப்படாது என்றும் ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தற்காலிக உறவுகளாக இல்லாமல் இது நீண்டகால உண்மையான உறவுகளை உருவாக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். இது வெற்றிபெறுமா என்ற சந்தேகமே எழத்தேவையில்லாத ஒரு திட்டம் என்று மார்க்கிற்கு முன்னரே தெரிந்திருக்கும். ஆனால், அது உலகுக்குத் தெரிய வேண்டுமே, இது ஹிட்தான் நிரூபிக்கும் வகையில் டேட்டிங் ஆப்பில் கொடிகட்டிப் பறக்கும் டின்டர் (Tinder) நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே டின்டர் போன்ற ஆப்கள் பிரபலமாக இருக்கின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தமட்டில் சில நகரங்களில் மட்டுமே டின்டர் என்ற வார்த்தையை அறிய முடியும். கிராமப்புறங்களிலெல்லாம் டேட்டிங் என்ற வார்த்தையைக் கேட்டிருக்கக்கூட மாட்டார்கள். ஆனால், ஃபேஸ்புக் அப்படி இல்லை அது ஏற்கெனவே பலருடைய அறிமுகத்தையும் பெற்றுவிட்டது. மொபைல் வைத்திருக்கும் அனைவருமே ஃபேஸ்புக்கைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அதை ஒரு தளமாக பயன்படுத்தி டேட்டிங் என்ற விஷயத்தை அனைவரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்து விட முடியும் என்ற மார்க்கின் யோசனை. இந்தியா போன்ற நாடுகளில் டேட்டிங் கலாசாரம் என்பது இன்னும் பிரபலமாகாத நிலையில் ஃபேஸ்புக்கின் இந்த புதிய வசதி இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். ஆகவே, ஃபேஸ்புக் சிங்கிள்களே உங்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கப்போகிறது. 

அடுத்த கட்டுரைக்கு