Published:Updated:

ஐபோனை ஒழுங்காக காப்பி அடிக்குமா ஒன்ப்ளஸ் 6...?! #Oneplus6

ஒன்ப்ளஸ் 6 தோற்றத்தில் ஐபோன் 8 போலவேதான் இருக்கும். அப்படியெனில் மற்ற நிறுவனங்கள் போலவே ஒன்ப்ளஸ்ஸூம் சாஃப்ட்வேரில் சொதப்ப வேண்டும் அல்லவா?

ஐபோனை ஒழுங்காக காப்பி அடிக்குமா ஒன்ப்ளஸ் 6...?! #Oneplus6
ஐபோனை ஒழுங்காக காப்பி அடிக்குமா ஒன்ப்ளஸ் 6...?! #Oneplus6

திர்பார்ப்புகள் அதிகமிருக்கும் எந்தவொரு கேட்ஜெட்டும் வெளியிடப்படுவதற்கு முன்பும், அதுதொடர்பான வதந்திகளும், செய்திகளும் சமூக வலைதளங்களில் வலம்வந்துகொண்டேதான் இருக்கும். ஆப்பிளின் ஐபோனோ, கூகுளின் பிக்ஸலோ அடுத்த வாரம் வெளியாகிறது எனில், டெக் மீடியாக்கள் முழுவதுமே அது தொடர்பான வதந்திகளும், செய்திகளும்தான் குவிந்திருக்கும். இப்படி மொபைல் போன் வருவதற்கு முன்னரே அதன் வசதிகள், வடிவமைப்பு, விலை போன்ற விஷயங்கள் கசிவது, அவற்றின் மீதான எதிர்பார்ப்பைக் குறைக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வதந்திகள்தான் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகின்றன. அதிகாரபூர்வமாக மொபைல்கள் வெளியாவதற்கு முன்புவரைக்கும், மீடியாக்களின் கவனத்தை தக்கவைத்துக்கொள்கின்றன. இதனால்தான் டெக் நிறுவனங்களும் இந்த வதந்திகளை விரும்புகின்றன. பல சமயங்களில் வதந்திகளுக்கு நிறுவனங்களே தூபம் போடுகின்றன. அப்படி வதந்திகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே தற்போது களமிறங்கத் தயாராகி வருகிறது ஒன்ப்ளஸ் 6. 

ஃபிளாக்ஷிப் மொபைலின் வசதிகளை மிட்ரேஞ்ச் போன்களிலேயே கொடுத்து அசத்துவதுதான் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ப்ளஸ். ஆனால், பழக்கதோஷம் மாறாமல் இன்னும் ஆப்பிள் ஐபோன்களை அப்படியே காப்பியடிப்பதுதான் அதன் மைனஸ். டிசைன், டூயல் கேமரா, ஃபேஸ் அன்லாக் போன்றவற்றில் ஐபோனை அப்படியே காப்பி அடித்தது ஒன்ப்ளஸ். இந்தமுறை அப்படி என்ன செய்யவிருக்கிறது?

விடாத 'ஐபோன்' மோகம்:

ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, விளிம்புகளற்ற டிஸ்ப்ளே என்றெல்லாம் மற்ற நிறுவனங்கள் மொபைல் டிஸ்ப்ளேவை மேம்படுத்திக்கொண்டிருக்க, ஆப்பிளோ Notch-ன் மூலமாக அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றது. முன்புற கேமரா, சென்சார்கள், ஸ்பீக்கர் ஆகிய அத்தனையையும் ஒரே ஒரு Notch-ல் அடைத்து மொபைலின் முன்புற தோற்றத்தையே ஸ்டைலிஷ்ஷாக மாற்றியது ஆப்பிள். இதற்கு முன்பே Essential நிறுவனம் இதேபோன்ற வடிவமைப்பை வெளியிட்டிருந்தாலும் ஆப்பிள் ஐபோன் X-க்கு பின்புதான் இந்த 'Notch' டிசைன் பிரபலமானது.

உடனே இதனை நகலெடுத்த பிரபல நிறுவனங்கள் பலவும் ஆளுக்கொன்றாக இதே டிசைனில் மொபைல்களை வெளியிட்டனர். அஸூஸ், எல்.ஜி, ஹூவாவே, ஒப்போ போன்ற நிறுவனங்கள் ஆப்பிளின் டிசைனை நகலெடுத்தாலும், ஆப்பிளின் தரத்தை நகலெடுக்க முடியவில்லை. காரணம், இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஹார்டுவேர் டிசைனில் மட்டும்தான் கவனம் செலுத்தின. ஆனால், ஆப்பிள் ஹார்டுவேர் மட்டுமின்றி சாஃப்ட்வேரிலும் கவனம் செலுத்தி அவற்றை வடிவமைத்தது. எனவே, அதில் சிக்கல்கள் இல்லை. ஆனால், இந்த நிறுவனங்களின் மொபைல்களில் சாஃப்ட்வேர் சொதப்பியது.

உதாரணமாக ஒரு ஆப் மெனுவில் இருக்கும் ஆப்ஷன்களில் பாதி, அந்த 'Notch' பகுதியில் ஒளிந்துகொள்ளும். காரணம், இந்த வசதி எல்லா ஆப்களுக்கும் பொருந்தாது. இதுதான் இங்கே சிக்கல். இப்படி வடிவமைப்பு என்ற பெயரில் தேவையின்றி ஐபோனை, ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனங்கள் காப்பியடிக்கின்றன. இதைச் சரிசெய்ய தனது ஆண்ட்ராய்டு ஓரியோவின் 'Notch' வடிவமைப்புக்கேற்ற மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள். ஒன்ப்ளஸ் குறித்த கட்டுரையில் மற்ற போன்களின் புராணமெல்லாம் எதற்கு எனத் தோன்றலாம். ஆனால், ஒன்ப்ளஸின் கதையே இங்கிருந்துதான் தொடங்குகிறது.

கடந்தமுறை ஒன்ப்ளஸ் 5 மாடலுக்காக, ஐபோன் 7-ஐ நகலெடுத்த ஒன்ப்ளஸ் இந்தமுறை ஐபோன் X-ன் 'Notch' வடிவமைப்பை நகலெடுத்திருக்கிறது. இதனால் ஒன்ப்ளஸ் 6 தோற்றத்தில் ஐபோன் X போலவேதான் இருக்கும். அப்படியெனில் மற்ற நிறுவனங்கள் போலவே ஒன்ப்ளஸ்ஸூம் சாஃப்ட்வேரில் சொதப்ப வேண்டும் அல்லவா? இதுதான் டெக்கீஸ்களின் கேள்வி. ஆனால், "மற்ற போன்களைப் போல வெறும் டிசைனை மட்டும் நாங்கள் எடுத்தாளவில்லை. மென்பொருள் விஷயத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். ப்ளேஸ்டோரில் இருக்கும் டாப் 1000 ஆப்களை, தனித்தனியாக இன்ஸ்டால் செய்து சோதனை செய்திருக்கிறோம். எனவே, ஒன்ப்ளஸ் 6 மற்றவற்றிலிருந்து மேம்பட்டதாகவே இருக்கும்." என்கிறார் ஒன்ப்ளஸின் இணை நிறுவனர் கார்ல் பெய். 

Photo courtesy: The Verge

நேர்த்தியான டிசைன்:

'Notch' டிசைனின் மூலம் போனின் ஸ்டைலைக் கூட்டும் ஒன்ப்ளஸ், மொபைலை முதல்முறையாக கிளாஸ் பாடியில் வடிவமைக்கவிருக்கிறது. 5 லேயர்களைக் கொண்ட நானோ கோட்டிங்கும் உண்டு. இதன்மூலம் மொபைல் இன்னும் மெருகேறும். தண்ணீரிலிருந்து மொபைலைப் பாதுகாக்கும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியைக் கடந்தமுறையே எதிர்பார்த்தனர் ஒன்ப்ளஸ் ரசிகர்கள். அவர்கள் ஆசை இந்தமுறை நிறைவேறும். ஒன்ப்ளஸ் 6 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதியைக் கொண்டதுதான்.

ஒன்ப்ளஸ் 6-ல் எடுக்கப்பட்ட அதிதி ராவின் படம்

அதிகரிக்கும் வேகம்:

இதுவரைக்கும் இல்லாத வேகம் என்பதுதான் ஒன்ப்ளஸ் 6-ன் விளம்பரமே. அதற்கேற்ப 8 GB ரேம் மற்றும் 256 GB மெமரி வேரியன்ட்டை களமிறக்குகிறது ஒன்ப்ளஸ். இதுதவிர 6 GB ரேம் / 128 GB மெமரி வேரியன்ட்டும் உண்டு. 64 GB வேரியன்ட் இருக்குமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஒன்ப்ளஸ்ஸிடம் இருந்து 256 GB மெமரி மாடல் வருவது இதுவே முதல்முறை. இதில் Snapdragon 845 பிராசஸர் பயன்படுத்தப்படவிருக்கிறது. 3,300 mAh பேட்டரி இடம்பெறும். வயர்லஸ் சார்ஜிங் வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்க்ரீன் அளவு 6.28 இன்ச். AMOLED டிஸ்ப்ளே. 3.5 mm ஆடியோ ஜாக்கில் எந்த மாற்றமும் இல்லை.

கேமராவில் என்ன புதுமை?

இதற்கு முந்தைய மாடலான ஒன்ப்ளஸ் 5T-யில் நல்ல பெயர் வாங்கிய அம்சங்களில் கேமராவும் ஒன்று. 16 + 20 MP திறன்கொண்ட டூயல் கேமராக்கள் இந்தமுறையும் தொடரும். முன்புறத்தில் 16 MP திறன்கொண்ட கேமரா இடம்பெறும். ஹார்டுவேர் தவிர்த்து சாஃப்ட்வேர் விஷயத்தில் இந்தமுறை ஒன்ப்ளஸ் அசத்தலாம். 

உலகளவில் வரும் 16-ம் தேதியும், இந்தியாவில் 17-ம் தேதியும் ஒன்ப்ளஸ் 6 வெளியாகவிருக்கிறது. இதன்பிறகு ஜூன் மாத தொடக்கத்தில் விற்பனை தொடங்கலாம் எனத் தெரிகிறது. 6 GB / 128 GB மாடல், 8 GB / 256 GB மாடல் இரண்டும் முறையே ரூ.37,000, ரூ.38,000 என இருக்கலாம். ஃபிளாக்ஷிப் மொபைல்களுக்கான இலக்கணத்தை இந்தமுறையும் சரியாகக் கடைபிடித்தால், ஆப்பிளை ஒழுங்காக காப்பியடித்தால் ஒன்ப்ளஸ்க்கு இன்னொரு ஹிட் பார்சேல்ல்ல்!