Published:Updated:

மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்?

மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்?
மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்?

ஒரு மொபைல் வாங்க விரும்பினால் அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? நேரில் போய் வாங்கினால் சில மணி நேரமும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் சில நாள்களும் ஆகும். ஆனால், ஒருவர் ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கிறார் என்றால் மேலே உள்ள கால அளவுகள் பொருந்தாது. ”அட ஆப்பிள் கூட இவ்வளவு அலப்பறை பன்றதில்ல பாஸ்” என்று அலுத்துக்கொள்கிறார்கள் ரெட்மி போனை வாங்க முடியாதவர்கள். விலைக்குத் தகுந்த வசதி, வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு என  இந்தியாவில் நுழைந்து நான்கே வருடங்களில் நினைத்துப்  பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது ஷியோமி. ஆனால், மொபைல் கிடைத்தால்தானே?

ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் ஸ்மார்ட்டாக இருக்கும் ஷியோமி விற்பனை என்று வரும்போது குப்புறப்படுத்து விடுகிறது . ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வாரத்துக்கு ஒரு முறை ஃபிளிப்கார்ட்டிலோ, அமேசானிலோ 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது என்றால் 11.59-க்கே அவுட் ஆப் ஸ்டாக் ஆகிக் காத்திருப்பவர்களை கடுப்பேற்றும். அதன் பிறகு அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்க வேண்டும். அடுத்த தடவையாவது கிடைக்குமா என்றால் அப்பொழுதும் கிடைக்காது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக கடந்த வருடத்தில் ஆஃப்லைன் ஸ்டோர்களை திறந்தது ஷியோமி. அங்கேயாவது ரெட்மி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. நமக்கு எந்த மாடல் தேவையோ அதை ’அவுட் ஃஆப் ஸ்டாக்’ என்று பேப்பரில் பிரிண்ட்  அவுட் எடுத்து கடையில் ஒட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்ததாக ப்ரீஆர்டர் என்ற ஆப்ஷன். முதலிலேயே மொபைலுக்கான பணத்தைக் செலுத்திவிட்டால் இரண்டு மூன்று வாரத்தில் மொபைலை டெலிவரி செய்து விடுவோம் என்றார்கள். அப்படியாவது புக் செய்யலாம் என்று பார்த்தால் 12.01-க்கு அவுட் ஆப் ஸ்டாக். மொபைலை தேர்வு செய்து, அட்ரஸை டைப் செய்து, பணம் செலுத்துவது வரை அத்தனை வேலைகளையும் ஒரே செகண்டிற்குள் முடிக்கும் அந்த அற்புத சக்தி படைத்த மனிதர்கள் யாரென்று ஷியோமி தெரிவித்தால் நல்லது. ரெட்மி நோட்  5 ப்ரோ  இன்று வரைக்கும் அவுட் ஆப் ஸ்டாக்கில்தான் இருக்கிறது ஆன்லைலும் சரி ஆப்லைனிலும் சரி. பெரும்பாலும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் உடனே கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம் ?

இதுதான் காரணம்  - சொல்கிறது ஷியோமி

விற்பனையை அதிகரிப்பதற்காகப் போலியான டிமாண்டை உருவாக்குகிறது என்பது ஷியோமி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அதை ஷியோமி முற்றிலுமாக மறுக்கிறது. தாங்கள் எப்பொழுதும் போலியாக டிமாண்டை உருவாக்குவதில்லை என்றும் ரெட்மி மொபைல்களுக்கு உண்மையாகவே டிமான்ட் இருப்பதாகவும் கூறுகிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர்  மனுகுமார் ஜெயின்.

அவர் கூறுவது போல்தான் பல்வேறு விற்பனை அறிக்கைகளும் இருக்கின்றன. கடந்த  2017-ம் ஆண்டில் விற்பனையான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் 9.6 மில்லியன் என்று IDC அறிக்கை கூறுகிறது. இப்படி ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுமே மனுகுமார் ஜெயின் கூறுவதைப்போல கணிசமான அளவில் விற்பனையாகியிருக்கின்றன. ஷியோமி ஸ்மார்ட்போன்கள் எப்பொழுதுமே கிடைக்காமல் இருப்பதற்கு அதன் வணிக கொள்கையும் ஒரு காரணமாக கூறலாம். அதன் வியாபார கொள்கையை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறது. முதலாவதாக அவர்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ஸ்டாக் வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும் போன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. விற்பனையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிடையாது என்பதால் அதற்கான மார்ஜினைக் குறைக்க முடிகிறது. இதுபோன்ற வழிகளால்தான் மொபைலின் விலையைக் குறைக்க முடிகிறது என்கிறது ஷியோமி. ”இந்தியாவில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதைத்தான் கடைப்பிடிக்கிறோம்” என்கிறார் ஷியோமியின் நிறுவனர் லீ  ஜூன் (Lei Jun).

"அதிகப்படியான தேவை இருக்குமென்றால் அதைச்  சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் போன்களை தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். சரிதான். ஆனால், அவை விற்காமல் போனால் அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார். அதே வேளையில் மொபைலை வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபிளிப்கார்ட்டில் ஒருவர் ஒரு அக்கவுன்ட் மூலமாக மாதத்துக்கு ஒரு மொபைலை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். அப்படி இருந்தும் ஒருவர் புதுப்புது அக்கவுன்ட்களில் வெவ்வேறு மொபைல் நம்பர், பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி வாங்க நினைத்தால் ஐபி அட்ரஸை கண்காணித்து தடை செய்கிறோம் என ஷியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஷியோமியின் கைவசம் இருந்த நிலையில், கடந்த மாதம் அதை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் சரி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஷியோமி.