Published:Updated:

புதிய பெயரில் களமிறங்கும் ஓப்போ... பட்ஜெட் மொபைல்களின் கிங்காக மாறுமா ரியல்மீ?

புதிய பெயரில் களமிறங்கும் ஓப்போ... பட்ஜெட் மொபைல்களின் கிங்காக மாறுமா ரியல்மீ?
புதிய பெயரில் களமிறங்கும் ஓப்போ... பட்ஜெட் மொபைல்களின் கிங்காக மாறுமா ரியல்மீ?

இந்தியாவின் மொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு ஷியோமிதான் ராஜா. காரோ, பைக்கோ, மொபைலோ எதுவாக இருந்தாலும் இந்தியர்கள் பட்ஜெட் விலை பொருள்களின் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். அதைப்  புரிந்துகொண்ட ஷியோமி தொடக்கம் முதலே அதில் கூடுதல் கவனம் செலுத்தியதற்கு பலன் கிடைத்தது. விற்பனையில் நீண்ட காலமாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த சாம்சங்கையே அசைத்துப் பார்க்கிறது ஷியோமி. சாம்சங் பரவாயில்லை சமாளித்து விடும்; அப்படியென்றால் தாங்கள் என்ன செய்வது என யோசித்த மற்ற மொபைல் நிறுவனங்கள் பலத்தை அதிகரிக்க புதிய  வழிகளில் இறங்கியிருக்கின்றன. 

அதில் ஒன்றுதான் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களோடு கைகோப்பது. கடந்த மாதம்தான் அஸுஸ் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து புதிய மொபைலை அறிமுகப்படுத்தியது. அதற்கடுத்து இந்த வரிசையில் இணைந்திருப்பது ஓப்போ. ரியல்மீ என்ற பெயரில் மொபைல்களை தயாரிக்கப் போகிறது ஓப்போ. இதை விற்பனை  செய்வதற்காக அமேசானுடன் இணைந்துள்ளது.

போட்டியைச்  சமாளிக்குமா   Realme 1

ரியல்மீ பிராண்டில் இருந்து முதல் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓப்போ. ஷியோமியின் பட்ஜெட் சீரிஸ் மாடல் பெயரான ரெட்மியைப் போலவே உச்சரிப்பிலும் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே Realme என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஓப்போ. ரியல்மீ 1 என்று பெயரிடப்பட்டுள்ள இதன் வெளியீட்டிற்கான டீசரை அவ்வப்போது வெளியிட்டு வந்ததால் இந்த மொபைலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறதா ?

6.0 இன்ச் 18:9  ratio டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்கள் என்றால் அதில் டிசைனையும், தோற்றத்தையும் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் glossy diamond cutting reflection effect கொடுக்கப்பட்டுள்ளதால் தோற்றம் சிறப்பாக இருக்கிறது. ஹைபிரிட் சிம் ஸ்லாட் இதில் கிடையாது. ஒரே நேரத்தில் இரண்டு சிம் மற்றும் மெமரி கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது பெரும்பாலான மொபைல்கள் டூயல் கேமராவோடு வெளியாகிக்கொண்டிருக்க இதில் 13  MP பின்புற கேமராவும், 8  MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஓப்போ கேமராவுக்கு பேர் போனது என்பதால் கேமராவில் பெரிய அளவில் குறைகளை காண முடியாது என நம்பலாம். 3410  mAh பேட்டரி இதில் இருக்கிறது. இந்த மொபைலில் முக்கியமாகக்  குறிப்பிட வேண்டிய அம்சம் இதன் ப்ராஸசரும் அதோடு இணைந்து செயல்படும்  AI-யும்தான். இந்த மொபைலில் இருப்பது மீடியாடெக்கின் Helio P60 ப்ராஸசர். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுதான் இதன் மூலமாக மல்டிடாஸ்க்கிங்குகளை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். கேமரா, ஃபேஸ் அன்லாக், பேட்டரி என மொபைலில் பெரும்பாலான வேலைகளுக்கு இதில் AI- பயன்படுகிறது. AI- மூலமாக பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்க முடியுமாம், அதேபோல போட்டோக்களையும் தெளிவாக எடுக்க முடியும் என ஓப்பொ தெரிவித்திருக்கிறது. ஓப்போவின் கஸ்டமைஸ்டு இயங்குதளமான ColorOS இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  Android 8.1 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது.

குறைகள் என்னவென்று பார்த்தால் இதில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் கிடையாது என்பதுதான். மொபைலை பேட்டர்ன் இல்லாமல் அன்லாக் செய்வதற்கான ஒரே வழி ஃபேஸ் அன்லாக் மட்டும்தான்.வெளிச்சம் இருக்கும் இடங்களில் இது சிறப்பாகவே செயல்படும் ஆனால், ஒளி குறைவான இடங்களில் பயன்படுத்துவதற்கு சற்று சிரமமாக இருக்கும். இதே விலையில் மற்ற நிறுவனங்கள் டூயல் கேமரா ஸ்மார்ட்போனை தருகின்றன. USB Type-C போர்ட்டும் இதில் இல்லை. 3 GB RAM/ 32GB வேரியன்ட் 8,990 ரூபாய், 4 GB RAM/ 64GB வேரியன்ட் ரூ.10,990 மற்றும் 6 GB RAM/ 128GB வேரியன்ட் 13,990 ரூபாய்க்குக்  கிடைக்கும். ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் இல்லையென்றால் கூட பரவாயில்லை என்பவர்கள் இதை வாங்கலாம். இதே செக்மென்டில் ரெட்மி நோட் 5 தான் இன்னும் டாப்பில் இருக்கிறது. இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ரெட்மி நோட் 5-இல் அதிக வசதிகள் இருக்கின்றன. அதனோடு போட்டி போடும் வகையில் இந்த மொபைல் உருவாக்கப்படவில்லை.

வரும் 25-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.