Published:Updated:

”மறக்குற ஐட்டமா பாஸ் யாஹூ மெசெஞ்சர்?!” - 90ஸ் நாஸ்டால்ஜியா #YahooMessenger

”மறக்குற ஐட்டமா பாஸ் யாஹூ மெசெஞ்சர்?!” - 90ஸ் நாஸ்டால்ஜியா #YahooMessenger
”மறக்குற ஐட்டமா பாஸ் யாஹூ மெசெஞ்சர்?!” - 90ஸ் நாஸ்டால்ஜியா #YahooMessenger

”மறக்குற ஐட்டமா பாஸ் யாஹூ மெசெஞ்சர்?!” - 90ஸ் நாஸ்டால்ஜியா #YahooMessenger

மெசெஞ்சர்... யாஹூ மெசெஞ்சர்... கேள்விப்பட்டிருக்கீங்களா?

நம்ம கொக்கி குமாரைப் போல யாஹூ மெசெஞ்சரும் அப்போது பெரிய வஸ்தாதுதான். அப்போது என்றால் 1990களின் இறுதியில். இன்று சாட் செய்ய வாட்ஸ் அப் தொடங்கி ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ் உண்டு. ஆனால், 80's kidகளுக்கு அப்போதிருந்த ஒரே ஆயுதம் வரம், வழி, வாய்ப்பு எல்லாம் யாஹூ மெசெஞ்சர் தான். நம் சிறு வயதில் விளையாடிய பல பொம்மைகள் பின்னர் நம் வீட்டுப்பரண் மீது ஏறிவிடுமில்லையா? அது போல இன்று யாஹூ மெசெஞ்சர் இன்டர்நெட் பரண் மேல் இடம்பிடித்துவிட்டது என்பது உண்மைதான். இருந்தாலும், பொம்மையை போகி பண்டிகை அன்று கொளுத்த சொன்னால் விடுவோமா? ஆனால், யாஹூ மெசெஞ்சரை கொளுத்த முடிவு செய்துவிட்டார்கள். வரும் ஜூலை 17 அன்றுதான் அதன் கடைசி நாள் என அறிவித்திருக்கிறது யாஹூ நிறுவனம்.

“நினைவுக் கம்பளத்தில் ஏறி, கொஞ்ச நேரம் காலப் பயணம்” செய்து பார்த்தேன். ஏராளமான மகிழ்வான தருணங்களை யாஹூ நமக்கு தந்திருக்கிறது. 

1) ASL PLS:
எல்லா யாஹூ சாட்டும் Hi என்றுதான் தொடங்கியிருக்கும். பதில் Hi வந்ததும் அடுத்த பந்து யார்க்கர்தான்.  ASL PLS.  ஜென் Z குழந்தைகளுக்காகச் சொல்கிறேன்.  Age, Sex, Location என்பதன் சுருக்கம் தான் அது.  Fathima, F, Chennai என வந்துவிட்டால் அன்று நாம் கண்ணாடியில் முழிக்கவில்லை என்று அர்த்தம். அது உண்மையா பொய்யா என்றெல்லாம் அப்போது யாரும் யோசிக்கவில்லை. சில பெண்கள் ‘நல்லவனா’ எனச் சோதிக்க  M என்றும் கூட அனுப்புவார்கள். காதல் தேசத்து சோனாலி பிந்த்ரே போல. ஆனால், எல்லோரும் குணாலாக இருப்பதில்லை.  M என வந்துவிட்டால் அது அவுட்சைடு ஆஃப் த ஆஃப் ஸ்டம்ப் தான். பெரும்பாலானோர் டிராவிட்டாக மாறி Well left தான்.

2)  Buzz:
எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? யாஹூ சாட்டிங்கில் காத்திருக்க நேர்ந்தால்,  buzz தான் பொறுமையின் எல்லை. பதில் வர தாமதமானால், அதுவும் எதிர்புறம் ஆன்லைன் எனக் காட்டினால் தொடங்கிவிடும் Keyboard bombing. BUZZ செய்தால் சாட் விண்டோ ஒரு பிரபுதேவா ஆட்டம் ஆடும். “மிஸ் எனக்கு பதில் தெரியும் மிஸ்” எனச் சொல்ல கைகளை உயர்த்துவோமே... அப்படி ஜென்டிலான கவன ஈர்ப்பு அல்ல Buzz. வாத்தியாரின் காலரைப் பிடித்து “டேய் எனக்கு தெரியும்டா சயின்ஸு” எனச் சொல்லும் அதிரடி கவன ஈர்ப்பு. தொடர் Buzz எல்லாம் இன்னும் கொடூர லெவல். 

3) சாட் ரூம்ஸ்:
 “ஆண்டவன் கூட 2 கிட்னி கொடுப்பான். ஆனால், இந்த அம்மா ஒரே ஒரு சட்னி தான் கொடுக்கிறாங்க”ன்னு கவலைப்படுறதெல்லாம் யாஹூ மெசெஞ்சரில் கிடையாது. ஏகப்பட்ட சாட் ரூம்ஸ் உண்டு. கிரிக்கெட்டில் தொடங்கி கிட்டிப்புல் வரைக்கும் ரகரகமான ரூம்ஸ் உண்டு. ”எத்தனை ரூம்ஸ் இருந்தாலும் நீங்க எங்க போயிருப்பீங்கன்னு தெரியும்டா அங்கிள்ஸ்” என 2000 கிட்ஸ் ஏளனமாக நினைக்கலாம். ஆனால் அதில் உண்மை இல்லாமலில்லை என்று சொன்னால் மிகையாகாது. :)

4)  Abbreviations:
 ”சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது” என எப்போதோ முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், அதைச் செய்து காட்டியது யாஹூ மெசெஞ்சர். இன்று “internet slang" என விளக்கம் சொல்லப்படும் அனைத்துக்கும் அப்பன் யாஹூ மெசெஞ்சர் தான். ”i cnt rly nw. sry" தந்தி கூட சொற்களைத்தான் குறைத்தது. யாஹூ மெசெஞ்சர் தான் எழுத்துகளைக் குறைத்தது.

5) எமோஜி:
”நாங்க ஜென் z ஜெனரேஷன். எதையும் pictorialஆ தான் சொல்வோம்” என ஊள உதார் விடும் குழந்தைகள் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். யாஹூ மெசெஞ்சர் தந்த எமோஜிக்கள் தான் உலகையே ஆட்டிப்படைத்தன. எந்த உணர்வுக்கும் எந்தச் சூழலுக்கும், எந்தச் சொல்லுக்கும் அதில் ஒரு எமோஜி உண்டு. 

6) தீம்:
 நண்பர்களைப் பார்க்க சொன்னால் ஒரு டிரஸ், சொந்தக்காரங்க வீடு என்றால் ஒரு டிரஸ் என்பது தானே வழக்கம்? காரணம், அதற்கான மூட் செட் ஆக வேண்டுமில்லையா? யாஹூ மெசெஞ்சர் அதையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொருவருடன் சாட் செய்யும்போது தன் தீம் வைத்துக்கொள்ளலாம்.

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. யாஹூ மெசெஞ்சர் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளுங்களேன். 

அடுத்த கட்டுரைக்கு