பசிக்கிறதா? கிச்சனில் இருக்கும் டப்பாக்களைத் திறந்து மூடுவது எல்லாம் பழைய ஸ்டைல். ஸ்மார்ட்போனை எடுத்து ஆர்டர் செய்வதுதான் ஜென் ஸீ ஸ்டைல். ஆன்லைனைக் கலக்கும் உணவு தொடர்பான ஐந்து ஆப்ஸ்களின் அறிமுகம் இங்கே...

உலகின் மிக முக்கியமான கால் டாக்ஸி நிறுவனம் ஊபர். ஆனால், அவர்களுக்கென சொந்தமாக ஒரு கார்கூட கிடையாது. இதே லாஜிக்குக்கு ப்ளூ டிக் அடித்துக் களம் இறங்கிய ஆப்தான் ஸ்விகி (Swiggy).
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ் மூலம் அதுவே கண்டறிந்து, அருகில் இருக்கும் உணவு விடுதிகளையும், அதன் மெனுவையும் விலையுடன் பட்டியிலிடும். நமக்குப் பிடித்த உணவைத் தேர்வுசெய்து, ஆன்லைனிலேயே பணம் செலுத்திவிடலாம். நாம் ஆர்டர் செய்தவுடன், உணவகத்துக்குத் தகவல் செல்லும். அவர்கள் ஓகே என்றால், அந்த ஹோட்டலுக்கு அருகில் எந்த ஸ்விகி ஆள் இருக்கிறார் என்பதை சிஸ்டம் தேடும். அவரிடம் அந்த வேலை ஒப்படைக்கப்படும். அடுத்த சில நிமிடங்களில் உணவு தயாராகிவிடும். ஸ்விகி ஆளும் அங்கே வந்து உணவைப் பெற்றுக்கொண்டு கஸ்டமரைத் தேடிப் பறக்கத் தொடங்கிவிடுவார். வரும் வழியில் அவர் தாமதப்படுத்தவும் வழி இல்லை. வாடிக்கையாளரால் அவரை ட்ராக் செய்ய முடியும்.
நிறைய உணவுவிடுதிகள், குறைவான டெலிவரி டைம், வேகமான ஆப் செயல்பாடு ஆகியவை காரணமாக, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஸ்விகி முன்னணியில் இருக்கிறது.
ஃபுட் ஆப்களில் தனித்துத் தெரிகிறது Faasos ஆப். மற்ற உணவகங்களை நம்பியிருப்பது, எல்லா சமயங்களிலும் சரிவராது என நினைக்கிறார்கள் இதன் நிறுவனர்கள். அதனால், இவர்களுக்கு எனத் தனியாக ஒரு கிச்சன் வைத்திருக்கிறார்கள். நேரில் சென்று சாப்பிடும் வசதியே கிடையாது. ஏனெனில்,

அதற்குத்தான் அதிக இடம், மின்சாரம், வேலைக்கு ஆள் என அதிகச் செலவு எடுக்கிறது. எனவே, சமைக்கும் அனைத்தையும் ஆப் வழியே விற்கிறார்கள். ஆர்டர் செய்தால், இவர்களே டெலிவரி செய்துவிடுவார்கள்.
தினமும் பல வகை உணவுகள் சமைத்தால், வீணாகும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் செலவும் அதிகம். எனவே, தினம் ஒரு ஸ்பெஷல் உணவு எனச் சமைக்கிறார்கள். புதன்கிழமை ரோல் என்றால், அது மட்டும்தான்.இதனால் தயாரிப்புச் செலவு குறையும். விலையையும் குறைத்துக் கொள்கிறார்கள். தினம் ஒரு சைவ உணவு, ஓர் அசைவ உணவு என்பதால் எந்தச் சிக்கலும் இல்லை.
நெட்டிசன்களுக்கு எதையாவது லைக் செய்ய வேண்டும் அல்லது ரேட் செய்ய வேண்டும். அந்த வகையில் நாம் சாப்பிட்ட உணவு வகைகளையும் உணவகத்தையும் ரேட் செய்ய வழி செய்கிறது ஸொமாட்டோ. அந்த ரேட்டிங்கின் அடிப்படையில் நமக்கு அருகில் இருக்கும் நல்ல உணவகங்களைப் பரிந்துரையும் செய்கிறது. இதர சேவைகளாக ஆன்லைனில் ஆர்டர் செய்யவும், டேபிள் புக் செய்யவும் உதவுகிறது ஸொமாட்டோ.

நிறைய உணவகங்கள் வாடிக் கையாளர்கள் ஸொமாட்டோவில் தங்களை ரேட் செய்தால், இலவச ஜூஸ்கள் வழங்குவதும் உண்டு. அந்த அளவுக்கு ரேட்டிங்கில் ஸொமாட்டோ கில்லி. உலகம் முழுவதும் பல நாடுகளில் இருக்கும் ஸொமாட்டோவுடன் மொத்தம் பத்து லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் கைகோத்திருக்கின்றன.
இந்த ஆப், தள்ளுபடிகளைச் சொல்லிச் சொல்லியே நம்மை உணவு விடுதிகளுக்கு வரச் சொல்கிறது. பல காலமாக நீங்கள் சாப்பிட்டு வந்த ஹோட்டலின் உணவு விலையில் அதிரடித் தள்ளுபடியைத் தருகிறது லிட்டில். 300 ரூபாய் பீட்சா, உங்களுக்கு 250 ரூபாய்க்குக் கிடைக்கும். 200 ரூபாய் பிரியாணி, லிட்டிலில் 130 ரூபாயில் கிடைக்கும்.

உங்களுக்கு விருப்பமான உணவகத்துக்குச் செல்லுங்கள். அது லிட்டில் ஆப்-ல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கு இருக்கும்போதே, லிட்டில் ஆப் மூலம் பிடித்தமான உணவை ஆர்டர் செய்து லிட்டில் ஆப் மூலமாகவே பணம் செலுத்துங்கள். லிட்டில் தரும் ஸ்லிப்பை உணவகத்திடம் காட்டுங்கள். அங்கேயே அமர்ந்து பசியாறுங்கள். அவ்வளவுதான்.
லிட்டில் ஆப் மூலம்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால், உணவகம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லிட்டிலுக்குத் தந்துவிடும். இதன் மூலம் உணவகத்துக்கு புது வாடிக்கையாளர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள்.

டோர் டெலிவரி, தள்ளுபடியின் உணவு வகைகள்போல இன்னோர் ஏரியாவும் இருக்கிறது. அது பிரபலமான உணவகங்களில் இடம் பிடித்துத் தருவது. மாநகர உணவகங்களில் பெரும்பாலும் இடம் கிடைக்கக் காத்திருக்கத்தான் வேண்டும் அல்லது முன்கூட்டியே ரிசர்வ் செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வோர் உணவகமாக அழைத்தால், அவர்கள் இடம் இல்லை என்றுதான் சொல்வார்கள். இந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறது dineout. இதன் மூலம் எந்த உணவகத்தில் இடம் இருக்கிறது எனப் பார்த்து, டேபிள் ரிசர்வ் செய்யலாம். போனஸாகத் தள்ளுபடிகளையும் தருகிறது டைன் அவுட்.
ஒருவருக்கு 400 ரூபாய்க்கு மேல் செலவாகும் விலை உயர்ந்த உணவகங்களை மட்டுமே டைன் அவுட் காட்டும். உணவகத்தின் முழு மெனுவையும் டைன் அவுட் காட்டாது. இவை எல்லாம் இதன் சில குறைகள்.