Published:Updated:

வெற்றி பெற பிராண்டு பேர் மட்டும் போதுமா? இந்தக் கதைகளைப் பாருங்கள்! #FailedGadgets

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெற்றி பெற பிராண்டு பேர் மட்டும் போதுமா? இந்தக் கதைகளைப் பாருங்கள்! #FailedGadgets
வெற்றி பெற பிராண்டு பேர் மட்டும் போதுமா? இந்தக் கதைகளைப் பாருங்கள்! #FailedGadgets

பிளாக்பெர்ரி போன்கள் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை.. பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் வீழ்ந்த கதைகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ``கண்டுபிடிக்கப்படும் அனைத்துத் தொழில்நுட்ப சாதனங்களும் சந்தையில் வெற்றியடைந்திருக்கிறதா..?” என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். சிறிய கம்பெனிகள் சில சாதனங்கள் நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சியையும், பெரிய கம்பெனிகளின் பல சாதனங்கள் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ச்சியையும் கண்டுள்ளன. அதனால், சந்தையில் கொண்டுவரப்படும் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் எப்போதுமே வெற்றி காண்பதில்லை. இதில் இன்னொரு வகையும் உண்டு. சில சாதனங்கள் சந்தையில் பிளாக்பெர்ரி போல உச்சத்தைத் தொட்டு அதன் பிறகு வீழ்ந்திருக்கின்றன. இது குறித்த ஒரு தொகுப்பு.

பிளாக்பெர்ரி:

ஒரு காலத்தில் மொபைல் போன் சந்தையில் உலக அளவில் பிளாக்பெர்ரி போனின் கரமே ஓங்கியிருந்தது. பிளாக்பெர்ரி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் தனக்கென ஒரு பயனாளர் வட்டத்தைக் கொண்டிருந்தது. பலரின் முதல் ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரிதான். அது எல்லாம் ஐபோன் வருவதற்கு முன்பு வரைதான். 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் நாள் அன்று தனது முதல் ஐபோனை வெளியிட்டது. ஐபோனின் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம், ஐ.ஓ.எஸ் இயங்குதளத் தொழில்நுட்பம் எனப் பல வசதிகள் பலரைக் கவர்ந்தது. அப்போதைய பிளாக்பெர்ரி போன்களின் கீபோர்டு, மோனோகுரோம் டிஸ்ப்ளே மற்றும் பிளாக்பெர்ரி ஓ.எஸ் ஆகியவை பழைய தொழில்நுட்பமாகப் பார்க்கத் தொடங்கினர், மொபைல் பிரியர்கள். இதன் காரணமாக பிளாக்பெர்ரி போன்களின் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆண்டுக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை 4 லட்சமாகக் குறைந்தது. இதற்குக் காரணம், காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப மாற்றங்களை பிளாக்பெர்ரி நிறுவனம் ஏற்படுத்திக்கொள்ள தவறியதுதான். 

கூகுள் கிளாஸ்

கடந்த 2013-ம் ஆண்டு, இணைய உலகின் ஜாம்பவானாகத் திகழும் கூகுள் நிறுவனம், கூகுள் கிளாஸ் எனும் சாதனத்தை வெளியிட்டது. மூக்குக் கண்ணாடியில் சிறு கணினியையே கொண்டிருந்தது. கண்களுக்கு அருகில் ஒரு எல்.சி.டி டிஸ்ப்ளேவும் உண்டு. மேலும் பிராசஸர், ஜி.பி.எஸ், கேமரா, புரொஜெக்டர், மைக், இணையம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சரியாகச் செயல்பட பேட்டரிகளையும் கொண்டிருந்தது. ஆனால், இதை இப்போது தயாரிக்கும் முடிவைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டது, கூகுள் நிறுவனம். அதற்குக் காரணம், கூகுள்கிளாஸ் மூலமாக ஒருவரின் அனுமதியில்லாமல் அவரைப் புகைப்படம் எடுக்கவும், உடனடியாக இணையதளத்தில் பகிரவும் முடியும் என்பதால்தான். இதனாலும், வேறு சில காரணங்களாலும் ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் இன்று பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.


சாம்சங் கேலக்ஸி நோட் 7

கடந்த 2016-ம் ஆண்டு இந்த வகை மாடல் போன்கள் வெளியாகின. அசத்தலான வடிவமைப்பு, கருவிழி அடையாளத் தொழில்நுட்பம் மற்றும் யூ .எஸ்.பி டைப் சி போர்ட் உள்ளிட்ட (அப்போது) நவீனத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில காலம் நன்றாக இருந்த இந்த போன்கள் சிவகாசி வெடிகளுடன் போட்டிப் போட்டு வெடிக்கத் தொடங்கின. இதனால் பலரும் அந்த போன்களின் மேல் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். பலரது புகாரைப் பெற்ற சாம்சங் நிறுவனம் வெடித்த மொபைல்போன்களை ஆய்வு செய்தது. முடிவில் பேட்டரி உற்பத்தியில் குறைபாடுகள் இருப்பதை அறிந்தது அந்நிறுவனம். அதன்பின்னர் விற்பனைக்கு அனுப்பிய அனைத்து சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களையும் திருப்பி வாங்கிக்கொண்டது. இதனால் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிறந்த ஆண்டிலேயே அடக்கமானது, கேலக்ஸி நோட் 7 மட்டும்தான். 

பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால், இவற்றுக்கு முன்னால் 2013-ம் ஆண்டு பெப்பிள் டெக்னாலஜி என்னும் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் சிறந்து விளங்கியது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ .ஓ .எஸ் சாதனங்களுடன் இணைத்துக்கொள்வதாக இருந்தன. அதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், அதன்பின்னர் அறிமுகமான டிட்பிட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது. அதனால் தன்னுடைய தயாரிப்பையும் சொத்துகளையும் டிட்பிட் நிறுவனத்துக்கு விற்றுவிட்டு சந்தையிலிருந்து ஒதுங்கிக்கொண்டது பெப்பிள். இன்று சந்தையில் காணப்படும் பல ஸ்மார்ட் வாட்ச்களின் தொழில்நுட்பத்துக்கு அடிப்படை பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்தான்.

இதுபோல பெரு நிறுவனங்களின் பல தயாரிப்புகள் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன ... வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டுமிருக்கின்றன. இந்த வரிசையில் உங்களுக்குத் தெரிந்த கேட்ஜெட்களின் பெயர்களை கமென்ட்ஸில் பதிவு செய்யலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு