
Appsஞா.சுதாகர்
ஃபிட்னஸ் மீது ஆர்வம் இருப்பவர்களில் பலரது ஃபர்ஸ்ட் சாய்ஸ் ரன்னிங்தான். காலையில் எழுந்ததுமே சில கிலோ மீட்டர்கள் ஓடி, சில நூறு கலோரிகள் குறைந்ததை ஃபிட் பேண்ட்களில் பார்த்தால்தான் இவர்களுக்கு நிம்மதியே பிறக்கும். அப்படி ஓடுபவர்களுக்கு உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்தான் இந்த இரண்டும். ஓடி ஓடி நல்ல உடற்கட்டு பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆப்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

ரன்கீப்பர் (Runkeeper - GPS Track Run Walk)
ஓட்டத்துக்கான உங்களுடைய இலக்குகளை நிர்ணயிக்கவும், உங்கள் பயிற்சிகளைச் சரியாக திட்டமிடவும் உதவும் ஆப் இது. முதலில் இந்த ஆப்பில் நமக்கான கணக்கு ஒன்றை மின்னஞ்சல் மூலமாகத் தொடங்கி, உங்களைப் பற்றிய சுய விவரங்களைத் தந்தால் போதும், உங்கள் இலக்கை நிர்ணயித்து தினமும் ஓடத் துவங்கலாம்.

ஓடுவதற்கு மட்டுமன்றி நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா போன்றவற்றுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்பை ஃபேஸ்புக்குடன் இணைப்பதன் மூலம், இதே ஆப் பயன்படுத்தும் நண்பர்களைக் கண்டறியவும், அவர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடியும்.
எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடவேண்டும், எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற இலக்குகளை இதில் நீங்கள் நிர்ணயித்துக் கொள்வதன் மூலமாக அவற்றைச் சோம்பலின்றி நிறைவேற்ற உதவியாக இருக்கும். நமது தினசரி உடற்பயிற்சி தொடர்பான ரெக்கார்டுகளையும் எளிதாகப் பார்த்துக்கொள்ளலாம். மேலும், நம் பயிற்சிகளை மேம்படுத்த சில சவால்களும் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் உதவும்படி எளிதாக இருக்கிறது இந்த ஆப்பின் யூசர் இன்டர்ஃபேஸ்.
நீங்கள் ஓடுவதற்கான பாதைகள் அனைத்துமே ஜி.பி.எஸ் உடன் இணைந்திருப்பதால், கூகுள் மேப்ஸ் மூலமாக அதைப் பார்க்கவும், உங்களின் பாதைகளைத் ‘சேவ்’ செய்துகொள்ளவும் முடியும். உலகில் அதிக பயனாளர்கள் கொண்ட ரன்னிங் ஆப்ஸில் இதுவும் ஒன்று.
ரன்டாஸ்டிக் (Runtastic Running & Fitness)
சுமார் 10 மில்லியன் பேர் இன்ஸ்டால் செய்திருக்கும் ரன்னிங் ஆப்தான் இந்த ரன்டாஸ்டிக். இதுவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஃபிட்னஸ் பிரியர்கள் என இரு தரப்பினருக்கும் பொருத்தமான ஆப். நீங்கள் தினசரி ஓடுவதைச் சரியாகக் கண்காணித்துச் சொல்லவும், திட்டமிடவும் ஒரு ஆப் வேண்டுமென்றால் இது நல்ல சாய்ஸ்.

ஆனால், பிற ஆப்களில் இருப்பதுபோல ரன்னிங் பிளான்கள் எல்லாம் இதில் இலவசமாக இல்லை என்பது மைனஸ். மாரத்தான் போல, திட்டமிட்டுப் பயிற்சி செய்பவராக இருந்தால், உங்களுக்கான ஆப்ஸ், பயிற்சிகள், திட்டமிடல்கள் போன்றவற்றை வழங்க ரன்டாஸ்டிக் தயார். ஆனால், அதற்கு நீங்கள் பணம் கட்டி பிரீமியம் யூசராக வேண்டும். இப்படி இது இலவச ஆப்பாக இருந்தாலும்கூட, ஆப்-க்குள் பணம் செலுத்த வேண்டிய இன்-ஆப் பர்சேஸ் இதில் அதிகம் இருக்கிறது.
மற்றபடி இசை கேட்டுக்கொண்டே ஓடுவது, ஜி.பி.எஸ் டிராக்கிங், டைமர், வாய்ஸ் கோச் வசதி போன்ற அடிப்படையான ஆப்ஷன்களை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை டாஸ்க் முடிக்கும்போதும், சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யட்டுமா எனக் கேட்கிறது ஆப். இதனை செட்டிங்க்ஸ் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
உங்களின் பயிற்சிகளை மதிப்பீடு செய்ய எளிதாக இருக்கிறது இந்த ஆப் டிசைன். உங்களை உத்வேகமாக்க சில இசை ஆல்பங்களை இலவசமாக ஆப்-க்குள் தந்திருக்கிறது ரன்டாஸ்டிக். இது வேண்டாம் என்றால், போனின் மியூசிக் ப்ளேயரை இணைத்து உங்களுக்கு விருப்பமான பாடல்களையும் கேட்கலாம்.
நண்பர்களுடன் இணைந்து திட்டமிடுவதாக இருந்தால், புதிதாகக் குழு ஒன்றை உருவாக்கி நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம். ஜி.பி.எஸ் டிராக்கிங், ஆப் டிசைன் போன்றவை இதன் ப்ளஸ். ஆனால், பிரீமியம் யூசர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதிக வசதிகள் இருப்பது இதன் மைனஸ். பேசிக்-ஆன ஆப்ஷன்கள் மட்டும் கொண்ட ஃபிட்னஸ் ஆப் வேண்டுமென்றால் நிச்சயம் இதனை டிக் செய்யலாம்.