
கேள்வி பதில்

ஜெயக்குமார், சென்னை
பிட்காயினில் முதலீடு செய்வதின் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியுமா?
நீ.பாலமுருகன், ஆடிட்டர்

“பிட்காயின் அல்லது மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் (bitcoin) என்பது சடோஷி நகமோட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயமுறை. சரியிணை வலைப்பின்னல் முறையில் இது இயங்குகிறது. பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு இதற்கில்லை. ரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் அடிப்படைப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒருமுறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
பிட்காயின்களைத் தனிப்பட்ட கணினிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைதளங்களிலோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும், பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டு மானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.
மத்திய அரசால், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு வெர்சுவல் கரன்சிப் பரிமாற்றமும் சட்டவிரோதமானது. பிட்காயின், லிட்டிகாயின், பிக்காயின், டாகிகாயின் என்று பல்வேறு வெர்சுவல் கரன்சிகள் பற்றிய செய்திகள் வெளியாகின்றன. பிட்காயின் மதிப்பு கடந்த ஜனவரியில் 13 டாலராக இருந்தது.
நவம்பரில் 1,124 டாலராக உயர்ந்ததாக ஊக பேரத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் நிதி நிறுவனங்கள், அமைப்புகள் பிட்காயின் பரிமாற்றத் துக்குச் சீனா தடை விதித்ததும் அதன் மதிப்பு
50% சரிந்தது.
இந்தியாவில் பிட்காயின் மதிப்பு நவம்பரில் ரூ.74,628 என்பதில் இருந்து ரூ.42,737 ஆகக் குறைந்தது. வெர்சுவல் கரன்சிகள் பொதுவாக, சட்ட விரோதச் செயல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வெர்சுவல் கரன்சி பரிவர்த்தனையில் யாரும் ஈடுபடக் கூடாது என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.”
மூர்த்தி, மதுரை
சரக்குகள் மற்றும் சேவை வரி அடையாள எண் (GSTIN) என்றால் என்ன? இதை எங்கு, எப்படிப் பெறுவது?

ஸ்ரீகாந்த், ஆடிட்டர்
“ஒரு பொருளை வாங்கி விற்பது அல்லது சேவையை விநியோகம் செய்வதெனில், ஜிஎஸ்டி அடையாள எண் (Goods and Service Tax Identfication Number-GSTIN) அவசியம் வேண்டும். வியாபாரிகள், தங்களுடைய விற்பனை அல்லது சேவை ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ஜிஎஸ்டி நம்பருக்கு (GSTIN) பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், 20 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால் ஜிஎஸ்டி பதிவு அவசியம். வாடிக்கையாளரைத் தவிர, யாருக்கு ஒரு பொருளை அல்லது சேவையை விற்பனை செய்தாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு ஜிஎஸ்டி நம்பர் இருந்தால் மட்டுமே அவர்களால் க்ளெய்ம் செய்ய முடியும்.
ஜிஎஸ்டி நம்பரை gst.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துப் பெறலாம். இந்தத்தளத்தில் New User Id என்ற இடத்தில் முறைப்படி பதிவுசெய்து ஜிஎஸ்டின் நம்பர் பெறலாம். ஜிஎஸ்டி அமல்படுத்தியபின் யாருமே, இந்த நம்பர் இல்லாமல் சரக்கை வியாபாரத்துக்கு வாங்கவோ, விற்கவோ முடியாது.”
செல்வராஜ், அந்தியூர்
நான் கிராமப்புறத்தில் வசித்து வருகிறேன். 10 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்கி, வீட்டைப் புனரமைக்கத் திட்டம் உள்ளது. இதற்கு என்ன நடைமுறை? அரசு சார்பில் மானியம் ஏதாவது கிடைக்குமா?

ஆர்.கணேசன், முதன்மை இயக்க அலுவலர், நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்
“வங்கிக் கடன் என்பது தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியைப் பொறுத்து வழங்கப்படும் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் மூன்று வருடத்துக்கான வருமான வரி செலுத்திய படிவத்தினைக் கடன் பெறும் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். இப்போது தங்களுக்கு வருட அல்லது மாத வருமானம் எந்த வகையில் வருகிறது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெரிவித்தால், அதை உறுதி செய்துகொண்டு கடன் வழங்கு கிறார்கள். தங்களின் மொத்த வருமானத்தில், தங்களின் செலவினங்கள் போக மாதம் உபரியாக எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிட்டும், திரும்பச் செலுத்தும் கால அளவைப் பொறுத்தும் கடன் தொகையை வீட்டு வசதி நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
வீட்டுப் புனரமைப்புக்கு வீட்டு வசதி நிறுவனங்கள், திட்ட மதிப்பீடு மற்றும் வழக்கறிஞர் கருத்து பெற்றபின் கடன் வழங்குகின்றன. முதன் முதலில் வீடுகட்டும்பட்சத்தில், அரசு மானியம் பிரதம மந்திரி வீடமைப்புத் திட்டத்தின் (PMAY) கீழ் கிடைக்கும். ஆனால், புனரமைப்புக்கு அரசு மானியம் கிடைக்க வாய்ப்பில்லை.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.