Published:Updated:

ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஏன்? புதிய #AndroidPie அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?

ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஏன்? புதிய #AndroidPie அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?
ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஏன்? புதிய #AndroidPie அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?

பஸ் ஒன்றில் சுகமான பயண அனுபவம் கிடைக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். கை தேர்ந்த (கால் தேர்ந்த?) ஓட்டுநர் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்டு நல்ல கண்டிஷனில் இயங்கும் உதிரிபாகங்கள். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் முதுகெலும்பு முறிந்து விடக்கூடும். அனுபவமிக்க, திறமையான, வேகமான, பதற்றப்படாத ஓட்டுநர் ஒருவரை ஒரு டப்பா பஸ்ஸுக்கு ஓட்டுநராகப் போட்டால் என்ன ஆகும்? அதேபோல தொட்டாலே பறக்கக் கூடிய ஒரு பிராண்ட்-நியூ வோல்வோ பஸ்ஸுக்கு இப்போதுதான் Learners License எடுத்திருக்கும் ஒரு கத்துக்குட்டி ஓட்டுநரை அமர்த்தினால் எப்படி இருக்கும்?

- இதே மாதிரி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகின்றன. ஒன்று அதன் ஹார்டுவேர். இதில் அதன் பேட்டரி, மெமரி, மோடம், தொடுதிரை, சென்சார்கள், புராஸசர்கள் ஆகியவை வரும். ஆனால், இவற்றை ஒழுங்குபடுத்தி இயக்கிக் கட்டளைகள் பிறப்பித்துக் கட்டியாள ஓர் இயங்குதளம் (Operating System) இல்லாமல் போனால் இவை வெறும் எலெக்ட்ரானிக் குப்பைகள்தான். ஓட்டுநர் இல்லாத பேருந்து போலத்தான். நம் போனை ஆன் செய்ததும் ஒரு கடமை தவறாத பணியாள் போல இந்த இயங்குதளம் விழித்துக்கொண்டு இடைவிடாமல் இயங்க ஆரம்பித்து விடுகிறது.

நீங்கள் Samsung On 5 Pro வாங்கினாலும் One plus six வாங்கினாலும் அதற்குள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஏதோ ஒரு பதிப்பு ( version) பொதிக்கப்பட்டிருக்கும். ஒருவிதத்தில் இது ஒரே ஓட்டுநரைப் பலமுறை படியெடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து ஷேர் ஆட்டோ முதல் வோல்வோ பஸ் வரை ஓட்டவிடுவது போலத்தான். ஒரு வருடத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை ஆகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன . (விற்பனையாகும் ஒவ்வொரு 100 ஸ்மார்ட் போன்களிலும் 88 போன்கள் ஆண்ட்ராய்டு போன்கள்). இதில் ஒவ்வொன்றிலும் ஆண்ட்ராய்டு எனப்படும் ஓட்டுநர் கடமை தவறாமல் தன் பணியைச் செய்து கொண்டுள்ளார். ஆண்ட்ராய்டு இன்று சந்தேகமே இல்லாமல் நிறைய பேர் விரும்பும் மொபைல் OS ஆக மாறி விட்டது.  

சரி. இந்த மாடலில் பஸ்ஸில் ஏதேனும் ரிப்பேர் இருந்தாலோ, பஸ் கொஞ்சம் மக்கர் செய்தாலோ அதை ஒர்க்-ஷாப்புக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். ஆனால், ஓட்டுநரிடம் ஏதேனும் குறை இருந்தால் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்து ஆப்பிளையும் சாத்துக்குடியையும் வாங்கிச் செல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஓர்  Wi-Fi இணைப்பு போதுமானது. ஏனெனில் இது ஒரு Software update அல்லது Upgrade . Update கட்டளையைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிதானமாக டிபன் சாப்பிடப் போகலாம். சமர்த்தாக டிரைவர் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வார்.

சிறுவயதில் நாமெல்லாம் ரேடியோ ரிப்பேர் செய்வதைப் பார்த்திருப்போம். உண்மையில், ரேடியோ ரிப்பேர் ஆகிவிட்டால் குஷி தான். அப்பா ரேடியோவை ரிப்பேர் கடைக்கு எடுத்து செல்வார் அல்லது டெக்னீஷியனை வீட்டுக்கு வரவழைப்பார். அப்போதெல்லாம் தெருமுக்கு தோறும் ஒரு ரேடியோ கடை காணக் கிடைக்கும். வீட்டுக்கு வந்த டெக்னீஷியன் ஏதோ ஒரு சீரியஸான சர்ஜரிக்கு தயாராகும் டாக்டர் போல ஆயத்தங்களைச் செய்வார். ரேடியோவைப் பக்குவமாகப் பிரித்து தூசி தும்பை அகற்றி விட்டு ஆராய்ச்சி செய்வார். சால்டரிங் கருவி தயாராக இருக்கும். அதைப் பசை போன்ற ஒன்றில் அப்பி சால்டரிங் செய்வார். ஏதேதோ பாக்ஸுகளை ரேடியோவில் இணைத்து அதன் முள் ஆடுகிறதா என்று சரி பார்ப்பார். ரேடியோவின் உள்ளே கலர் கலராக பல்வேறு சைஸுகளில் பாகங்கள் இருக்கும். நகரம் ஒன்றை பிளைட்டில் இருந்து ஏரியல் வியூ-வில் பார்ப்பதுபோல இருக்கும். கடைசியில் ஏதேதோ செய்து ரேடியோவில் மறுபடியும் கர கரவென்று சத்தம் வரவழைத்து விடுவார். ஸ்டேஷன் குமிழைத் திருப்பினால் ``நேயர் விருப்பம் தேவிபுரம் விமலா, அற்புதராஜ், பாண்டியன், ஜீவநாதன்.."

ரேடியோவுக்கு இயங்குதளம் எதுவும் இருந்ததில்லை. மின்சாரம் அதற்கென்று முன்பே போடப்பட்ட எலெக்ட்ரானிக் பாதையில் பயணித்து ஒலியாக மாறும். ரிப்பேர் என்றால் செட்டைப் பிரித்துப்போட்டே ஆக வேண்டும்.  இந்த மாதிரி பிரித்து மேயும் சமாசாரங்கள் எதுவும் இன்றி அப்படியே ஸ்மூத் ஆக update ஆகிக்கொள்ளும் ஆண்ட்ராய்டு இயங்குதளம். அதிகபட்சம் அப்டேட்டுக்குப் பிறகு restart ஆகலாம்.

ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு 2009-ம் ஆண்டு ஏப்ரலில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது. இது 'கப்-கேக் 1.5' என்று அழைக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு வெர்சன்-களை இனிப்பு பலகாரங்களின் பெயர்களால் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அடுத்து வந்தது onut OS.  ஆண்ட்ராய்டின் ஏதோ ஒரு வெர்ஷனுக்கு இந்திய இனிப்பின் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உதாரணமாக  N வரிசையில் 'நெய்யப்பம்' வரும்;  P வரிசையில் 'பேடா' வரும் என்றெல்லாம் எதிர்பார்ப்பட்டது. ஆனால், N வரிசை ஆண்ட்ராய்டு 'நூகட்' எனப்படும் மேல்நாட்டு இனிப்பின் பெயரிலேயே அழைக்கப்பட்டது. 

இந்த வரிசையில் 8.0 ஓரியோவை அடுத்து தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளம் 9.0 பை. ( Pie) (ஆண்ட்ராய்டு பீ என்றும் அழைக்கிறார்கள்) வட்டவடிவத்தில் இருக்கும் இனிப்பான பையை ஓரளவு இனிப்பு பீட்ஸா எனலாம். நம்மூர் பேக்கரிகளில் 'தில்-பசந்த்' என்று ஓர் இனிப்பு கிடைக்கும். பையை ஓரளவு அதனுடன் ஒப்பிடலாம். 

'ஓரியோ' இயங்குதளத்தில் சிலபல கோளாறுகள் பயனர்களால் அறிவிக்கப்பட்டன. உதாரணமாக ப்ளூடூத் இணைப்பில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாகப் பலர் தெரிவித்தார்கள். மேலும், ஓரியோ இயங்குதளம் சார்ஜிங்-கின்போது அளவுக்கு அதிகமான 'பவரை' இழுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல போனில் எவ்வளவுதான் மெமரி இருந்தாலும் சில App-கள் தரவிறங்காது. 'போதுமான இடம் இல்லை' என்று போன் திரும்பத் திரும்ப கதறிக் கொண்டிருக்கும். இதுபோன்ற கோளாறுகள் அடுத்தடுத்த version-களில் சரிசெய்யப்படும்.

சிலர் இந்த அப்டேட்- களை விரும்புவதில்லை. 'பரிச்சயம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகின பிசாசே தேவலாம்' என்ற மனப்பாங்குதான் காரணம். வீட்டை நன்கு renovate செய்து பெயின்டை மாற்றி பர்னிச்சர்களை மாற்றிப்போட்டு அதன்பிறகு பார்த்தால் 'முதலில் இருந்த அமைப்பே நன்றாக இருந்தது' என்று தோன்றுவதுபோல. இங்கே ஒரு நிதர்சனமாக உண்மையையும் குறிப்பிட்டாக வேண்டும். லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு அப்டேட் என்னப்பா? பை தானே? போனை Wifi யில் இணைத்து அதைத் தரவிறக்கிக் கொள்ளலாம், நம் போனுக்கு புத்தம் புதிய பொலிவான ஓட்டுநர் கிடைத்து விடுவார் என்று நாம் நினைத்தால் தப்பு. பல போன்களில் இந்த அப்டேட் ஆப்ஷனே இருப்பதில்லை. என்னுடைய போன் தற்போது Marshmallow இயங்குதளத்தில் உள்ளது. இதை என்னால் பைக்கு மாற்ற முடியாது. இப்போது நீங்கள் கடைக்குச் சென்று ஒரு லேட்டஸ்ட் ஹை-எண்டு போனை யானை விலை கொடுத்து வாங்கினால் அதில் ஒருவேளை ஓரியோ என்ற பாகன் அமர்ந்திருக்கலாம். இன்னும் சில மாதங்களில் பை -அப்டேட் செய்துகொள்ளலாம் சார் என்ற கியாரண்டியையும் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கலாம். நீங்கள் என்றோ ஒரு குறைந்தவிலை ஆண்ட்ராய்டு போனை வாங்கியிருந்தால் அதில் இன்னும் லாலிபாப் அல்லது கிட்காட் வெர்சன் இயங்கிக் கொண்டிருக்கலாம். நீங்கள் Pie சாப்பிட ஆசைப்படக் கூடாது. இந்த version இல் பல செயலிகளை (Apps) இறக்க முடியாது. சில டேட்டிங் ஆப்-கள் லாலிபாப்பில் கிடைக்காமல் போகலாம்.

'மெட்டுக்குப் பாட்டா' 'பாட்டுக்கு மெட்டா' என்பதுபோல போனுக்காக இயங்குதளமா இயங்குதளத்துக்காகப் போனா என்பது ஒரு தலைசிறந்த கேள்வி. பாட்டுக்குத் தான் மெட்டு. போனுக்கு தான் இயங்குதளம். அனால் சில சமயங்களில் அப்போது இருக்கும் ஆண்ட்ராய்டு version க்கு ஏற்ப போன் தயாரிப்பாளர்கள் தங்கள் வன்பொருள்களை tweak செய்து தயாரிக்கிறார்கள். அதாவது டிரைவரின் திறமைக்கு ஏற்ப பஸ்ஸை தயாரிக்கிறார்கள். அதன் பிறகு பயனாளிகள் எங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் வேண்டும் (ஹார்டுவேரை மாற்றாமல்) என்று கேட்டால் அது பெரிய தலைவலி. ஹார்டுவேரில் இந்தப் புதிய செயல்திறனைத் தாங்குவதற்கு மாற்றங்கள் செய்யவேண்டி இருக்கும். பல நிரல்களில் கைவைக்க வேண்டி இருக்கும். மேலும், இப்படியே update களை கொடுத்துக்கொண்டிருந்தால் பயனர் புது போனை வாங்குவது பற்றி யோசிக்கவே மாட்டார். பஸ் தேய்ந்து கொண்டே வந்தாலும் அதுதான் டிரைவரை மாற்றிக் கொள்கிறோமே, அவர் எப்படியோ கஷ்டப்பட்டு திறம்பட ஓட்டி விடுவார் என்று பஸ்ஸை மாற்றாமல் இருந்து விட்டால்..? எனவேதான் பெரும்பாலான கேஸ்களில் ஒரு டிரைவர் -ஒரு பஸ் என்ற விதி இயங்குகிறது. அதாவது ஒரு போனுக்கு (அது வாங்கும்போது ஏற்றப்பட்ட) ஒரு இயங்குதளம்தான். இதில் விதிவிலக்குகளும் உண்டு. கூகுளே தயாரிக்கும் பிக்ஸல் போன்ற சில போன்களில் நாம் விரும்பும் இயங்குதளத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம். நிறைய விலை கொடுத்து வாங்கும் போன்களில் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டிராய்டு வெர்சன்களுக்கு இலவசமாக upgrade செய்துகொள்ளலாம். உங்கள் போனில் இருக்கும் யானைப்பாகனைப் பற்றித் தெரிந்துகொள்ள Settings -> About Phone -> Android Version என்று சென்று பாருங்கள். அதையே நிறைய நேரம் அழுத்தினால் அந்த version னுக்கு உரிய இனிப்பு பண்டத்தின் லோகோ கூட வரும். 

புதுப்புது ஆண்டிராய்டு பதிப்புகள் வந்துகொண்டே இருப்பதற்கு  Security update களும் ஒரு காரணம். ஒவ்வொரு முறையும் நம் போனின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறார்கள். அல்லது வலுப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே சிலர் லாகவமாக நுழைந்து வெளிவந்துவிடுவதுபோல போனின் இந்தப் பாதுகாப்பு ஓட்டைகளின் வழியே ஹேக்கர்-கள் உள்ளே நுழைந்துவிட முடியும். இதை Security vulnerabilities என்கிறார்கள். இவை சாப்ட்வேர்  டெவலப்பர்களுக்கு பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் இருப்பவை. போன் கொஞ்சம் ஸ்லோவாக இயங்கினால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். போனில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ இறங்கி, இயங்கி நம் தகவல்களைத் திருடினால்..? ஆம். இந்த Vulnerabilities ஐ உபயோகித்து  நம்முடைய அனுமதி இன்றியே நம் தகவல்களைத் திருடிவிட முடியும். நம் போனில் உள்ள கான்டாக்ட்கள் , யார் யாருக்கு போன் செய்கிறோம், எந்தெந்த வெப்சைட்டுகளுக்கு போகிறோம், யாருடன் தலையில் போர்வையை மூடிக்கொண்டு பேசுகிறோம், நம்முடைய பணப் பரிவர்த்தனைகள் எல்லாவற்றையும் நோட்டம் விட முடியும். ஆண்ட்ராய்டின் ஒவ்வொரு அப்டேட்டும் இந்த மாதிரி பாதுகாப்பு ஓட்டைகளை அடைக்க முயலும் என்று நம்புவோம்.

சில சமயம் இயங்குதளத்தில் patch எனப்படும் ஒட்டுதல்கள் வருவதுண்டு. ஓரியோவில் 8.1  patch வந்தது போல. வீட்டை முழுவதும் ஒரேயடியாக பெயின்ட் அடிக்காமல் எங்கெல்லாம் சுவரில் விரிசல் இருக்கிறதோ அழுக்கு சேர்ந்திருக்கிறதோ அங்கே பட்டும் டச்-அப் செய்வதுபோல. சில முக்கியமான கோளாறுகளை மட்டும் fix செய்து உடனடியாக கஸ்டமருக்குக் கொடுக்கப்படும்.

சரி. இந்தப் புதிய ஆண்டிராய்டு இயங்குதளமான 9.0  Pie பற்றி கொஞ்சம்: இதில் சற்று ஆப்பிள்  IOS டச் இருப்பதாக சில பயனர்கள் சொல்கிறார்கள். சிலர் ஆப்பிள்  IOS ஐ ஆண்ட்ராய்டு கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். Pie இல் இருப்பதாகப் சொல்லப்படும் சில அம்சங்கள்:

> நேரம் வலது பக்கத்தில் இருந்து இடது புறம் மாற்றப்பட்டுள்ளது.

> போன் டிஸ்ப்ளே அணைந்திருந்தாலும் இன்னும் எத்தனை சார்ஜ் மிச்சம் இருக்கிறது என்று பார்க்க முடியும்.

> நிறைய ப்ளூ-டூத் சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும். காரில் சென்று கொண்டிருக்கும்போது கால்-கள் ஆட்டோமேட்டிக்-காக ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு அனுப்பப்படும்.

> ஸ்க்ரீன் ஷாட் எடுக்க ஒரு 'சாப்ட்' பட்டன் உண்டு. அதன்மூலம் ஸ்க்ரீன்ஷாட்-களை உடனுக்குடன் திருத்த (edit) இயலும் 

>  Swipe up on home screen என்ற வசதி ஒரு 'சாஃப்ட் ஹோம்' பட்டனைத் தருகிறது. இதை அழுத்தி  App களுக்கு இடையே தடையின்றி சுலபமாக  navigate செய்யலாம்.

> போனின் notification களில்  எழுத்து மட்டும் வராமல் முழு இமேஜும் வரும். 

> திரைகளின் முனைகள் சற்றே வளைந்திருக்கும் (Rounded corners)

> Text ஐ காப்பி செய்ய  select செய்கையில் அது ஜூம் செய்து காட்டப்படும்.

> போனில் நீங்கள் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது வால்யூம்-ஐ குறைக்க விரும்பினால் போனின் பக்கவாட்டில் இருக்கும் hard button களை இயக்குவீர்கள். இது போனின் ஒட்டுமொத்த சிஸ்டம் வால்யூமை குறைத்து விடும். ஆண்டிராய்டு பையில் திரையில் உள்ள வால்யூம் பட்டன் மூலம் மீடியா வால்யூமை மட்டும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

>  App களுக்கு ஏற்ப பேட்டரி உபயோகத்தை நெறிப்படுத்தும் அம்சம் 

>  Pie இன் இன்னொரு சிறப்பம்சம் இதில் செயற்கை நுண்ணறிவு Machine learning போன்றவை உண்டு. நம்முடைய volume தேர்வுகள், திரையின் brightness தேர்வுகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அதன்படி நடக்கும். ஆண்ட்ராய்டு போன் ஒன்று GPS சில் முன்னே வரும் ரோடு அதிக டிராஃபிக்காக இருக்கிறது என்று சிவப்பு வண்ணத்தில் காட்டுவது இப்படிப்பட்ட machine learning தான். காலையில் நீங்கள் எழுந்து ஒருநாளும் இல்லாத திருநாளாக அம்மாவுக்கு மனைவிக்குச் சமையலில் உதவி செய்யக் கிளம்பினால் ஆண்ட்ராய்டு 'என்னப்பா? ஃபேஸ்புக் பார்க்கல?' என்று கத்தினாலும் கத்தும்.

>  Display யை தேவைப்பட்டால் வெட்டும்  Notch வசதி 

ஓரியோவில் இருந்து பைக்கு நடக்கும் இந்த அப்டேட்டை ஆண்ட்ராய்டின்  முக்கிய அப்டேட் என்கிறார்கள். ஆண்ட்ராய்டு பை தனது பீட்டா டெஸ்டிங்கை (கஸ்டமரே நடத்தும் டெஸ்டிங்) வெற்றிகரமாக முடித்துவிட்டது. Sony Mobile, Xiaomi, HMD Global, Oppo, Vivo , OnePlus போன்ற மொபைல்களின் ஹை எண்டு மாடல்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பை அப்டேட் கிடைத்து விடும் என்று நம்பலாம்.  இனிய ஆண்ட்ராய்டு 9.0  Pie மொபைல் பயன்பாட்டு அனுபவம் பெற வாழ்த்துகள்.