
ஸ்பெஷல் நாணயம் ஸ்டோரி
வீட்டின் ஜன்னலையோ அல்லது மேற்கூரையையோ உடைத்து, உள்ளே நுழைந்து பொருள்களைத் திருடுவது ஒரு வகை. அப்படி எதுவும் செய்யாமல், சினிமாப் படத்தையோ அல்லது மென்பொருளையோ, அசலை அப்படியே பிரதி எடுத்து அதனைச் சந்தையில் உலாவவிடுவதன் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் ஹைடெக் திருடர்கள் இன்னொரு வகை.

திருடனைக் கண்டு நல்லவர்களே நடுங்குகிற மாதிரி, இந்த பைரஸி என்னும் கள்ளச் சந்தைப் பூதத்தைக் கண்டு, அசல் பொருள்களைத் தயாரித்து வெளியிடும் நிறுவனங்களே அமைதி இழந்து தவிக்கின்றன. இசை, சினிமா, தொழில் துறை, மென்பொருள், புத்தகங்கள், பத்திரிகைகள், தொலைக் காட்சி, மருத்துவம் என டிஜிட்டல் கொள்ளையர்கள் கைவைக்காத இடமே இல்லை.
பைரஸி என்பது..?
இசை, சினிமா, புத்தகம், பத்திரிகை என எதுவாக இருந்தாலும், ஒருவரின் படைப்பை அல்லது உழைப்பை அவருடைய அனுமதியின்றி திருடுவது; அந்தப் படைப்பை வெவ்வேறு விதங்களில் விற்பது; படைப்பாளிக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் அவற்றைப் பரப்புவது போன்ற அனைத்துமே பைரஸிதான்.
புகை, மது என எந்தவொரு தீயப் பழக்கத்தையும் குறைந்தபட்ச அறத்துடனாவது எதிர்க்கும் மக்கள், இந்த பைரஸிக்கு மட்டும் அமோக ஆதரவு தருகிறார்கள். இந்த ஆதரவுதான் இன்றைய நூற்றாண்டின் டிஜிட்டல் ராபின்ஹூட்களை உரமிட்டு, உற்சாகமாக வளர்க்கிறது.
எப்படி உருவாகிறது பைரஸி?
ஒவ்வொரு துறைக்கும் ஏற்றபடி இந்த பைரஸி உருவாவது மாறுபடுகிறது. உதாரணமாக, திரைத் துறையையே எடுத்துக்கொள்ளலாம். ஒரு படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் படம் டி.வி.டி-க்களாக விற்பனை ஆகும். இந்த டிவி.டி-க்களை விற்கும் கடைகளில் மன்சூர்அலிகானும், விஷாலும் புகுந்து, தட்டிக் கேட்பதைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள்.
ஆனால், இப்போதோ டி.வி.டி-க்கள் போய், ஆன்லைன் பைரஸிகள் வந்துவிட்டன. ‘கபாலி’ திரையரங்கில் வெளியான அன்றே, ஆன்லைனில் வெளியாகி, எல்லோரையும் கதிகலங்க வைத்தது. முன்பு, டி.வி.டி-க்களாக மட்டுமே உலாவந்த படங்கள் இன்று இணையதளங்களிலேயே சுடச்சுட டவுன்லோடு செய்யப்படுகின்றன.
முன்பைவிடவும், தற்போது இணையத்தின் வீச்சும், வேகமும் அதிகரித்துவிட்ட நிலையில், இது பெரும் ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுமே இந்த ஆன்லைன் பைரஸி ஆபத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் மட்டுமல்ல, சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் சீரியல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்கூட இதனிடமிருந்து தப்பவில்லை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அத்தனை நிகழ்ச்சிகளும் சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியாகிவிடுவதால், உடனே அவற்றை டவுன்லோடு செய்து பார்த்துவிடுகின்றனர் மக்கள். இதனால் ஏற்கெனவே ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்பதையே இப்போது சிந்திக்க முடியாமல் இருக்கிறது.
யூ-டியூப் சானல்களில் இருக்கும் நிகழ்ச்சிகள் கூட, யூ-டியூப்பில் பார்க்காமல், டவுன்லோட் செய்யப்பட்டுத்தான் பார்க்கப்படுகிறது. இதனால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு யூ-டியூப் மூலம் கிடைக்கும் வருமானம்கூட பாதிக்கப்படுகிறது.
பெரிய, பெரிய இசை நிறுவனங்கள்கூட இந்த பைரஸி பிரச்னையால் பல கோடி ரூபாய்களை இழக்கின்றன. சிறிய நிறுவனங்கள் அடைந்த சோகக் கதைகளைச் சொல்லவே வேண்டாம். அவர்களின் வருமானத்தில் நேரடியாகவே கைவைத்துவிடுகிறது பைரஸி.
மக்கள் ஏன் பைரஸியை விரும்புகிறார்கள்?
முதல் காரணம், சௌகர்யமான விலை. ஒரு புத்தகத்தின் உண்மையான விலை ரூ.1,000 எனில், அதன் கள்ளப்பதிப்பு ரூ.200-க்கே கிடைப்பதைப் பலராலும் தவிர்க்க முடிவதில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவதைவிடவும் குறைவான விலைக்கோ அல்லது இலவசமாகவோ வாங்கவே விழைகின்றனர் மக்கள். விளைவு, தேவையோ, இல்லையோ, குறைந்த விலையில் வாங்கிக் குவிக்கின்றனர்.
சினிமா, பத்திரிகை, மென்பொருள்கள் என எல்லாத் துறை சார்ந்த பொருள்களுக்கும் இதே நிலைதான். வாரப் பத்திரிகை ஒன்று 20 ரூபாய் எனில், அதனை பைரஸியின் உதவியுடன் இலவசமாகவே பி.டி.எஃப்-ஆகப் படிக்க முடிகிறது. சினிமா டிக்கெட் 150 ரூபாய் என்றால், அதனை இணையத்தில் இலவசமாகவே டவுன்லோடு செய்து பார்க்க முடியும்.
மென்பொருள் உலகில் கொடிக்கட்டிப் பறக்கின்றன பைரஸி மென்பொருள்கள். இந்த பைரஸி மென்பொருள்களைப் பயன்படுத்துவதால், செலவு மிகக் குறைவு; லைசென்ஸ் பெற்ற மென் பொருள்களில் ஏதேனும் ஒரு பிரச்னை எனில், மீண்டும் ஒரு லைசென்ஸ் வாங்கவேண்டும். ஆனால், பைரஸி மென்பொருளில் இந்தப் பிரச்னையே இல்லை.
வீடியோ கேம்ஸிலும் இதேதான் நிலை. சில மென்பொருள்கள் மற்றும் வீடியோ கேம்ஸ்கள் வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஆன்லைனில் அவற்றை, எல்லா நாடுகளில் இருந்தும் எளிதாக டவுன்லோடு செய்துவிடலாம்.
விலை முக்கியக் காரணியாக இருப்பதால், பைரஸி பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களைவிடவும், வளர்ந்துவரும் நாடுகளில் அதிகம் பேர் இருக்கின்றனர்.
எவ்வளவு நஷ்டம்?
பைரஸி கொள்ளையர்கள் மூலம் பல்வேறு துறையினர் நஷ்டம் எவ்வளவு என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாது. திருட்டுத்தனமாக நடக்கும் இந்த பைரஸிகளால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள்.
தடுக்க என்னதான் வழி?
இந்தக் கள்ளச் சந்தையைத் தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும்கூட, அரசிடம் இருந்து பெரிய அளவில் அச்சுறுத்தல்களோ, நடவடிக்கைகளோ இல்லாததால், காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. இதை எப்படித் தடுப்பது என உலகமே 360 டிகிரியிலும் சிந்தித்து வருகிறது. ஆனால், இதுவரை பெரிய அளவில் பைரஸியைக் குறைப்பதற்கான எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், ஒவ்வொரு துறையிலும், பைரஸியைத் தடுக்க சின்னச் சின்ன முயற்சிகள் நடந்து வருகின்றன. நம்மூர் அளவில் சொல்ல வேண்டும் எனில், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களை மொபைலுக்குள் கொண்டுவந்த ஹாட்ஸ்டார், அமேசான் டிவி, நெட்ஃபிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பைரஸி நல்லதா?
நிச்சயம் நல்லதல்ல. விலை குறைவு என்றாலும் கூட, நியாயமாகப் பார்த்தால், அது இன்னொருவரின் சொத்து. அவருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்தே ஒருவர் அதைப் பயன்படுத்த வேண்டும். வேறொருவருக்குச் சொந்தமான சொத்தை, அவரது அனுமதி இல்லாமல் நாம் பயன்படுத்துவது திருடுவதற்குச் சமமான ஒரு செயலாகும்.
மேலும், கணினிகளை உளவு பார்க்கும் பல மென்பொருள்கள், ட்ரோஜன் வைரஸ்கள் அனைத்தும் பைரஸி மூலம்தான் பரவுகின்றன. இலவச மென்பொருள்கள், படங்கள், கேம்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம் போன்றவற்றை நாம் டவுன்லோடு செய்யும்போது, நம்முடைய டேட்டா களவு போகும் வாய்ப்பும் உள்ளது.
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயை இழந்த கதை மாதிரிதான் பைரஸி சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தும்போது நாம் சந்திக்கும் இழப்பு. தவிர, பைரஸி பொருள்களைப் பயன்படுத்தும்போது நாம் சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்பட வேண்டியிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
நமக்குச் சொந்தமான பொருளை நம் அனுமதி இல்லாமல் இன்னொருவர் பயன்படுத்தும்போது வரும் கோபம், பிறருக்குச் சொந்தமான ஒரு பொருளை அவர் அனுமதியில்லாமல் நாம் பயன்படுத்த நினைக்கும்போது நமக்கு வர வேண்டும்.
இந்த அக்கறையும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொரு மனிதனிடம் வந்துவிட்டால், நம் பொருளை மற்றவர்கள் திருடிப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்; மற்றவர்களிடம் நாமும் திருடிப் பயன்படுத்த மாட்டோம்.
-ஞா.சுதாகர்
தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்!

வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழ்ப் படங்களை முறையாகப் பணம் செலுத்திப் பார்ப்பதற்காகவே பல்வேறு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இயங்கிவருகின்றன. இவர்களால் பைரஸி தடுக்கப்படுவது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது. இப்படி இணையதளங்களில் முறையாகப் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரும்போது, மக்கள் அதற்கு ஆதரவு தருகிறார்களா என்கிற கேள்வியை ஹீரோ டாக்கீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆதித்யனிடம் கேட்டோம்.
“இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை திரையரங்கங்களுக்கு அடுத்ததாகப் படம் பார்ப்பதற்கு ஒரே வழி தொலைக்காட்சி மட்டுமே. வெளிநாடுகளில் இருப்பதுபோல, இணைய வசதியோ, அதிகாரபூர்வ டி.வி.டி-க்களோ எல்லாம் இங்கே இல்லை. எனவேதான், மக்கள் பைரஸியை நோக்கிச் சென்றனர். அதாவது, அவர்களுக்குப் படம் பார்க்க வேண்டும் என்கிற தேவை இருக்கிறது; ஆனால், அதைப் பூர்த்தி செய்ய வேறெந்த வசதியும் இல்லை. இந்த இடைவெளியைத்தான் பைரஸி தளங்கள் நிரப்புகின்றன.
இதற்கு ஒரு காரணம், படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்றுகூட சொல்லலாம். இந்தியாவில் ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கும்போதே, அதற்கான இன்டர்நெட் உரிமை, டி.வி.டி உரிமை என அனைத்தையும் சேர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கிவிடுகின்றன. அப்படி வாங்கினாலும்கூட இணையத்திலோ, டிவி.டி-யாகவோ படத்தை வெளியிடுவதில்லை. காரணம், திரையரங்கத்துக்கு அடுத்து தங்கள் தொலைக்காட்சியில்தான் அந்தப் படம் வரவேண்டும் எனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், வெளிநாடுகளில் நிலைமை அப்படி இல்லை. ஒரு இந்தியப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கும் விநியோகஸ்தர்கள், அதனுடன் சேர்த்து இன்டர்நெட் உரிமையையும் சேர்த்து வாங்குவார்கள். அவர்களிடம் இருந்து அந்த உரிமையை வாங்கித்தான் எங்களைப் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் செயல்படுகின்றன.
நாங்கள் தற்போது வெளிநாடுகளில் மட்டும் இந்த பைரஸியின் ஆக்கிரமிப்பைக் குறைத்துள்ளோம். இதேபோன்ற ஒரு நிலைமை இங்கும் இருந்தால், இங்கேயும் நிச்சயம் பைரஸியைக் குறைக்க முடியும். தற்போது பல நிறுவனங்கள் தங்களுக்கென ஸ்ட்ரீமிங் சேவைகளைக் கொண்டுவந்துள்ளன. அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள், சாட்டிலைட் உரிமத்தைவிடவும் இன்டர்நெட் உரிமைக்கு அதிக பணம் கொடுத்துப் படங்களை வாங்குகின்றன. இதுபோன்ற மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவை.
பைரஸி காப்பி மூலம் மொபைல் அல்லது கணினியில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நாங்கள் டிவி ஆப்ஸ்களில்கூட சேவையை வழங்குகிறோம். இதனால் எளிதாக டிவியிலேயே படங்களைப் பார்க்கமுடியும். அதேபோல, பைரஸி காப்பியில் தரமற்ற ஆடியோ மற்றும் வீடியோ குவாலிட்டி இருக்கும். ஆனால், இதுபோன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் எந்தக் குறையும் இல்லாமல் தெளிவான படங்கள் கிடைக்கின்றன. இப்படி முறையாகத் திரைப்படங்களை எல்லா வசதிகளுடனும் சேர்த்து வழங்கும்போது, மக்கள் இதனை விரும்புகின்றனர்.
இங்கே இருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் திரையரங்க வருமானம், வெளிநாட்டு பட உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகிய மூன்றுதான் வருமானத்துக்கான ஒரே வழி. ஆனால், இன்டர்நெட் உரிமை மூலமாகவும் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். திரையரங்குகள்போல, இதில் உடனே பணம் கிடைக்காது. ஆனால், ஒரு படத்தை ரசிகர்கள் எத்தனை காலம் கழித்து வேண்டுமானாலும் பார்க்க முடியும். அந்த வருமானத்தைத் தயாரிப்பாளர்கள் பெற முடியும். மேலும், பைரஸியும் தடுக்கப்படும்.’’
வலையில் சிக்கிய மேக்னட்.காம்
தமிழின் பிரபல நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை பி.டி.எஃப் வடிவில் பதிவேற்றி, மற்றவர்கள் பணம் செலுத்தி படிக்க உதவிய தளம் மேக்னட்.காம். பல பத்திரிகைகளின் உழைப்பைத் திருடி, பணம் சம்பாதித்துவந்த இந்தத் தளம் குறித்து, சென்னை சைபர் க்ரைமில் ஊடகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இணையதளத்தை இயக்கிவந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்ற பொறியாளரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.