நடப்பு
Published:Updated:

ஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா?

ஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா?

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர்

த்திரப் பதிவு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்படுவதாகவும், இனிமேல் தமிழ் நாட்டில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் எந்த ஊரில்  உள்ள  சொத்தையும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லி இருப்பதாகவும்,   தமிழகம் முழுவதும் 41 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு தொடங்கி விட்டதாகவும், இனி பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டிய தில்லை என்றும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன.    

ஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா?

என்ன நடக்கிறது?

தமிழகப் பத்திரப் பதிவுத் துறையில் பணிப் பளுவைக் குறைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஒரு பத்திரம், பதிவு செய்யத் காலதாமதம் ஆவதற்கு முக்கியக் காரணம், பத்திரத்தின் அசலைக் கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு ஸ்கேன் செய்வது மற்றும் பத்திரத் தகவல்களை வைத்து வில்லங்கக் குறிப்பு ‘டேட்டா என்ட்ரி’ செய்வது இரண்டும்தான். இந்த இரண்டையுமே பத்திரம் தயாரிப்பவர்கள் தலையில் கட்டிவிட்டால், பதிவு வேலை எளிதில் முடிந்துவிடும் என்பது பத்திரப் பதிவுத் துறையின் கணக்கு.

இதன்படி பத்திர எழுத்தர்களுக்கு தனித் தனியே வலைதளப்புலம் (Portal) ஒன்று தரப்படும். அவர்கள் எழுதும் சொத்துப் பத்திரம், பதிவுக்கு வரும் முன்பே அந்த ஆவணத்தின் நகல் மற்றும் வில்லங்கக் குறிப்புகளைப் பதிவுத் துறையின் இந்த வலைதளத்தில் ஏற்றிவிட வேண்டும்.

பின்னர் பதிவு செய்ய வரும்போது அசல் ஆவணத்துடன் வரவேண்டும். அப்போது பதிவினை முழுமை செய்வதற்கான புகைப்படம் பதிவு செய்தல், ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகள் கையொப்பம் பதிவு செய்தல் போன்ற ‘சில்லறை’ வேலைகள் மட்டும் நிறைவேற்றப்படும்.

முக்கியப் பணிகளான ‘ஸ்கேனிங்’, ‘இண்டெக்ஸிங்’ ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டுவிட்டபடியால் தற்போது சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள அசல் ஆவணத்தை, பத்திர எழுத்தர் உள்ளீடு செய்த கணினி நகலுடன் ஒப்பிட்டு, வில்லங்கக் குறிப்புகளையும் ஒப்பிட்டுச் சரிபார்த்து, இரண்டும் சரியாக உள்ளதா என்று சோதித்தபின்னர், பதிவை நிறைவு செய்த உடனேயே பத்திரம் திருப்பித் தரப்படும்.

ஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா?பத்திரப் பதிவுத் துறையில் மிகச் சமீபத்தில் வந்துள்ள ‘மிகப் பெரிய’ மாற்றம் இது. இந்தப் புதிய முறைகூட சோதனை அடிப்படையில்  தமிழ்நாடு பதிவுத் துறையின்  9 சார் பதிவு அலுவலகங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சோதனை மற்றும் பிழை திருத்தம் (Trial and Error rectification) முறையில் சீர்செய்யப்பட்டு வருகின்றன.

எந்தெந்த ஊரில்..?

இந்தப் புதிய முறை, சோதனை அடிப்படையில் நடை முறைப்படுத்தப்பட்ட ஒன்பது பத்திரப்பதிவு அலுவலகங்கள் பின்வருமாறு...

1. திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகம் -   சென்னை மண்டலம்

2. பள்ளிகொண்டா - வேலூர்

3. திருவெண்ணெய் நல்லூர் - கடலூர்

4. நாகப்பட்டினம் முதல் இணை சார் பதிவகம் - தஞ்சை

5. பெரம்பலூர் - திருச்சி

6. கணபதி - கோவை

7. ஒத்தக்கடை - மதுரை

8. சூரமங்கலம் - சேலம்

9. தென்காசி இரண்டாம் இணை சார்பதிவகம் -    நெல்லை

இந்தப் புதிய முறைக்கு ‘ஸ்டார் 2.0 வலைதள மென்பொருள் அடிப்படை முறை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சரி, ஆன்லைன் பதிவு சாத்தியமா என்று பார்ப்போம். எவரும் பத்திரப் பதிவு அலுவலகம் வராமல் வீட்டில் கணினி முன் உட்கார்ந்து அல்லது பிரவுசிங் சென்டரில் இருந்து சொத்து மாற்றம், தானம், அடமானம், உயில் போன்ற அனைத்து பத்திரங்களையும் பதிவுத் துறைக்குச் சொந்தமான கணினியில் பதிவேற்றம் செய்து வில்லங்கப் பட்டியலிலும் பதிவேற்றம் செய்து அதை நிரந்தரமாகச் சேமிப்பதே ஆன்லைன் பதிவாகும். இது நடைமுறையில் சாத்தியம்தானா?

முயன்றால் முடியாதது எதுவுமில்லை

பல நாடுகளில் சொத்துப் பதிவு என்பது வழக்கறிஞர்களால் அவர்களது அலுவலகத்திலிருந்து நிலப்பதிவேடு பராமரிப்பு (Land Records) துறையின் கணினியுடன் இணைப்புப் பெற்று, பதிவேற்றம் செய்து எளிதாக முடிக்கப்படுகிறது. அங்கெல்லாம் தகவல் பாதுகாப்பு (Data Security) உச்சத்தில் உள்ளது. யாரும் அரசுத் துறை சேவைக் கணினியுடன் (server) இணைப்புப் பெற முடியாது. இதில் தவறு செய்தால் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். 

ஆனால், இங்கே அப்படியா? பதிவுத் துறையில் இன்னும் தலைமை சேவைக் கணினி (Main Server) அமைக்கப்படவில்லை. அப்படியே அமைந்தாலும் அதன் பாஸ்வேர்டு ஆயிரம் பேரிடம் இருக்கும். பதியப்படும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சி.ஐ.ஏ (CIA), எஃப்.பி.ஐ (FBI) கணினியில்கூட  ஹேக்கர்கள் புகுந்து விளையாடிவிடுகிறார்கள் எனும் போது நம்மூர் சர்வர்கள் எம்மாத்திரம்?

தமிழ்நாடு பதிவுத்துறை கணினி மிகச் சாதாரணமானது. பதிவான ஆவண நகல்களையே மாற்றி வில்லங்கக் குறிப்புகளில் வில்லங்கம் செய்துமாட்டிக் கொண்ட பதிவுத் துறைக் கறுப்பு ஆடுகள் ஏராளம். மாட்டாதவர்கள் எண்ணிக்கையும் தாராளம். அப்படி மாட்டிக் கொண்டாலும் 10 நாள்களில் ஜாமீனில் வெளியே வந்து நடமாடுவார்கள். வழக்கு 10, 20 வருடங்கள் நடக்கும். அதற்குள்  செமத்தியான இடத்தில் போஸ்டிங் வாங்கிக்கொள்ள முடியும்.

சட்டப்படி ஆன்லைன் பதிவு சாத்தியமா?

சட்டப்படி ஆன்லைன் பதிவு இப்போது சாத்தியமா என்றால், நிச்சயமாக இல்லை. ஏனென்றால் பதிவுச் சட்டம் பிரிவு 28-ன்படி, சொத்து குறித்த ஆவணம், சொத்து இருக்கும் இடத்தில் உள்ள சார் பதிவாளரிடம் மட்டும் நேரில் தாக்கல் செய்யப்பட வேண்டும். பொது அதிகார ஆவணத்தை மட்டும் கூடுதலாக, சொத்து உரிமையாளர் நிரந்தரமாக வசிக்கும் இடத்தில் உள்ள சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம்.

வெறும் தாக்கல் செய்தால் மட்டும் பதிவு முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. ஆவணத்தைச் சரியாக எழுதி இருக்கிறார்களா, சொத்து விவரம் முழுமையாக உள்ளதா, ஆவணத்தின் தன்மை என்ன, ஆவணத்தில் முத்திரைத் தீர்வையை ஏய்க்கும் உள்குத்து வேலைகள் உள்ளதா, தணிக்கை நடக்கும்போது ஆவணம் தப்பிக்குமா என்றெல்லாம் சார் பதிவாளர் ஆராய்ந்து, தவறுகள் இருப்பின் கட்சிக்காரரை அங்கேயே ஆவணத்தைச் சரி செய்யச் சொல்லி, மீண்டும் தாக்கல் செய்ய சொல்ல வேண்டும்.

முத்திரைத் தீர்வில் குறை இருந்தால், அதைக் கட்டச் சொல்ல வேண்டும். வரைபடம், கட்டட அளவுகளில் வித்தியாசம் இருந்தால் முறைப்படுத்த வேண்டும். சொத்து அல்லது நிலம், புறம்போக்கு, அரசு நிலம், அங்கீகாரம் பெறாத வீட்டுமனைப் பிரிவு, வழக்கில் தடை உத்தரவு வழங்கப்பட்ட சொத்து, அதற்கும் மேலாக எழுதிக் கொடுப்ப வருக்கு சம்பந்தமே இல்லாத சொத்து என்றுகூட தெரியவரலாம். அப்போது சார்பதிவாளர் ஆவணத்தை ஏற்க மறுத்து தணிக்கைக் குறிப்பு எழுதி, ஆவணத்துடன் அதைத் தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவில் இது சாத்தியமே இல்லை.

ஆக, ஆன்லைன் பதிவு கொண்டுவர வேண்டு மானால் பதிவு சட்டம் பிரிவு 28, 29-ல் ஆரம்பித்து பல முக்கியப் பிரிவுகளைத் தலைகீழாகத் திருத்த வேண்டும். அதாவது, பதிவுச் சட்டமே கணினி யுகத்துக்கு இணங்க புத்தம் புதிதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதுவும் சாத்தியமாக வாய்ப்பில்லை.

மேலும், ஆன்லைன் பதிவு முறைகேடுகளுக்குக் கடுமை யான தண்டனை வழங்க சைபர் க்ரைம் சட்டமும், இந்திய தண்டனைச் சட்டமும் இணையாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆன்லைன் பதிவு என்பது இவற்றோடு இணைக்கப்பட்டால்தான், அதாவது ஸ்டார் (Simplified and Transparent Administration of Registration - STAR)  திட்டத்துக்கு  அதிக அதிகாரம் மற்றும் தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டால்தான் பொதுமக்கள் நிம்மதியாக ஆன்லைன் பதிவு முறைக்கு மாற முடியும்.

எனவே, தற்போதைய சட்ட விதிமுறைகளின் படியும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் ஆன்லைன் பத்திரப் பதிவு கானல் நீர் போலத்தான் உள்ளது. பதிவுத்துறை அலுவலகங்களின் அனைத்துப் பணிகளும் டாடா நிறுவனத்துக்கு (TCS) ஒப்பந்த அடிப்படையில் தரப்படலாம் என்கிற செய்தி உலாவும் நிலையில், 100% பாதுகாப்பான வலைதளம் உருவானால் மட்டுமே ஆன்லைன் பதிவு ஓரளவு சாத்தியம்.

ஆனால், பத்திரங்களைப் பரிசீலித்தல், வடிகட்டுதல், களைகளைக் களைதல், குறைகளைக் களைதல், முத்திரைத் தீர்வை போன்ற அரசு வருவாய்க்கு உத்தரவாதம் செய்தல் போன்ற அனைத்துப் பணிகளும் பதிவுத்துறை அதிகாரி களின் கையிலேயே தொடர்ந்து விடப்படும். இவற்றைத் தனியாரிடம் விட்டால் எதுவும் சரிவர நடக்காது.

அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் (ஓய்வுக்குப் பின்பும் கூட) உட்பட்டவர்கள் என்பதால், பதிவு செய்பவர்களுக்குச் சொத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, முழுமை யான ஆன்லைன் பதிவு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றேபடுகிறது.

படம்: பா.காளிமுத்து