
கேட்ஜெட்ஸ்
வங்கி, வங்கியாக ஏறி இறங்கியபின் கிடைக்கும் வங்கிக் கடன்கள், எந்தச் சிக்கலும் இன்றி உடனடியாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்தக் கற்பனையை நிஜத்தில் சாத்தியமாக்கியிருக்கின்றன சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். ஆன்லைன் மூலம் கடன் தரும் இரண்டு ஆப்கள் இங்கே...

மணி டேப் Money tap
மணி டேப் என்னும் இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு ஒப்பன் செய்தால், வங்கி அதிகாரிகளை விடவும் எளிமையாகப் பேசுகிறது. பக்கம்பக்கமாக விண்ணப்பங்களை நீட்டி, நிரப்பச் சொல்லாமல் கேள்வி, பதில் மூலமாகவே நம்முடைய தகவல்களைக் கேட்டு வாங்கிக்கொள்கிறது. இப்படி நம் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும்; உடனே தன்னுடன் இணைந்திருக்கும் வங்கிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு சில நிமிடங்களில் இவ்வளவு தொகை வரை உங்களுக்குக் கடன் கிடைக்கும் எனச் சொல்லிவிடுகிறது. ரூ.3,000 முதல் ரூ.5 லட்சம் வரை இதன்மூலம் எளிதில் கடன் பெறலாம்.

பணம், வங்கி, நிபந்தனைகள் போன்ற அனைத்தும் நமக்குச் சம்மதம் என்றால், நம் அடையாளச் சான்றுகளை மின்னணு ஆவணங்களாகப் பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர், அந்தத் தொகை உங்கள் ஆப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகைக்கு வட்டி வசூலிக்க மாட்டார்கள். இந்தக் கணக்கில் இருந்து எவ்வளவு பணத்தைச் செலவு செய்கிறீர்களோ, அதற்கு மட்டும்தான் வட்டி. இந்தத் தொகையை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆப் மூலமாகவே கடனைத் திருப்பிச் செலுத்தவும் முடியும்.
எவ்வளவு இ.எம்.ஐ., எத்தனை தவணைகள் போன்றவற்றையும் நாமே முடிவு செய்துகொள்ளலாம். நம் விவரங்களைப் பதிவிடுவதில் இருந்து பணத்தைப் பரிமாற்றம் செய்வது வரையிலும் மிக எளிமையாக இருப்பதுதான் இதன் ப்ளஸ். தற்போது நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் மட்டும்தான் இந்தச் சேவை கிடைக்கிறது என்பது மைனஸ். மற்ற நகரங்களுக்கும் விரைவில் வருமாம்.
டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.mycash.moneytap.app&hl=en

கேஷ்e CASHe
‘மோசமான கிரெடிட் ஸ்கோர் காரணமாகக் கடன் கிடைக்காதவர்களுக்குக்கூட நாங்கள் கடன் தருவோம்’ என அழைக்கிறது கேஷ்e. மற்ற நிதி நிறுவனங்கள் போல கிரெடிட் ஸ்கோரை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், சோஷியல் லோன் கோஷன்ட் (SQL) என்னும் ஃபார்முலாவைப் பின்பற்றுகிறது இந்த ஆப்.

இதற்காக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை, அங்கே நம்முடைய செயல்பாடுகள், தொடர்புகள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம் என்கிறது கேஷ்e. இதற்காக முதலிலேயே ஃபேஸ்புக், கூகுள், லிங்க்ட்இன் கணக்குகளைக் கொடுத்து லாக் இன் செய்யச் சொல்கிறது. இதன் பின்னர் அடையாளச் சான்றுகளையும் அப்லோட் செய்ய வேண்டும். இவற்றைப் பார்த்துவிட்டு, நமக்கு எவ்வளவு கடன் தரலாம் என முடிவாகும். ரூ5,000 முதல் ரூ.1 லட்சம் வரை இதில் கடன் பெற முடியும்.
இப்படிப் பெறும் கடனை நம் வசதிக்கேற்ப 15, 30, 90 நாள்கள் எனத் தேர்வு செய்து திருப்பிச் செலுத்தலாம். ஒவ்வொரு வகை கடனுக்கும் ஒவ்வொருவிதத்தில் வட்டி வசூலிக்கப்படும். மாதச் சம்பளம் வாங்கும் இளைஞர்களே இந்த ஆப்பின் இலக்கு. இ.எம்.ஐ-கள் குறைவாக இருப்பதால், குறுகிய காலத்துக்குள் கடனைத் திருப்பித் தர வேண்டும் என்பது இதன் மைனஸ். டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=co.tslc.cashe.android&hl=en
(ஏதோவோர் அவசரத்துக்கு இது மாதிரி கடன் களை வாங்கலாம். எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காகவே இந்தக் கடனை வாங்க வேண்டும் என்றில்லை!)
- ஞா.சுதாகர்