தன்னம்பிக்கை
Published:Updated:

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு அகிலம்மு.ராஜேஷ்

கேட்ஜெட்களும் ஆப்களும் நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கங்கள் ஆகிவிட்டன. வேலையை எளிதாக்கும் இத்தகைய டெக்னாலஜியின் வளர்ச்சி தற்போது  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையிலும் செயல்படுகின்றன. அத்தகைய சிறப்பம்சம் மிக்க ஆப்ஸ் மற்றும் கேட்ஜெட்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

Talkitt

பேச்சுத்திறன் குறைந்தவர்களுக்கு இந்த ஆப் மிகவும் உதவும். இயல்பாகவே பேச்சுத்திறன் இல்லாவிட்டாலும் அவர்களால் ஓர் ஒலியை எழுப்ப முடியும். எடுத்துக்காட்டாக அவர்களுக்கு  உதவி தேவைப்பட்டாலோ, ஏதாவது ஒரு பொருள் தேவைப்பட்டாலோ அதற்கு வெவ்வேறு வகையில் குரல் எழுப்புவார்கள். அதை அவர்களோடு பழகுபவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆப்பின் மூலமாக அந்தக் குறிப்பிட்ட ஒலிக்கேற்ற சரியான சொல்லைப் பதிவுசெய்து விட்டால் அடுத்தமுறை அந்த ஒலி வெளிப்படும்போது இந்த ஆப் அதைப் புரிந்துகொண்டு சரியான தகவலைத் தருமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக பேச்சுத்திறன் குறைந்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

Avaz

ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கான ஆப் இது. இதில் தனித்தனியாக இருக்கும் சொற்களை ஒன்றுசேர்த்துச் சொற்றொடரை உருவாக்க முடியும். மேலும், அதை ஒலிக்கவைக்க முடியும். அனைத்து வார்த்தைகளும் படக்குறிப்புகளோடு இருப்பதால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் எளிதில் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக புதிய விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவும் முடியும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

Braille Edge 40

ஒரு சிறிய தட்டச்சுப் பலகை போன்று காணப்படும் இதை ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் இணைத்துப் பயன்படுத்தலாம். இந்த கேட்ஜெட் கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்காகப் பிரெய்லி முறையைப் பயன்படுத்தி இயங்குகிறது. இதன்மூலமாக பிரெய்லி வடிவத்தில் உள்ளிடப்படும் சொற்களைச் சாதாரண எழுத்துருக்களாக மாற்றி திரையில் காட்டுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

Liftware

நரம்பு பாதிப்பினால் ஏற்படும் பார்கின்சன் போன்ற நோய்களால் உடல் பாகங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கைகள் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் உணவைக் கைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஸ்பூன் மூலமாகவோ உட்கொள்வது என்பது கடினமான ஒன்று. அவர்களுக்காகவே வடிவமைக்கப் பட்டதுதான்  Liftware என்னும் கேட்ஜெட். கையை எப்படி அசைத்தாலும் இதில் உள்ள சென்சார்கள் ஸ்பூனை நிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, உணவை எடுத்துக் கீழே சிந்தாமல் உண்ண முடியும். இதை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். வெவ்வேறு வடிவத்தாலான ஸ்பூனைப் பொருத்திக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

UNI

டேப்லெட் போல இருக்கும் இதை, கேட்கும் திறன் குறைந்தவர்களும் பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களும் பயன்படுத்த முடியும். சைகை மொழியில் பெரும்பாலும் பயன்படும் கைகளின் அசைவுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கு முன்பாக சைகை மொழியில் பேசினால் அதை மொழிபெயர்த்து ஒலிக்கும். அதேபோல் மற்றவர்கள் கூறுவதை  எழுத்துகளாக மாற்றித் திரையில் காண்பிக்கும்.இதன்மூலம் மற்றவர்களிடம் தொடர்புகொள்வது எளிதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஆப்ஸ்

Tobii Dynavox PC Eye Explore

இந்தக் கருவியின் மூலம் கண் அசைவைப் பயன்படுத்தி கணினியில் பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்கான மென்பொருளை இன்ஸ்டால் செய்து சாதாரண கணினியில் இதை இணைத்துப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியை கணினியின் முன்னால் பொருத்தினால் நமது கண் அசைவுகளைப் புரிந்துகொண்டு செயல்படும்.