Published:Updated:

நாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2

நாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2
நாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2

ஃபிங்கர் பிரின்ட் சென்சாரோடு இரண்டாவது இன்னிங்ஸிற்குத் தயாராகிவிட்டது ரியல்மீ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

8K - ₹ 15K வரையிலான பட்ஜெட் செக்மென்டில், ரெட்மி பக்கம் மட்டுமே வீசிக்கொண்டிருந்த அதிர்ஷ்டக் காற்றை, கொஞ்சம் திசை மாற்றிய பெருமை ஓப்போவையே சேரும். முதலில் கேமரா எக்ஸ்பெர்ட்டாக மிட்ரேஞ்ச் மார்க்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்நிறுவனம், ரெட்மிக்குப் போட்டியாக பட்ஜெட் செக்மென்டில் களமிறக்கியதுதான் ரியல்மீ மொபைல். முதலில் ரெட்மிக்கு மற்றுமொரு போட்டி மொபைலாக மட்டுமே இதை நினைத்தவர்கள், 4 GB ரேம் + 64 GB மெமரி வேரியன்ட்டே 10,990 ரூபாய்தான் என்றவுடன்தான் இதைக் கவனிக்கவே ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நல்ல ஸ்பெக்ஸ், நல்ல பெர்பார்மன்ஸ், ஓப்போவின் கேமரா, ஃபேஸ் அன்லாக் என நல்ல ரிவ்யூக்கள் வரவே ரெட்மியைப் போலவே, ரியல்மீக்கும் வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்தனர். விளைவு, அமேசானில் அதிகம் விற்கும் மொபைல்களில் ஒன்றாகவிட்டது ரியல்மீ 1. 

ரியல்மீயில் மூன்று வேரியன்ட்களை வெளியிட்டிருந்தது ஓப்போ. தற்போது, 4 GB + 64 GB, 6 GB + 128 GB என இரண்டு வேரியன்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டுமே பெர்பார்மன்ஸில் ஓகேதான் என்றாலும், இதிலிருந்த ஒரே குறை, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இல்லை என்பதே. முதலில் விலை அதிகமான மொபைல்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, பின்னர் ஷியோமியின் பட்ஜெட் போன்களிலும் இடம்பிடிக்க, அதைத் தொடர்ந்து பலரது விருப்பமான ஆப்ஷனாக மாறிவிட்டது. இந்நிலையில் 11,000 ரூபாய்க்கு வரும் ஒரு மொபைலில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இல்லை என்பது பலருக்கும் மைனஸாகவே இருந்தது. மேலும், இதற்கு பதிலாக ரியல்மீ கூடுதலாகக் கொடுத்திருந்த ஃபேஸ் அன்லாக்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனாலேயே ரியல்மீ 1 பலரும் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து ரெட்மிக்கே டிக் அடித்தனர். இந்நிலையில் இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தற்போது மீண்டும் ஒரு இன்னிங்க்ஸிற்குத் தயாராகிவருகிறது ரியல்மீ. அடுத்த சில நாள்களில் வெளிவரவிருக்கும் ரியல்மீ 2 மொபைல் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரோடு வருகிறது. 

ரியல்மீ 2 விரைவில் வருகிறது என்பதை சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தார் ரியல்மீ இந்தியாவின் சி.இ.ஓ மாதவ் சேத். இது தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த ரியல்மீ வாடிக்கையாளர்களுக்குச் சின்ன டீசரை மட்டும் வெளியிட்டு, பின்னர் நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். ரியல்மீ இந்தியா இணையதளத்தில் இந்த மொபைலின் விவரங்களும், படங்களும் திடீரென வெளியாகின. பின்னர் அடுத்த சில நிமிடங்களிலேயே அவை அதிலிருந்து தூக்கப்பட்டுவிட்டன. ஆனால், ரியல்மீ 2-வில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன என்பதை அதைவைத்தே நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ரியல்மீ 1-ல் ஒரே ஒரு ரியர் கேமராவை மட்டுமே கொடுத்திருந்த ஓப்போ, இந்தமுறை டூயல் கேமரா செட்டப்பைக் கொடுத்திருக்கிறது. மேலும், எதிர்பார்த்தபடியே மொபைலின் பின்பக்கம் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரையும் கொடுத்திருக்கிறது. 

இவை தவிர ரியல்மீ 2-வின் இன்னொரு சிறப்பு புதிய நாட்ச் டிசைன். கடந்த வருடம் ஆப்பிள் ஐபோன் X-ல் எப்போது நாட்ச் டிசைனை அறிமுகம் செய்ததோ, அன்றிலிருந்து அதனை வெவ்வேறு மாதிரியாக ஆண்ட்ராய்டு போனில் கொண்டு வருவதே பெரும்பாலான மொபைல் நிறுவனங்களுக்கு வழக்கமாகிவிட்டது. வழக்கமான டிஸ்ப்ளே டிசைனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு ஐபோனின் நாட்ச் டிசைன், புதிய விஷூவல் ட்ரீட் தந்ததுதான் அதற்கு காரணம். இப்படி நாட்ச் டிசைனை காப்பி அடிப்பதை ஏற்கெனவே ஓப்போவும் F7-ல் செய்திருக்கிறது. தற்போது அந்தப் பழக்கத்தை ரியல்மீயிலும் தொடர்கிறது அந்நிறுவனம். இருந்தாலும் பட்ஜெட் செக்மென்டில் நாட்ச் டிசைனுடன் வரும் மொபைல் என்பதால், வாடிக்கையாளர்கள் ஹார்ட்டின் போடவும் வாய்ப்பிருக்கிறது. ரியல்மீ 1-ன் மிகப்பெரிய ப்ளஸ் அதன் கேமரா திறனும், 3410 mAh பேட்டரியும்தான். அதே கூட்டணி இதிலும் தொடரலாம். எப்படியும் 15,000 ரூபாய்க்குள்தான் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் வெளியிடப்படும் என்ற விவரங்கள் இன்னும் வரவில்லை. இந்த மாத இறுதிக்குள் அறிவிப்புகள் வரலாம். ரியல்மீ 1 போலவே, இந்த மாடலும் ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ போன்களுக்கு சந்தையில் சவாலாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு