
கேட்ஜெட்ஸ்
செல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள். அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே...

கேமரா FV-5 லைட் (Camera FV-5 Lite)
நல்ல கேமரா மொபைல் உள்ள அனைவருக்கும் ஏற்ற கேமரா ஆப் இது. மொபைலில் ஏற்கெனவே இருக்கும் கேமரா ஆப்பிற்குப் பதில் இதன்மூலம் போட்டோ எடுத்தால், நாம் நினைப்பதுபோலவே கேமராவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கேற்றபடி கன்ட்ரோல் ஆப்ஷன்கள் நிறைய இருக்கின்றன. சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி அவற்றைப் படித்துவிட்டால் போதும், நம் மொபைல் போட்டோகிராஃபியை இன்னும் மெருகூட்டலாம்.

அதிக நேரம் இதைப் பயன்படுத்தினால் மொபைல் சூடாகிவிடுவது மைனஸ். மேலும் இதில் வீடியோ எடுக்க முடியாது. அதற்கு மொபைல் கேமரா ஆப்பைத்தான் பயன்படுத்த வேண்டும்.
அதிக திறன்கொண்ட கேமராக்கள் கொண்ட மொபைல் போன்கள் என்றால் மட்டுமே இந்த ஆப் தேவைப்படும். இல்லையெனில் சாதாரண கேமரா ஆப்களையே பயன்படுத்தலாம். பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.
https://play.google.com/store/apps/details?id=com.flavionet.android.camera.lite&hl=en

ஓப்பன் கேமரா (open camera)
மிகவும் எளிமையான, தெளிவான கேமரா ஆப் இந்த ஓப்பன் கேமரா. இதனைத் திறந்ததும் தானாகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்கிறது. க்ளிக் செய்வது மட்டும்தான் நம் பணி. இதுதவிர தரமான படங்களை, விரும்பியபடி எடுப்பதற்காக எளிமையான டூல்ஸ்களையும் கொடுத்திருக்கிறது ஓப்பன் கேமரா.
போட்டோக்களுக்கு மட்டுமின்றி வீடியோக்களுக்கும் இதே வசதிகளைத் தருவது சிறப்பு.
சின்னச் சின்ன வசதிகள் இருந்தாலும், ஃபோகஸ் அட்ஜஸ்ட்மென்ட், ஷட்டர் ஸ்பீட் போன்ற ஆப்ஷன்கள் எல்லாம் இல்லாதது இதன் குறை.
இவை தவிர செல்ஃபி ஸ்பெஷல் ஆப்ஸ், வீடியோ ஷூட்டிங் ஆப்ஸ் என விதவிதமான இலவச ஆப்கள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடைக்கின்றன. தேவைப்பட்டால் மொபைலின் கேமரா ஆப்போடு சேர்த்து அவற்றையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=net.sourceforge.opencamera&hl=en
- ஞா.சுதாகர்