Published:Updated:

5 நிமிடத்தில் 200 கோடி அள்ளிய மொபைலில் ஹெச்.டி வீடியோ வராதாம்... #POCOF1 ல் என்ன பிரச்னை?

5 நிமிடத்தில் 200 கோடி அள்ளிய மொபைலில் ஹெச்.டி வீடியோ வராதாம்... #POCOF1 ல் என்ன பிரச்னை?
5 நிமிடத்தில் 200 கோடி அள்ளிய மொபைலில் ஹெச்.டி வீடியோ வராதாம்... #POCOF1 ல் என்ன பிரச்னை?

அந்தச் செய்தி வெளியான பிறகு போகோ F1 ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்கலாம் என நினைத்திருந்தவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

தைத் தொட்டாலும் ஹிட்டடிக்கும் ஷியோமியின் சமீபத்திய வரவு POCOF1. ஒன் பிளஸ் 6ல் இருக்கும் அதே வசதிகளை அதை விடப் பத்தாயிரம் ரூபாய் குறைவாகக் கொடுத்தால் கேட்கவா வேண்டும்? வழக்கம்போல ஒரு ஹிட்டை பார்சல் பண்ணியிருக்கிறது ஷியோமி.  ஆகஸ்ட் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது POCO F1. இப்படி டாப் கியரில் போய்க்கொண்டிருந்த போகோவை ஒரு செய்தி குறுக்கே வந்து அதன் வேகத்தைக் குறைந்திருக்கிறது. அந்தச் செய்தி வெளியான பிறகு போகோ F1 ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்கலாம் என நினைத்திருந்தவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

போகோ F1 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்னை ?

அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஆப்களில் HD தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் போகோ F1 ஸ்மார்ட்போன் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் வெளியானவுடன் அது போகோ-வைவிட வைரலாக இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. HD தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியாததற்கு காரணம் அதில் Widevine L1 DRM இல்லை என்பதுதான். கேமரா, டிசைன், புராஸசர் என பல விஷயங்களில் பார்த்துப்பார்த்து போகோ F1 ஸ்மார்ட்போனை உருவாக்கிய ஷியோமி ஒரு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டது. DRM (Digital rights management) எனப்படுவது ஒரு டிஜிட்டல் சாதனத்தில் இருக்கும் விஷயங்களின் காப்புரிமை மேலாண்மை தொடர்பாக பயன்படுத்தப்படுவது. DRM என்பது பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதுதான். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பல DRM-களில் வைட்வைன் (Widevine) என்பதும் ஒன்று. ஸ்மார்ட்போனில் இருக்கும் DRM அதில் இருக்கும் மல்ட்டிமீடியா தொடர்பான காப்புரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. வைட்வைன் கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதால் குரோம் வெப் பிரவுசரிலும், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைப் பயன்படுத்தும் சாதனங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. தவிர இந்தச் சேவையை கூகுள் இலவசமாகவே தருகிறது. அப்படி இருக்கும்போது எதனால் ஷியோமி நிறுவனம் போகோ F1 ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்துவதற்கு மறந்தது என்பதுதான் தெரியவில்லை.

Photo Courtesy- androidPure

பொதுவாக வைட்வைனில் L1, L2, மற்றும் L3 என மூன்று வெர்ஷன்கள் இருக்கின்றன. ஒரு ஸ்மார்ட்போனில் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்களில் HD அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு L1 சர்டிஃபிகேட் இருப்பது அவசியம். போகோ F1 ஸ்மார்ட்போனில் இருப்பது வைட்வைன் L3 என்பதால் அதிகபட்சமாக 540p ரெசொல்யூஷனில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்க முடியும். அது மட்டுமின்றி சில ஹைஎன்ட் கேம்களை இன்ஸ்டால் செய்வதில் சிக்கல் இருக்கலாம். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும் கூட ஸ்மார்ட்போனை வாங்குவதற்குச் சிலருக்குத் தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தவிர இப்பொழுது இந்தியாவில் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை பிரபலமாகி வருகின்றன, மொபைலில் அதைப் பலரும் கணிசமான அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.  விலை அதிகமாகக் கொடுத்து வாங்கும்போது இந்தச் சிறிய சிக்கல் இருப்பதைக் கூட யாரும் விரும்ப மாட்டார்கள்.

இதை எப்படிச் சரி செய்யப்போகிறது ஷியோமி?

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சிறிய பிழைகளை அப்டேட் மூலமாகச் சரி செய்து விடுவார்கள். ஆனால், வைட்வைன் சிக்கலை அப்படிச் சரி செய்ய முடியாது.  ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிக்கல் ஏற்பட்டது. அவற்றிலும் போகோ F1 ஸ்மார்ட்போனைப் போலவே வைட்வைன் L3 சர்டிஃபிகேட்தான் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இதை OTA அப்டேட் மூலமாகச் சரி செய்ய முடியாது என்பதால் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பிப் பெற்று பிரச்னையைச் சரி செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். அதன் பிறகு வெளியான ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது. ஆனால் இது தொடர்பாக தற்பொழுது வரைக்கும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை ஷியோமி நிறுவனம். ஒரு வேளை இந்தச் சிக்கலை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றி முடிவெடுத்த பின்னர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும். பெரும்பாலும் இதில் ஒன்பிளஸ் பாணியையே ஷியோமியும் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.

போகோ F1 ஸ்மார்ட்போனை வாங்கலாமா ? வாங்கக்கூடாதா ?

இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன் அனைவருக்குமே இந்தக் கேள்வி தோன்றுவது இயல்புதான். வைட்வைனில் இருக்கும் இந்தச் சிக்கலால் ஸ்மார்ட்போனின் பெர்ஃபாமன்சில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற சில தேர்ட் பார்ட்டி ஆப்களில் HD தரத்தில் மட்டும் வீடியோக்கள் பார்ப்பதில் பிரச்னை வரக்கூடும். மற்றபடி ஸ்மார்ட்போனின் சேமித்து வைக்கப்பட்ட வீடியோக்களுக்கோ, யூடியூப் போன்றவற்றிற்கோ DRM அவசியமில்லை என்பதால், அவற்றில் HD மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடியும். அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றை சாதாரண தரத்தில் பார்ப்பேன் என்பவர்கள் தாராளமாக போகோ F1-னை வாங்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் HD தரத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்பவர்கள் இந்தச் சிக்கலை ஷியோமி எப்படித் தீர்க்கப்போகிறது என்பதைப் பார்த்து விட்டு வாங்கலாம். 

அடுத்த கட்டுரைக்கு