
கேட்ஜெட்ஸ்
எத்தனையோ இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் தற்போது வந்துவிட்டாலும், அலுவலகரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவது மின்னஞ்சல் சேவைதான். ஆனால், உலகளவில் இது கொஞ்சம் கொஞ்சமாக தற்போது குறைந்து வருகிறது. காரணம், மேனேஜ்மென்ட் அப்ளிகேஷன்கள். இவற்றின் வருகைக்குப்பின், முழுக்க முழுக்க அலுவலகத் தகவல் தொடர்புக்காக மட்டுமே இருந்த மின்னஞ்சல் சேவை, தற்போது வெறும் அடையாளமாக மட்டும் மாறிவிட்டது. சிறந்த இரண்டு மேனேஜ்மென்ட் ஆப்ஸ் பற்றி பார்ப்போம்.

ஸ்லாக் (Slack)
அலுவலகத்தின் நவீன டிஜிட்டல் மேனேஜர் என்றால் இந்த ஸ்லாக்தான். ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான பிரத்யேக அலுவலக மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும். இந்த மின்னஞ்சல்தான் இந்த ஆப்களுக்கான நுழைவுச்சீட்டு. இந்த மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு, ஒரு நிறுவனத்தில் இருக்கும் அனைத்து ஊழியர் களையும் இதில் இணைத்துவிடலாம்.

நிறுவனத்தில் இருக்கும் தனித்தனிப் பிரிவுகள், குழுக்கள், தனிநபர் என எப்படி வேண்டுமானாலும் இதில் பிரித்துக் கொள்ளலாம். செய்திகளைப் பகிர்ந்துகொள்ள, பணிகளை நிர்வகிக்க, பணிகளைத் திட்டமிட என அலுவலகத்தின் பெரும்பாலான பணிகளை இந்த ஸ்லாக் மூலமாகவே நிர்வகிக்க முடியும்.
ட்விட்டர், கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் என அலுவலகத்தில் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் சேவைகள், அதிலிருக்கும் கோப்புகள் அனைத்தையும் இதனுடன் இணைத்துக் கொள்ள முடியும். ஆப் மட்டுமின்றி, இணையத்திலும் பயன்படுத்தலாம். வண்ண மயமான வடிவமைப்பு, எளிதான செயல்பாடுகள் போன்றவை இதன் ப்ளஸ்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/1D3wU5s

அசானா (Asana)
அலுவலகத்தின் பணிகளை நிர்வகிக்க உதவும் பிக்பாஸ்தான் இந்த அசானா. ஸ்லாக் போலவே, இதிலும் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரி மூலம் பணியாளர்களை இணைத்துக்கொள்ள லாம். நிறுவனத்தின் பிரிவுகள், அணிகள் அடிப்படையில், பணியாளர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து இதில் நிர்வகிக்கலாம்.
பணியாளர்களின் பணி, அதற்கான காலக்கெடு போன்றவற்றை டாஸ்க்குகளாக இதில் கொடுக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட பணியாளர் எத்தனை டாஸ்க்குகளை முடித்திருக்கிறார், நிலுவையில் உள்ள டாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், குழு ரீதியான மதிப்பீடுகள் போன்றவற்றையும் இதன்மூலம் பார்க்கமுடியும். நிறுவனத்துக்குள்ளாகவே உரையாட, கோப்புகளைப் பகிர்ந்து கொள்ள, பணிகளைத் திட்டமிட வசதிகள் இருப்பதால், மற்ற ஆப்களுக்கான தேவையும் ஏற்படுவதில்லை. அசானாவை மின்னஞ்சலிலும் இணைத்துக் கொள்வதன் மூலம் நம் இன்பாக்ஸிலேயே அலுவலகப் பணிகளை நிர்வகிக்கலாம்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/1yi09Cr
-ஞா.சுதாகர்